பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..

Posted By:

Pachai Payaru Idli With Ulunthu Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? எப்பவும் ப்ளைன் இட்லியை தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை புரோட்டீன் அதிகம் நிறைந்த பச்சை பயறைக் கொண்டு இட்லி செய்யுங்கள். இந்த இட்லி சுவையாகவும், பஞ்சு போன்று மென்மையாகவும் இருப்பதோடு, மிகவும் சத்தானதும் கூட. இந்த இட்லிக்கு உளுந்து சட்னி பொருத்தமாக இருக்கும். இந்த டிபன் காம்போவை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி இந்த டிபனை செய்வீர்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

Pachai Payaru Idli With Ulunthu Chutney How To Make Green Gram Idli With Urad Dal Chutney

உங்களுக்கு இந்த பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு இட்லி மற்றும் உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு இட்லிக்கு..

* பச்சை பயறு - 1 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

உளுந்து சட்னிக்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 100 கிராம்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த சட்னி

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சை பயறை எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் இட்லி அரிசியை எடுத்துக் கொண்டு, அதையும் நீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு உளுத்தம் பருப்பை நீரில் கழுவி விட்டு, பின் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அனைத்து பொருட்களும் ஊறிய பின்பு, மிக்சர் ஜாரில் முதலில் உளுத்தம் பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் அரிசியை சேர்த்து அரைத்துவிட்டு, அதை உளுத்தம் பருப்பு மாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் பச்சை பயறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த 3 மாவையும் ஒன்றாக கலந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, மிளகாயுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த எண்ணெயில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, அனைத்து பொருட்களையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான உளுந்து சட்னி தயார்.
* இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, குழிகளில் மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 8-10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பச்சை பயறு இட்லி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 9, 2026, 7:15 [IST]
Desktop Bottom Promotion