முருங்கைக்கீரையை இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Murungai Keerai Dal Recipe In Tamil: வாரம் ஒருமுறையாவது கீரையை உணவில் சேர்த்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரை செய்தாலே சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? கீரைகளில் முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. அதே சமயம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியதும் கூட.

பொதுவாக முருங்கைக்கீரையை கூட்டு, பொரியல், சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் அந்த முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து தால் செய்யுங்கள். இப்படி செய்து, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் முருங்கைக்கீரையை செய்தால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Murungai Keerai Dal How To Make a Drumstick Leaves Dal Recipe

உங்களுக்கு முருங்கைக்கீரை தால் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 100 கிராம்
* பூண்டு - 10
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* வரமிளகாய் - 5
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் 10 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை தால் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 4, 2025, 14:59 [IST]
Desktop Bottom Promotion