3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்...

Posted By:

Kathirikkai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் அடிக்கடி இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே பெரிய வேலையாக இருக்குமா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கத்திரிக்காய் என்றால் பிடிக்குமா?

அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் சட்னி நீங்கள் வழக்கமாக செய்யும் சட்னியை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்படி சட்னியை அரைக்கும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Brinjal Chutney How To Make Kathirikkai Chutney For Idli Dosa

உங்களுக்கு கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* நறுக்கிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து ஒருமுறை பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கத்திரிக்காய் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிய துண்டு புளி மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 4, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion