கடக ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

Posted By:
Subscribe to Boldsky

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த கடக ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருட தமிழ் பத்தாண்டு எப்படி தொடங்கும், என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று பார்க்கலாம்.

புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடத்தில் கடக ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாவக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தரும் அமைப்பு ஆகும். எனவே இப்போது தொடங்கியிருக்கிற விளம்பி தமிழ்ப் புத்தாண்டை கடக ராசிக்காரர்களுக்கு நன்மையானதாகவே அமையும்.

tamil new year 2018

பாவ கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று ஜோதிட மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதும், வருடம் முழுவதும் சனி பகவான் ஆறில் இருக்கப் போவதும் கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும்.

அதேபோல புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் நான்காமிடத்தில் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் நன்மைகளை அள்ளி வழங்குகிற ஸ்தானமான ஐந்தாம் ஸ்தானத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் கடகத்திற்கு நன்மைகளே உண்டாகும்.

தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்கும். தொழிலை விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க மிகவும் நல்ல நேரம் இது. கூட்டாளிகளைத் தேர்வு செய்வதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் நிசசயம் நல்ல லாபம் உண்டாகும்.

காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை பணி துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை மாற்றம் வரலாம். இதற்காக சோர்வடையாதீர்கள். அதற்கான பலன் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு 'இதர வருமானங்கள்' சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடுகள் தீரும். குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

நவம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

பொருளாதார நிலை மேம்பாடடையும். சரளமான பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல தொடர்ச்சியான வருமானம் வரும்.

பிற இன மொழி மதக்காரர்களின் நேசத்தைப் பெறுவீர்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். தூரத்தில் பணியிடம் அமையும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகவே உங்களக்கு அமையும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். மந்தமான நிலைமை மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் பெரும் உதவியாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் தேடிக்கொள்வீர்கள்.

புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப்பயணம் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிதேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை முதலீட்டில் ஓரளவு லாபம் உண்டாகும்.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். இனிமேல் வராது என்று நீங்கள் நினைத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரய செலவுகள் வரக்கூடும்.

பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் அனைத்தும் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் அதனால்மற்றவர்களுக்கு மனவருத்தம் ஏதும் இருக்காது. மகிழ்ச்சியாகவு வேறு வீட்டுக்கு மாறுவீர்கள்.

பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். கடக ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் மகிழ்ச்சிகரமாகவே அமையும்.

Read more about: tamil new year
English summary

kadakam rasi vilambi tamil new year horoscope 2018

tamil new year vilambi varuda palangal 14.4.18
Story first published: Saturday, April 14, 2018, 12:45 [IST]