மதியம் கோவைக்காயை வெச்சு.. இப்படி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பே தோத்துப்போயிடும்..

Posted By:

Kovaikkai Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் ஒரே காய்கறிகளைக் கொண்டு ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் இதுவரை செய்திராத ஒரு குழம்பை சாதத்திற்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா?

உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? இதுவரை கோவைக்காய் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த கோவைக்காயைக் கொண்டு குழம்பு செய்தால், மீன் குழம்பே தோற்றுப்போகும் அளவில் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.

Kovaikkai Kuzhambu How To Make a Kovaikkai Kulambu Recipe

முக்கியமாக இந்த கோவைக்காய் குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். குறிப்பாக கோவைக்காய் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கோவைக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* கோவைக்காய் - 1/4 கிலோ (நீளவாக்கில் வெட்டியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்)

அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 2-4
* சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தேங்காய் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கோவைக்காயை நீரில் அலசி, அதன் இருமுனைகளையும் நீக்கிவிட்டு, அவற்றை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் புளியை நீரில் ஊற வைத்து, அவற்றை பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, கோவைக்காயை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை, வெந்து கொண்டிருக்கும் கோவைக்காயுடன் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து, உப்பு சுவை பார்த்து கிளறி மூடி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் கிளறி, தாளித்ததை கோவைக்காய் குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான கோவைக்காய் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 3, 2024, 13:24 [IST]
Desktop Bottom Promotion