கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Gothumai Milagu Pongal With Tomato Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலையில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று அரிசி கொண்டு பொங்கல் செய்யாமல், உடைத்த கோதுமையைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள். இந்த பொங்கல் மிகவும் மென்மையாக இருப்பதோடு, மிகவும் சத்தானதும் கூட. இதற்கு தக்காளி குழம்பு அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Gothumai Milagu Pongal With Tomato Kuzhambu How To Make This Delicious Breakfast

உங்களுக்கு கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மிளகு பொங்கல் மற்றும் தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கரத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உடைத்த கோதுமை/கோதுமை குருணை - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 4 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டீஸ்பூன்
* சுடுநீர் சிறிது

பொங்கல் தாளிப்பதற்கு...

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து

தக்காளி குழம்பிற்கு...

* நாட்டு தக்காளி - 4 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 12
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்

குழம்பு தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* கடைந்த குழம்பு
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்த பருப்பை நீரில் கழுவி, குக்கரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உடைத்த கோதுமையை சேர்த்து, நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 4 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு, நெய் சேர்த்து கலந்து குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பொங்கலை நன்கு கரண்டியால் கிளறி விட வேண்டும். பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது சுடுநீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின் அதில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொங்கலுடன் சேர்த்து கலந்தால், சுவையான கோதுமை மிளகு பொங்கல் தயார்.
* அடுத்து குக்கரில் தக்காளியை நறுக்கி சேர்த்து, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சாம்பார் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதன் பின் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி கலந்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு அல்லது எலக்ட்ரிக் பிளெண்டர் கொண்டு தக்காளியை கடைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குழம்பு தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கடைந்த குழம்பை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, பொடித்த வெல்லத்தையும் சேர்த்து கலந்து, மூடி வைத்து குழம்பு 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 12, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion