சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்...

Posted By:

Surakkai Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு மசாலா செய்யுங்கள். இந்த சுரைக்காய் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம், தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Surakkai Masala How To Make Bottle Gourd Masala Recipe

உங்களுக்கு இந்த சுரைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சுரைக்காய் - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* பூண்டு - 5-6 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 3
* மிளகு - 1/4
* பச்சை மிளகாய் - 3

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த சுரைக்காய்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* அரைத்து வைத்துள்ள பேஸ்ட்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தயிர் - 2 ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வதக்கிய சுரைக்காய்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் நறுக்கிய சுரைக்காயுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சுரைக்காயை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து கிளறி, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி மூடி வைத்து 3-4 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறி, வதக்கிய சுரைக்காயை சேர்த்து கிளறி மூடி வைத்து குறைவான தீயில் 4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சுரைக்காய் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 17, 2026, 22:50 [IST]
Desktop Bottom Promotion