ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Rava Bun Dosa With Peanut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய மாவு இல்லையா? சிம்பிளாக அதே சமயம் சுவையான ஒரு டிபனை செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் ரவையும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு உடனடி பன் தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். இந்த டிபன் காம்போவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டைப் பெறலாம்.

Rava Bun Dosa With Peanut Chutney How To Make This Heathly Breakfast Recipe

உங்களுக்கு இந்த ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பன் தோசை மற்றும் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* ரவா - 1 கப்
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

பிற பொருட்கள்...

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் ரவையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு சட்னி அரைப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை கீறி சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு ஊற வைத்த மாவை நன்கு கலந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய கேரட், சீரகம், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து, மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் 1 கரண்டி மாவை ஊற்றி மூடி வைத்து 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து பன் தோசையை திருப்பிப் போட்டு, மீண்டும் மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா பன் தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 4, 2026, 6:53 [IST]
Desktop Bottom Promotion