Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும்
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்!
Stomach Cancer Awareness Month 2026: ஊறுகாய், கருவாடு மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் வைத்துப் பயன்படுத்தப்படும் உணவுகள் (Preserved Foods) பலரது அன்றாட உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய உணவுகள் உணவுக்கு கூடுதல் சுவையைத் தருவதுடன், நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், அதிக உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் அல்லது உப்பைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படும் உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடுவது, காலப்போக்கில் வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, எப்போதாவது சாப்பிடுவதற்குப் பதிலாக இத்தகைய உணவுகளை தினமும் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கூடுதல் கவனம் தேவை.

இந்தியாவில், செரிமான மண்டலம் தொடர்பான புற்றுநோய்களில், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் வயிற்று புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் (WCRF) தகவல்கள் மற்றும் சமீபத்திய பதிவுத் தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 57,727 புதிய வயிற்றுப் புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. இந்த வயிற்றுப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது.
உலகப் புற்றுநோய் ஆராய்ச்சி நிதி அமைப்பு (World Cancer Research Fund) மேற்கொண்ட ஆய்வுகளிலும், உப்பைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படும் உணவுகள் வயிற்றுப் புற்றுநோய்க்கான ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், எல்லா வகையான ஊறுகாய்களும், புளிக்க வைக்கப்பட்ட உணவுகளும், பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் உணவுகளும் ஒரே அளவிலான அபாயத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. உணவு எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது, அதில் எவ்வளவு உப்பு சேர்க்கப்படுகிறது, எவ்வளவு அளவு சாப்பிடுகிறோம், எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பவை முக்கியம்.
வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வை மாதத்தை முன்னிட்டு, சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகரான டாக்டர் மகாதேவன் பி அவர்கள் ஊறுகாய், கருவாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்பது குறித்து தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
அதிகப்படியான உப்பு வயிற்றை எவ்வாறு பாதிக்கிறது?
"நமது வயிற்றின் உட்புறத்தில் ஒரு பாதுகாப்பான சளிப் படலம் உள்ளது. இது செரிமானத்திற்குத் தேவையான அமிலங்களால் வயிற்றின் உட்புறத் திசுக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. உணவில் தொடர்ந்து அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்வது இந்தப் பாதுகாப்புப் படலத்தைப் பாதிக்கலாம். இதனால் வயிற்றில் எரிச்சல், அழற்சி மற்றும் வயிற்றின் உட்புறப் படலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இத்தகைய பாதிப்புகள் நீண்ட காலம் தொடரும்போது, நாள்பட்ட இரைப்பை அழற்சி (Chronic Gastritis), வயிற்றின் உட்புறப் படலம் மெலிந்து பாதிக்கப்படும் நிலை (Atrophic Gastritis) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில சூழல்களில் இவை புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மற்றொரு முக்கியமான காரணி ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori அல்லது H. pylori) எனப்படும் பாக்டீரியா தொற்று. இந்த பாக்டீரியா வயிற்றில் தொற்றை ஏற்படுத்துகிறது. வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணிகளில் இதுவும் ஒன்று. அதிக உப்பு உட்கொள்வது இந்த பாக்டீரியா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும். பாக்டீரியா தொற்று, நீண்டகால அழற்சி மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை ஒன்றாக இருக்கும் போது புற்றுநோய் அபாயம் மேலும் அதிகரிக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.
எல்லா வகையான ஊறுகாய்களும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் தீங்கு விளைவிக்குமா?
"அப்படி இல்லை. இதுதொடர்பான பெரும்பாலான ஆய்வுகள், அதிக உப்பு சேர்த்துப் பதப்படுத்தப்படும் காய்கறிகள் மற்றும் மீன்களையே மையமாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரியமாகச் சாப்பிடப்படும் சில உணவு வகைகள் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
எனவே, வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாயைச் சிறிதளவு சாப்பிட்டாலே வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் என்றோ, எல்லா புளிக்க வைக்கப்பட்ட உணவுகளும் ஆபத்தானவை என்றோ கூறுவது சரியல்ல. அதே நேரத்தில், அதிக உப்பு சேர்த்துப் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கருவாடு மற்றும் அதிக உப்பு கொண்ட ஊறுகாய் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
யாரெல்லாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்?
"H. pylori பாக்டீரியா தொற்று உள்ளவர்கள், நீண்ட காலமாக வயிற்றில் அழற்சி உள்ளவர்கள், குடும்பத்தில் யாருக்கேனும் வயிற்றுப் புற்றுநோய் இருந்தவர்கள் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்களது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வயது அதிகரிப்பதும், பரம்பரையாக வரும் சில உடல்நலப் பிரச்சினைகளும், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தொடர்ந்து குறைவாகச் சாப்பிடுவதும் வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய காரணிகளாகும்." என்று டாக்டர் கூறினார்.
வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?
"முதலில், உணவில் அதிகப்படியான உப்பைக் குறைக்க வேண்டும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிக உப்பு சேர்த்துப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது, பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது ஆகியவை உதவும். புகைபிடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
H. pylori தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள், அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். இந்தத் தொற்றுக்கு உரிய சிகிச்சை பெறுவது வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
அதேபோல், காரணம் தெரியாமல் உடல் எடை குறைவது, தொடர்ந்து செரிமானக் கோளாறு அல்லது அஜீரணம் (Indigestion), பசியின்மை, உணவை விழுங்குவதில் சிரமம், அடிக்கடி வாந்தி ஏற்படுவது போன்ற அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இந்த அறிகுறிகள் இருப்பதால் புற்றுநோய் என்று அர்த்தமில்லை. இருப்பினும், இவை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதற்காக நமது பாரம்பரிய உணவுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், அதிகப்படியான உப்பு உட்கொள்வது, நீண்ட காலமாக வயிற்றில் ஏற்படும் அழற்சி மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத பாக்டீரியா தொற்று ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அபாயங்கள் அதிகரிப்பதற்கு முன்பே உணவுப் பழக்கத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வதே முக்கியம்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications



