மதியம் லன்ச்பாக்ஸ்-க்கு பன்னீர் வெச்சு இந்த சூப்பர் ரைஸ் செய்யுங்க.. டிபன் பாக்ஸ் காலியா தான் வரும்..

Posted By:

Lunchbox Recipe Paneer Biryani Recipe In Tamil: மதியம் உங்கள் பிள்ளைக்கு என்ன சமையல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே மாதிரியான சாதத்தை செய்து கொடுத்து போரடித்துவிட்டதா? வரவர உங்கள் பிள்ளைகள் நீங்கள் செய்து கொடுக்கும் சாதத்தை முழுமையாக சாப்பிடாமல் வருகிறார்களா?

அப்படியானால் ஒருமுறை வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு பிரியாணி செய்யுங்கள். இந்த பன்னீர் பிரியாணி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும். முக்கியமாக இது காலையில் வேகமாக செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

Lunchbox Recipe Paneer Biryani How To Make a Paneer Biryani Recipe

உங்களுக்கு பன்னீர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசுமதி அரிசி - 1 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* புளிப்பில்லாத தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* எண்ணெய் - சிறிது
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரம்/வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் புளிப்பில்லாத தயிரை சேர்த்து கிளறி, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, அரிசியை மட்டும் சேர்க்க வேண்டும்.
* அரிசியை சேர்த்ததும் அதிகமாக கிளறி விட வேண்டாம். பின் அரிசி உடைந்துவிடும். எனவே அரிசி சேர்த்ததும் மெதுவாக ஒருமுறை கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பேனை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சாதம் வெந்துவிட்டதா என்று பார்த்து, சாதம் வெந்துவிட்டால், அதன் மேல் பன்னீர் துண்டுகளை பரப்பி வைத்து, மூடி வைத்து, தம் போட வேண்டும். அதாவது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் நன்கு சூடானதும், இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து, 8 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.

Image Courtesy: Apoorvaa's Virundu

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 10, 2024, 7:16 [IST]
Desktop Bottom Promotion