உடல் எடையைக் குறைக்க உதவும் தினை பொங்கல் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Thinai Pongal Recipe In Tamil: காலையில் எழுந்ததும் என்ன டிபன் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு காலை வேளையில் நல்ல சத்தான உணவை செய்ய வேண்டியிருக்கும்.

அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது நல்லது. உங்கள் வீட்டிலும் சிறுதானியங்களை செய்வீர்களா? அதுவும் அதைக் கொண்டு கஞ்சி, உப்புமாவாகத் தான் செய்து கொடுத்துள்ளீர்களா? அப்படியானால் ஒருமுறை சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து கொடுங்கள்.

Thinai Pongal How To Make a Thinai Arisi Pongal Recipe

இந்த பொங்கல் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த தினை உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, இரத்த சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

உங்களுக்கு தினை பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* திணை - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர்
* நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (துருவியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* முழு மிளகு - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

தேங்காய் சட்னிக்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை -

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தினை மற்றும் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை கழுவி, 1 கப் நீரை ஊற்றி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, குக்கரில் ஊற வைத்த தினை மற்றும் பருப்பை நீருடன் சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு தேங்காய் சட்னிக்கு மிக்சர் ஜாரில் 1/2 கப் துருவிய தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, 1 பச்சை மிளகாய், உப்பு, சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/4 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 1 வரமிளகாய் சேர்த்து தாளித்து, தேங்காய் சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* குக்கரில் விசில் போனதும், குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய் , 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது, 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள், சிறிது முந்திரி, 1 டீஸ்பூன் மிளகு, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சுவையான தினை பொங்கல் தயார்.

குறிப்பு: பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சூடான நீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 1, 2025, 8:13 [IST]
Desktop Bottom Promotion