கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?

Navaratri 2026: இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 21 ஆம் தேதி அன்று விஜயதசமியுடன் முடிவடைகிறது. இந்த விழாக் காலத்தின் போது, ​​பக்தர்கள் பொது வெளியிலும், தங்கள் வீடுகளிலும் அன்னை துர்கையின் சிலைகளை நிறுவி, வழிபாடு செய்கின்றனர். நவராத்திரிக்கென்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடைமுறை உள்ளது.

Navaratri 2026 Why Is Soil From Outside a Sex Worker s Home Used to Make Durga Idols

வங்காளத்தில் அன்னை துர்கையின் சிலைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் களிமண், பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து, குறிப்பாக கொல்கத்தாவின் மிகவும் புகழ்பெற்ற சிவப்பு விளக்கு பகுதியான 'சோனாகாச்சி'யிலிருந்து சேகரிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மண் 'புண்ணிய மண்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வழக்கம் கொல்கத்தாவின் குமர்டூலியுடன் தொடர்புடையது. இந்த வித்தியாசமான நடைமுறை எவ்வாறு உருவானது மற்றும் வங்காள மரபுகளில் இதன் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துர்கை சிலை செய்ய ஏன் பாலியல் தொழிலாளி வீடு மண் ஏன் தேவைப்படுகிறது?

கொல்கத்தாவின் குமர்டூலியில் உள்ள மண்பாண்டக் கலைஞர்கள், சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் இல்லங்களுக்குச் சென்று, அவர்களை வணங்கி அவர்களின் இல்லத்திலிருந்து மண்ணைக் கேட்டுப் பெறுகிறார்கள். பாலியல் தொழிலாளர்கள் முன்னிலையில் இவ்வாறு தலைவணங்குவது, பெண்களின் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இது சமூகத்தில் பெண்களின் சக்திக்கான மரியாதையை வெளிப்படுத்துகிறது.

புனித மண்

இந்த மண், துர்கை தேவியின் சிலையை உருவாக்கப் பயன்படுத்தப்படும் களிமண்ணுடன் கலக்கப்படுகிறது.
வங்காளத்தின் துர்கா பூஜை மரபில், இந்த மண் புனித மண்(Punya Mati) என்று கருதப்படுகிறது. வங்க மொழியில் 'புண்யம்' என்பது அறம் அல்லது ஆன்மீக நற்பேற்றைக் குறிக்கிறது, 'மட்டி' என்றால் மண் என்று பொருள். பாலியல் தொழிலாளர்களின் இல்லத்திலிருந்து பெறப்படும் இந்த மண் 'புண்ய' என்று அழைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்றால், அங்கு வரும் ஆண்கள் தங்கள் அறத்தையோ அல்லது தூய்மையையோ அந்த இல்லத்தின் வாசலிலேயே விட்டுச் செல்கிறார்கள் என்பதுதான். எனவே, அந்த இல்லத்திற்கு வெளியே உள்ள மண்ணில் இந்த அறம் சேர்வதாகவும், அதன் விளைவாக அந்த மண் புனிதமானதாக மாறுகிறது என்றும் நம்பப்படுகிறது. மற்றொரு கோட்பாட்டின் படி, தெய்வீகத்தன்மையைச் சமூகத்தின் பிற்போக்குச் சிந்தனையிலிருந்து பிரிக்க முடியாது. சமூகம் தீட்டானது அல்லது தூய்மையற்றது என்று கருதும் ஒரு பொருளைக் கொண்டே, புனிதமானதாகக் கருதப்படும் அம்மன் சிலை உருவாக்கப்படுகிறது.

இந்த சடங்குக்கு பின்னால் உள்ள புராணக்கதை

புராணக் கதைகளின்படி, ஒருமுறை சில விலைமாதர்கள் கங்கை நதியில் நீராடச் சென்றனர். அப்போது, ​​ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த தொழுநோயாளி ஒருவர் புனித நீராட விரும்பினார், ஆனால் அவருக்கு உதவி தேவைப்பட்டது. ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் இரக்கம் கொண்ட அந்தப் பாலியல் தொழிலாளர்கள், அந்த தொழுநோயாளிக்கு புனித நதியில் குளிக்க உதவினார்கள். அங்கு தொழுநோயாளியாக இருந்தது சிவபெருமானாவார். அவர்களின் செயலில் மகிழ்ந்த சிவபெருமான், அவர்கள் கேட்ட வரத்தை வழங்கினார். அதன்படி, அவர்களின் இல்ல முற்றங்களில் உள்ள மண்ணைக் கொண்டு துர்கை தேவியின் சிலைகளை உருவாக்கலாம் என்று அவர்கள் வினவினர்.

சிவபெருமான் அவர்கள் கேட்ட வரத்தை அருளினார். அன்று முதல், கங்கை நதிக்கரையில் உள்ள மண் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து பெறப்படும் மண் ஆகியவற்றைக் கொண்டு துர்கை சிலைகளை உருவாக்கும் மரபு, பக்தர்களிடையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு விளக்கத்தின் படி, ஒரு கணவன் தன் மனைவிக்குத் துரோகம் செய்து பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்லும்போது, ​​அவர் தன் இல்லத்தில் இருக்கும் லட்சுமி தேவிக்கு அவமரியாதை செய்கிறார். இதனால் அவரது நற்பண்புகளும், நற்பெயரும் அந்த வீட்டின் வாசலிலேயே தங்கிவிடுகின்றன. எனவே, அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணில் தூய்மையும், லட்சுமி தேவியின் ஆசிகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே, துர்கை சிலைகளை உருவாக்குவதில் அந்த மண் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.

இப்படி பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் துர்கை சிலைகள் செய்வதற்கு பாலியல் தொழிலாளர் வீட்டு மண் பயன்படுத்தப்படுவதற்கான தெளிவான காரணம் விளக்கப்படவில்லை. இருப்பினும், இந்த வழக்கம் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Friday, October 16, 2026, 10:54 [IST]
Desktop Bottom Promotion