பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!

Ovarian Cancer Awareness Month: புற்றுநோய் மிகவும் கொடிய நோய் என்பதை அனைவரும் அறிவோம். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இந்தியாவில் கருப்பை வாய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு அடுத்தபடியாக, சினைப்பை புற்றுநோய் மூன்றாவது மிகவும் பொதுவான பெண்களைத் தாக்கும் புற்றுநோயாக உள்ளது. இந்த வகை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சினைப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

Ovarian Cancer Awareness Month Doctor Explains Symptoms Causes amp amp Prevention

அந்த வகையில் இந்த சினைப்பை புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, காரணங்கள், எவ்வாறு கண்டறிவது, சிகிச்சை முறைகள் போன்றவற்றைக் குறித்து சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மருத்துவரான டாக்டர். விமலாதித்தன் என்.எஸ். அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது, "சினைப்பை புற்றுநோயை (Ovarian Cancer) ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சவாலாக இருக்கலாம். இதற்குக் காரணம், அதன் ஆரம்ப அறிகுறிகள் பல நேரங்களில் தெளிவாக இல்லாமல், சாதாரண செரிமானப் பிரச்சினைகள் (Digestive Problems) அல்லது மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் (Menstrual Problems) போன்றவற்றுடன் ஒத்திருக்கலாம்.

இந்த நோய் கருப்பையின் சினைப்பையில் (Ovary) உருவாகிறது. அதே நேரத்தில், பாரம்பரியமாக சினைப்பை புற்றுநோயாக வகைப்படுத்தப்படும் சில புற்றுநோய்கள் கருமுட்டைக் குழாயில் (Fallopian Tube) அல்லது அதற்கு அருகிலுள்ள திசுக்களில் (Tissues) இருந்தும் தொடங்கலாம்.

ஆரம்ப கட்டத்தில் சினைப்பை புற்றுநோய் மிகக் குறைவான அறிகுறிகளையே ஏற்படுத்தலாம் அல்லது எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, உடலில் ஏற்படும் புதிய மற்றும் தொடர்ந்து நீடிக்கும் மாற்றங்களை கவனிப்பது மிகவும் முக்கியம்" என்று டாக்டர் கூறினார்.

Ovarian Cancer Awareness Month Doctor Explains Symptoms Causes amp amp Prevention

சினைப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

* தொடர்ந்து இருக்கும் வயிறு உப்புசம்
* வயிற்றுப் பகுதியில் அல்லது இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம்
* சிறிதளவு உணவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு
* மலச்சிக்கல்
* அதிக வாயுத்தொல்லை
* அடிக்கடி அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை

இந்த அறிகுறிகள் புற்றுநோய் அல்லாத பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் புதிதாக தோன்றினாலோ, தொடர்ந்து நீடித்தாலோ அல்லது நாளுக்கு நாள் அதிகரித்தாலோ, அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது என்று டாக்டர். விமலாதித்தன் கூறினார்.

சினைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

"சினைப்பை புற்றுநோய்க்கு ஒரே ஒரு காரணம் கிடையாது. வயது அதிகரிப்பது, குடும்பத்தில் சினைப்பை புற்றுநோய் இருந்திருப்பது, BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்கள், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் சில பிற காரணிகள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். ஆனால், ஒருவரிடம் இந்த ஆபத்து காரணிகள் இருப்பதால் அவருக்கு நிச்சயமாக சினைப்பை புற்றுநோய் ஏற்படும் என்று அர்த்தமில்லை." என்று டாக்டர் கூறினார்.

சினைப்பை புற்றுநோயை எவ்வாறு கண்டறியப்படுகிறது?

"சராசரி ஆபத்து உள்ள பெண்களுக்கு சினைப்பை புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் வகையில் நிரூபிக்கப்பட்ட வழக்கமான ஸ்க்ரீனிங் பரிசோதனை (Routine Screening Test) தற்போது இல்லை.

அறிகுறிகள் அல்லது ஒருவரின் தனிப்பட்ட ஆபத்து நிலை குறித்து மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்ட் (Transvaginal Ultrasound) மற்றும் CA-125 போன்ற இரத்தப் பரிசோதனைகள் (Blood Test) பயன்படுத்தப்படலாம்.

ஆனால், இவை வழக்கமான ஸ்க்ரீனிங் பரிசோதனைகளாக கருதப்படக்கூடாது. இந்த பரிசோதனைகள் மூலம் கருப்பை சினைப்பை புற்றுநோய் இல்லை என்று உறுதியாகக் கூறவும் முடியாது" என்று டாக்டர் கூறினார்.

சினைப்பை புற்றுநோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

"சிகிச்சை என்பது புற்றுநோயின் வகை (Type) மற்றும் அது எந்த நிலையில் உள்ளது (Stage) என்பதன் அடிப்படையில் மாறுபடும். அறுவை சிகிச்சை (Surgery) மற்றும் கீமோதெரபி (Chemotherapy) ஆகியவை முக்கியமான சிகிச்சை முறைகளாக உள்ளன. சில நோயாளிகளுக்கு புற்றுநோயின் தன்மை மற்றும் மரபணு/மூலக்கூறு பண்புகளின் (Molecular Characteristics) அடிப்படையில் இலக்கு சிகிச்சை (Targeted Therapy) மற்றும் பிற சிறப்பு சிகிச்சைகளும் பரிசீலிக்கப்படலாம்" என்று டாக்டர் கூறினார்.

சினைப்பை புற்றுநோயைத் தடுக்க முடியுமா?

சினைப்பை புற்றுநோயை முழுமையாகத் தடுக்கக்கூடிய உறுதியான வழிமுறை எதுவும் இல்லை. இருப்பினும், குடும்பத்தில் சினைப்பை அல்லது மார்பகப் புற்றுநோய் இருந்த பெண்கள், தங்களுடைய தனிப்பட்ட ஆபத்து குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப மருத்துவ வரலாற்றைப் பொறுத்து, மரபணு ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை பரிந்துரைக்கப்படலாம். மரபணு ரீதியாக மிகவும் அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அறுவை சிகிச்சை குறித்தும் மருத்துவருடன் ஆலோசிக்கலாம்.

மொத்தத்தில், பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, வழக்கத்திற்கு மாறான அல்லது தொடர்ந்து இருக்கும் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகளுக்கான காரணத்தை சரியான நேரத்தில் கண்டறிவதும், புற்றுநோய் இருந்தால் உரிய சிகிச்சையைத் தாமதமின்றி தொடங்குவதும் முக்கியமானதாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, September 8, 2026, 14:00 [IST]
Desktop Bottom Promotion