விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டை - எப்படி செய்றதுன்னு தெரியுமா?

Posted By:

Ganesh Chaturthi Special Chettinad Ukkarai Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் ரொம்ப பிடிக்கும். வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்திக்கு என்ன கொழுக்கட்டை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதனுள் வைக்கும் பூரணத்தைப் பொறுத்து வேறுபடும்.

நீங்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சற்று ஸ்பெஷலான கொழுக்கட்டையை செய்ய நினைத்தால், செட்டிநாடு உக்காரையை செய்து, அதைக் கொண்டு கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக செய்தால் உடனே காலியாகிவிடும். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Ganesh Chaturthi Special Recipe How To Make a Chettinad Ukkarai Kozhukattai Recipe

உங்களுக்கு செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

செட்டிநாடு உக்காரை செய்வதற்கு...

* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்

வெளி மாவிற்கு...

* இடியாப்ப மாவு - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கொதிக்கும் தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் குக்கரில் 1/4 கப் பாசிப்பருப்பை எடுத்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 டேபிள் ஸ்பூன் ரவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசித்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* நன்கு அல்வா போன்ற பதத்திற்கு வந்ததும், அதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்தால், செட்டிநாடு உக்காரை தயார்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை எடுத்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் நீரை நன்கு கொதிக்க வைத்து, கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டியால் கிளறி, கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு கொஞ்சம் மாவை எடுத்து, அதை தட்டையாக தட்டி, அதன் ஒருபக்கமாக செய்து வைத்துள்ள உக்காரையை கொஞ்சம் வைத்து, கொழுக்கட்டை போன்று மடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் கொழுக்கட்டைகளாக செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களிடம் கொழுக்கட்டை அச்சு இருந்தால், அதைக் கொண்டும், விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.
* இறுதியாக இட்லி தட்டில் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 22, 2025, 18:06 [IST]
Desktop Bottom Promotion