சப்பாத்திக்கு இப்படி காளான் மசாலா செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Mushroom Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்தியை செய்யும் போதெல்லாம், அதற்கான சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது பெரிய வேலையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காளான் பிடிக்குமா? அப்படியானால் அந்த காளானை வாங்கி, ஒரு மசாலாவை அரைத்து ருசியான காளான் மசாலாவை செய்யுங்கள்.

இந்த காளான் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இந்த சுவையில் காளான் மசாலாவை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் 2 சப்பாத்தியை அதிகமாக சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி இந்த காளான் மசாலாவையும் செய்து கொடுக்க சொல்வார்கள்.

Mushroom Masala How To Make Creamy Mushroom Masala Recipe

உங்களுக்கு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4-5 பல்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 6
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரக தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காளான் - 300 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் முந்திரியை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து, தக்காளியை நன்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி சேர்த்து கிளறி, மூடி வைத்து, நன்கு எண்ணெய் பிரிய வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காளான் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, February 27, 2026, 15:35 [IST]
Desktop Bottom Promotion