வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? இந்த கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு செய்யுங்க - சாதத்தோட சாப்பிட பிரமாதமா இருக்கும்

Posted By:

Kongu Appala Kootu Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான சாம்பார் அல்லது ரசம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஏதாவது சிம்பிளா அதேசமயம் டேஸ்ட்டா சமைக்க விரும்புகிறீர்களா? மதிய வேளையில் வீட்டில் சமைக்க காய்கறிகள் எதுவும் இல்லையா? வெளியே சென்று காய்கறி வாங்கி வந்து சமைக்க சோம்பேறித்தனமாக இருக்குதா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தை வைத்து கொங்கு ஸ்டைலில் ஒரு அட்டகாசமான கூட்டு செய்யுங்கள்.

Kongu Appala Kootu Recipe How to Make at Home in Tamil

இந்த கொங்கு ஸ்பெஷல் அப்பளக் கூட்டு சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சில நிமிடங்களில் செய்துவிடக்கூடிய அளவிற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். ஒரே மாதிரியான குழம்பு சாப்பிட்டு போரடித்தவர்கள் இதுபோல செய்து கொடுத்தால் ஒரு பிடி பிடிப்பார்கள்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் அப்பளக் கூட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பளக் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 8 அப்பளம்
- அப்பளம் பொரிக்க தேவையான எண்ணெய்
- 1/3 கப் பாசிப்பருப்பு
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 1 தக்காளி, நறுக்கியது
- 1 உருளைக்கிழங்கு, தோல் நீக்கி பொடியாக நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், கீறியது
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
- 1/4 ஸ்பூன் மிளகாய் தூள்

தாளிக்க:

- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பச்சை மிளகாய், நறுக்கியது

செய்முறை:

- முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு அடி கனமான ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் ஒன்று, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் கால் டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- இதனுடன் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு ஒன்றையும் சேர்க்கவும்.

- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.

- பருப்பு நன்கு வெந்து, உடையத் தொடங்கும் வரை வேக வைக்க வேண்டும்.

- பருப்பு வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் சூடான எண்ணெயில் அப்பளத்தைப் பொரித்தெடுக்கவும். அப்பளத்தைச் சிறு துண்டுகளாக உடைத்துத் தனியே எடுத்து வைக்கவும்.

- பருப்பு வெந்ததும், அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அதில் வறுத்த அப்பளங்களைச் சேர்க்கவும். அப்பளங்கள் பருப்பில் ஊறி, அதிலுள்ள நீரைச் சற்று உறிஞ்சிக்கொள்ளும்.

- பருப்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுதண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்

- ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றிக் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்துத் தாளிக்கவும்.

- தாளித்த கலவையை பருப்பில் கொட்டவும். மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

- அவ்வளவுதான் அருமையான கொங்கு ஸ்டைல் அப்பளக் கூட்டு ரெடி. இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 12, 2026, 13:20 [IST]
Desktop Bottom Promotion