Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது?

Dhanteras 2026: இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடப்படுகிறது. அதுவும் வட இந்தியாவில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் இந்த தீபாவளி பண்டிகையின் முதல் தினம் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ். இந்த தந்தேராஸ் நாளானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Dhanteras 2026 Date Shubh Muhurt And What to Buy On The Day Of Dhanteras

இந்நாளில் அட்சய திருதியை தினத்தைப் போன்றே தங்கம் வாங்குவது, வீட்டிற்கு வேண்டிய புதிய பொருட்களை வாங்குவது போன்ற பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்து நம்பிக்கைகளின் படி, இந்த நாளில் தங்கம், வெள்ளி மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இப்போது தந்தேராஸ் என்றால் என்ன, இந்நாளில் எப்போது பொருட்களை வாங்கலாம் மற்றும் இந்த நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது என்பது குறித்து காண்போம்.

தந்தேராஸ் என்றால் என்ன?

தந்தேராஸ் என்பது தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் வரக்கூடிய திரயோதசி திதியில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த தந்தேராஸை தன திரயோதசி என்றும் அழைப்பர். இதில் தனம் என்பது செல்வத்தையும், திரயோதசி என்பது 13 ஆவது திதியையும் குறிக்கிறது. இந்நாளில் தான் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரி, மகா விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்தார்.

மேலும் இந்நாளில் வீட்டில் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை பெருக வேண்டும் என்பதற்காக மக்கள் செல்வத்தின் அதிபதியான குபேரன் மற்றும் செல்வத்தை வழங்கும் தெய்வமான லட்சுமி தேவி ஆகியோரையும் வழிபாடு செய்து வணங்குவார்கள். அதுமட்டுமின்றி, இந்நாளில் யமனின் பெயரில் அகல்விளக்கு ஏற்றுவது, அதாவது யம தீபம் ஏற்றுவது, பல இந்து வீடுகளில் பின்பற்றப்படும் மற்றொரு முக்கியமான பாரம்பரியமாகும்.

தந்தேராஸ் நாளில் வாங்க வேண்டியவைகள்

1. தந்தேராஸ் நாளில் தங்கமும், வெள்ளியும் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் இவற்றை வாங்கும் போது, அது வீட்டில் பெருகுவதாக நம்பப்படுகிறது.

2. லட்சுமி மற்றும் விநாயகரின் புதிய சிலைகள் அல்லது போட்டோக்களை வாங்குவது நல்லது. ஏனெனில் லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக வணங்கப்படுகிறார், அதே சமயம் விநாயகப் பெருமான் தடைகளை நீக்குபவராகவும் ஞானத்தின் சின்னமாகவும் போற்றப்படுகிறார்.

3. என்ன தான் துடைப்பம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாக இருந்தாலும், அது லட்சுமி தேவி குடியிருக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இந்த துடைப்பத்தை தந்தேராஸ் நாளில் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

4. தந்தேராஸ் நாளன்று வீட்டின் சமையலறைக்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பாத்திரங்கள் பித்தளை, செம்பு மற்றும் எஃகு பாத்திரங்களாக இருப்பது மிகவும் நல்லது.

5. முக்கியமான தந்தேராஸ் நாளில் தீபாவளிக்கு விளக்கேற்ற தேவையான மண் அகல் விளக்குகளை வாங்கலாம். அதுமட்டுமின்றி பூஜைக்கு தேவையான திரி, ஊதுபத்தி, பூக்கள், அரிசி போன்ற அத்தியாவசிய பூஜை பொருட்களை வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

தந்தேராஸ் 2026 தேதி மற்றும் சுப முகூர்த்தம்

இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் தந்தேராஸ் நவம்பர் 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதுவும் இந்த திதி நவம்பர் 6 ஆம் தேதி காலை சுமார் 9:30 மணிக்குத் தொடங்கி, நவம்பர் 7 ஆம் தேதி காலை சுமார் 11:45 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில், மாலை 5:49 மணி முதல் இரவு 8:23 மணி வரை பிரதோஷ காலம் அனுசரிக்கப்படும். இந்த நேரத்தில், தன்வந்தரி பகவானையும், லட்சுமி தேவியையும் வழிபடலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, November 2, 2026, 20:23 [IST]
Desktop Bottom Promotion