முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Mullangi Kola Urundai Kuzhambu Recipe In Tamil: மதியம் எப்பவும் ஒரே மாதிரியான சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? ஒரு அசைவ சுவையில் ஒரு சைவ குழம்பு செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் முள்ளங்கியைக் கொண்டு கோலா உருண்டை குழம்பு செய்யுங்கள். இந்த முள்ளங்கி கோலா உருண்டை குழம்பை சுவைத்தால், அதில் முள்ளங்கியின் சுவையே தெரியாது. இதனால் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Mullangi Kola Urundai Kulambu How To Make Radish Kola Urundai Kuzhambu

உங்களுக்கு இந்த முள்ளங்கி கோலா உருண்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கோலா உருண்டைக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* முள்ளங்கி - 2
* இஞ்சி - 5 சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு..

* தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5-6
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

குழம்பிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* அரைத்த தேங்காய் விழுது
* கோலா உருண்டைகள்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து, அத்துடன் வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு முள்ளங்கியை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு துருவிக் கொள்ள வேண்டும். பின் முள்ளங்கியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து அகற்றிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் முள்ளங்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை பாத்திரத்தில் உள்ள அரைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, 1 கப் நீரை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் ஒரு கோலா உருண்டையை எடுத்து நீரில் கரைத்து ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கோலா உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து, 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, கோலா உருண்டைகளை கரண்டியின் பின்புறம் கொண்டு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 17, 2026, 13:30 [IST]
Desktop Bottom Promotion