காலையில் தோசை சுட மாவு இல்லையா? அப்ப பொட்டுக்கடலை வெச்சு.. இந்த மாதிரி தோசை சுடுங்க...

Posted By:

Pottukadalai Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட மாவு தீர்ந்துவிட்டதா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காலையில் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் கவலை வேண்டாம்.

வீட்டில் பொட்டுக்கடலை இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் மொறுமொறுவென்று தோசை சுடலாம். இந்த தோசை அப்படியே ரவா தோசை போன்றே இருக்கும். இந்த தோசைக்கு பச்ச கார சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இந்த டிபனை காலையில் ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Pottukadalai Dosa How To Make a Pottukadalai Dosa Recipe

உங்களுக்கு பொட்டுக்கடலை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொட்டுக்கடலை - 50 கிராம்
* ரவை - 50 கிராம்
* வரமிளகாய் - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

சட்னிக்கு...

* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 1
* பூண்டு - 2 பல்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் 50 கிராம் பொட்டுக்கடலை, 50 கிராம் ரவை, 4 வரமிளகாய், சிறிய துண்டு இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ரவா தோசை போன்று ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால், சுவையான பொட்டுக்கடலை தோசை தயார்.
* அடுத்து மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு பற்கள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பச்ச கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 15, 2025, 7:05 [IST]
Desktop Bottom Promotion