தாய்ப்பால் கொடுக்கும் புது தாய்மார்களுக்கான சில சூப்பர் உணவுகள்!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

புதிதாகக் குழந்தை பெற்றுள்ள பெண்களுக்கு நல்ல உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அப்போது தான் தாய்ப்பால் மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல சத்துக்களை அளிக்க முடியும்.

குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். ஆனால் தாய்ப்பால் சுரப்பதற்கு ஒரு தரமான உணவுக் கட்டுப்பாடு ஒவ்வொரு தாய்க்கும் அவசியம்.

அந்த உணவுக் கட்டுப்பாட்டில் சில சத்தான உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது. அத்தகைய 6 சூப்பரான உணவுகளைப் பற்றிப் பார்ப்போமா?

முட்டை

புரதச்சத்தும் வைட்டமின் டி-யும் அதிகம் உள்ள முட்டையை குழந்தை பெற்ற ஒவ்வொரு தாயும் தன் உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். தினமும் 2 முட்டைகளை சாப்பிடுவது நல்லது. அது தாயின் எலும்புகளுக்கும், குழந்தையின் எலும்புகளுக்கும் மிகவும் நல்லது. முட்டையில் குறிப்பிடத்தக்க அளவு அமினோ அமிலமும் உள்ளதால், தாய்க்கும் சேய்க்கும் நல்ல வலுவைக் கொடுக்கிறது. முட்டையில் உள்ள கோலின், குழந்தையின் ஞாபகத் திறனை வளர்க்கிறது.

ஓட்ஸ்

குழந்தைப் பெற்ற சில பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம் தான். அதற்கு அவர்கள் ஓட்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. எளிதில் செரிமானமாவதற்கு அது உதவுகிறது. மேலும், அதில் உள்ள அதிக இரும்புச்சத்தும் தாய்மார்களுக்கு நிறைய சத்தைக் கொடுக்கிறது. இதையெல்லாம் விட, ஓட்ஸ் சாப்பிட்டால் நிறையத் தாய்ப்பால் சுரக்கும். ஏலக்காய், தேன் மற்றும் சில பழங்களுடன் ஓட்ஸை சேர்த்துச் சாப்பிட்டால் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.

சால்மன் மீன்

இந்த மீனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் என்ற கொழுப்பு, குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் புரதம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. வாரத்திற்கு 2 முறை இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கைக்குத்தல் அரிசி

கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த கைக்குத்தல் அரிசியை குழந்தைப் பெற்ற அனைத்துப் பெண்களும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அது எப்போதும் தாய்மார்களை எனர்ஜியுடன் வைத்துக் கொள்ளும். இரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக இருக்கும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து, தாய்ப்பால் நிறையச் சுரக்க உதவுகிறது. கைக்குத்தல் அரிசியை நீரில் ஊற வைத்து உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லியையும் தாய்மார்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பலவிதமான நோய்களிலிருந்து தாயையும் சேயையும் இது காக்கிறது. குழந்தைப் பெற்ற பெண்களுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் இதில் நிறைந்து கிடக்கின்றன.

பசலைக் கீரை

பசுமையான காய்கறி வகைகளில், தாய்மார்களுக்கு நன்மை தருவதில் பசலைக் கீரை சிறப்பான இடத்தை வகிக்கிறது. வைட்டமின் ஏ இதில் அதிகம் உள்ளதால், அது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பசலையில் உள்ள ஃபோலிக் அமிலம், புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது. இதன் மூலம் தாய்ப்பாலும் அதிகம் சுரக்கிறது. சிசேரியன் செய்து கொண்டுள்ள தாய்மார்களின் வலியைப் போக்குவதிலும் பசலைக் கீரை முக்கிய இடத்தை வகிக்கிறது.

English summary

Top 6 Superfoods for New Mothers

A good diet is especially important if you are breastfeeding to ensure that your baby gets all the important nutrients required for proper growth and development. A good diet is especially important if you are breastfeeding to ensure that your baby gets all the important nutrients required for proper growth and development.
Story first published: Wednesday, November 5, 2014, 16:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter