ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Javvarisi Dosa With Thakkali Chutney Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே சுவையில் தோசை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடிக்குற வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் ஜவ்வரிசியைக் கொண்டு தோசை சுட்டு, அத்துடன் தக்காளி சட்னியை செய்து சாப்பிடுங்கள். இந்த ஜவ்வரிசி தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த டிபன் காம்போவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Sabudana Dosa With Tomato Chutney How To Make This Javvarisi Dosa With Thakkali Chutney Recipe

உங்களுக்கு ஜவ்வரிசி தோசை மற்றும் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசைக்கு...

* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* உளுந்து - 1/2 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* பச்சரிசி - 1 கப்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு

சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 3 கைப்பிடி
* வரமிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 1
* பெரிய தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்துக் கொண்டு, அதை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் பச்சரிசியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மாவை ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கைகளால் கலந்து, மூடி வைத்து 6-8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சட்னிக்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது புளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தக்காளி சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, மொறுமொறுவென்று வந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே மடித்து எடுத்தால், ஜவ்வரிசி தோசை தயார்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

ஜவ்வரிசி மற்றும் பச்சரிசி இரண்டுமே அதிக Glycemic Index (GI) கொண்டவை. அதாவது, இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமா உயர்த்தும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த தோசையின் அளவைக் குறைத்துக்கொண்டு, இந்த சட்னியை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion