சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..

Posted By:

Kongunadu Special Milagu Rasam In Tamil: தற்போது காலநிலை மாறிக் கொண்டே இருப்பதால், நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையை சந்திப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சளி, இருமலால் அவதிப்படுபவர்களின் வாய்க்கு ருசியாக ரசம் மட்டும் தான் இருக்கும்.

Kongunadu Special Rasam Recipe How To Make Kongunadu Special Milagu Rasam For Cold And Cough

அதுவும் அந்த ரசம் சளி, இருமலை முறிக்கும் வகையில் இருந்தால், அதை சாதத்துடன் மட்டுமின்றி, சூப்பாகவும் குடிக்கலாம் அல்லவா? அப்படியான ஒரு ரசம் தான் கொங்குநாட்டு ஸ்பெஷல் ரசம். இந்த ரசத்தை செய்தால், சாம்பார், குழம்பு என்று எதுவுமே தேவைப்படாது. இந்த ரசம் செய்து, அப்பளத்தை தொட்டுக் கொண்டாலே பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கொங்குநாடு ஸ்பெஷல் மிளகு ரசம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்பெஷல் மிளகு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6
* பூண்டு - 6 பல்
* வரமிளகாய் - 1
* மல்லி - 2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* அரைத்த விழுது
* தண்ணீர் - 8 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், மல்லி, மிளகு, மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகத்தை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுக்குப் பொடியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், கறிவேப்பிலை கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்ததை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 8 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை, பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, மிளகுத் தூள் சேர்த்து கலந்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பின்பு தீயை குறைத்து, மிதமான தீயில் வைத்து, நுரைக்கட்ட ஆரம்பித்ததும், அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கொங்குநாட்டு ஸ்டைல் ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, June 22, 2026, 15:24 [IST]
Desktop Bottom Promotion