அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Arisi Upma Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை என ஒரே மாதிரியான டிபனை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்யுங்கள். அதுவும் ரவையை கொண்டு உப்புமா செய்யாமல் அரிசியைக் கொண்டு உப்புமா செய்யுங்கள். இப்படி அரிசி கொண்டு செய்யப்படும் உப்புமா நன்கு உதிரி உதிரியாகவும் மென்மையாகவும், ருசியாகவும் இருப்பதால், உப்புமா பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த அரிசி உப்புமா 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த உப்புமாவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்யுமாறு கேட்பார்கள்.

Rice Upma How To Make Arisi Upma Recipe

உங்களுக்கு இந்த அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* பச்சரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 ஸ்பூன்

உப்புமா தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூடன
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த அரிசி ரவை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்துக் கொண்டு, அத்துடன் துவரம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து, 2 ஸ்பூன் நீரை தெளித்து கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பொருட்களை சேர்த்து, ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்து, மாவை தனியாக எடுத்துவிட்டு, மேலே உள்ள குருணைகளை மட்டும் உப்புமாவிற்கு பயன்படுத்த வேண்டும். மாவுடன் சேர்த்து உப்புமா செய்தால், உப்புமா குலைந்துவிடும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த அரிசி குருணையை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* அப்படி வேக வைக்கும் போது அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறக்கும் போது நீர் இன்னும் இருப்பது போன்று இருந்தால், மீண்டும் மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயைத் தூவி நன்கு கிளறி ஓரளவு குளிர வைத்து பின் பரிமாறினால், சுவையான அரிசி உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 23, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion