சௌசௌ உடன் கேரட்டை சேர்த்து இந்த பக்குவத்தில் கூட்டு செய்யுங்க... பூரி, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்....!

Posted By:

Chow Chow Carrot Kootu Recipe in Tamil: பொதுவாக சமைக்கும் போது சாதத்துக்கு என்ன குழம்பு வைப்பது என்ற குழப்பத்துக்குப் பிறகு அடுத்த பெரிய கவலையாக இருப்பது அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதுதான். பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்வதுதான் நமது வழக்கம். ஆனால் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாக மாறும்.

பொதுவாக அனைவருக்கும் பிடித்த அதேசமயம் செய்வதற்கு மிகவும் எளிமையான ஒரு பொரியல் என்றால் அது கேரட் பொரியல்தான். இது அனைத்து வகையான குழம்புகளுக்கும் பொருந்தக்கூடிய பொரியலாகும். ஆனால் கேரட்டை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சுவையான கூட்டு செய்யலாம். கூட்டு என்றாலே பொதுவாக சுரைக்காய், பூசணிக்காய் போனவற்றில்தான் செய்வார்கள்.

Chow Chow Carrot Kootu Recipe How to Make Chow Chow Carrot Kootu

ஆனால் கேரட்டை சௌ சௌ உடன் சேர்த்து சூப்பரான கூட்டு செய்யலாம். இந்த சௌ சௌ கேரட் கூட்டு சாம்பார், ரசம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சரியான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சுவையான சௌ சௌ கேரட் கூட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

- செளசெள - ஒன்று
- கேரட் - 2
- துவரம் பருப்பு - ஒரு கப்
- பச்சை மிளகாய் - 4
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - கால் கப்
- சீரகம் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - ஒரு ஸ்பூன்
- கடுகு - ஒரு ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- செளசெள, கேரட் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

- தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

- துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் நறுக்கியா செளசெள, கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

- மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

- சௌ சௌ மற்றும் கேரட் நன்கு வெந்ததும் அதில் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.

- 5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறவும்.

- இந்த கலவையை 10 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைக்கவும் பின்னர் அடுப்பை அணைத்து இறக்கி வைத்து விடவும்.

- பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் கொட்டி கிளறவும்.

- சுவையான செளசெள கேரட் கூட்டு ரெடி.

- இது சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

- இந்த கூட்டை செளசெளவிற்கு பதிலாக முட்டைக்கோஸ் அல்லது புடலங்காய் வைத்தும் செய்யலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 18, 2025, 21:00 [IST]
Desktop Bottom Promotion