செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்

Posted By:

Chettinad Urulaikilangu Roast Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் உருளைக்கிழங்கு பிரியர்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? அப்படியென்றால் வழக்கமான உருளைக்கிழங்கு பொரியலை செய்யாம ஒருமுறை செட்டிநாடு ஸ்டைலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை செஞ்சு பாருங்க.

Chettinad Urulaikilangu Roast Recipe How to Make at Home in Tamil

இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் சாம்பார் சாதம், ரசம் சாதம் அல்லது தயிர் சாதம் என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட்-ன் ஸ்பெஷலே அதற்கு பிரத்யேகமாக தயார் செய்யும் ஒரு மசாலாதான். அந்த மசாலாவை சேர்த்து செய்யும் போது, உருளைக்கிழங்கின் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த ரோஸ்ட் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

செட்டிநாடு மசாலாவுக்குத் தேவையானவை:

- 4 வர மிளகாய்
- 1 ஸ்பூன் மல்லி விதை
- 1 இன்ச் பட்டை
- 1 ஏலக்காய்
- 1 கிராம்பு
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 2 கொத்து கறிவேப்பிலை

பிற பொருட்கள்:

- 3 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 நறுக்கிய தக்காளி
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லித் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு, வேகவைத்து தோல் நீக்கியது
- அலங்கரிக்க கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

- முதலில் செட்டிநாடு மசாலாவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எண்ணெய் சேர்க்காமல் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

- உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- அதன்பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

- இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி துண்டுகளைச் சேர்த்து, மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.

- வாணலியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை தொடர்ந்து கிளறவும்.

- பின்னர் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து கிளறவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- கால் முதல் அரை கப் வரை தண்ணீர் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி மசாலா கெட்டியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

- பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, ஈரப்பதம் வற்றும் வரை வதக்கவும்.

- மசாலா உருளைக்கிழங்கில் நன்கு செட்டானதும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 13, 2026, 22:30 [IST]
Desktop Bottom Promotion