இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Green Kara Chutney Recipe In Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையில் டிபனாக செய்யும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வார்கள். அதுவும் கார சட்னி என்றால் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் அதில் வரமிளகாய் தான் சேர்த்து செய்யப்படும். ஆனால் இந்த கார சட்னியை பச்சை மிளகாய் சேர்த்து பச்சை நிறத்திலும் செய்யலாம் என்பது தெரியுமா?

Green Kara Chutney How To Make Kara Chutney Recipe

இப்படி பச்சை மிளகாயை சேர்த்து பச்சை நிறத்தில் செய்யும் கார சட்னி மிகவும் காரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த சட்னியில் புளி சேர்ப்பதாலும், நல்லெண்ணெயில் தாளிப்பதாலும் சுவை பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை முயற்சித்தால், பின் அடிக்கடி இந்த சட்னியை செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த க்ரீன் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 25 (கீறியது)
* பூண்டு - 8 பல்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 12 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 4 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 25 பச்சை மிளகாயை கீறிப் போட்டு, வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, புளி மற்றும் சுவைக்கேறப் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான க்ரீன் கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 2, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion