சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க...

Posted By:

Sola Upma Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு சத்தான, அதே சமயம் வித்தியாசமான காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெள்ளை சோளம் உள்ளதா? அப்படியானால் அந்த வெள்ளை சோளத்தைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள்.

Sola Upma How To Make This Delicious And Healthy Breakfast Recipe

இந்த உப்புமா சுவையாக இருப்பதோடு, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கும் மிகவும் அற்புதமான காலை உணவாகும். முக்கியமாக இந்த உப்புமாவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், இதுவரை உப்புமா பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த சோள உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோள உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெள்ளை சோளம் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* வேக வைத்த பச்சை பட்டாணி - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேக வைத்த சோளம்
* எலுமிச்சை - 1/2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெள்ளை சோளத்தை எடுத்து, நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி, 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 10 மணிநேரம் கழித்து, ஊற வைத்த சோளத்தை கழுவி, குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் நறுக்கிய பீன்ஸ், கேரட், வேக வைத்த பச்சை பட்டாணியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்த சோளத்தை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பாதி எலுமிச்சையின் சாறு, துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சோள உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, July 11, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion