பொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களுக்கு கிளம்ப தயாராகி விட்டார்கள் ஊரே பொங்கலைக் கொண்டாட தயாராகி விட்டது. இன்றைக்கு புத்தாடை உடுத்தி எலக்ட்ரிக் குக்கரில் சர்க்கரை பொங்கல் செய்து பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே பொங்கல் தினத்தை கொண்டாடி முடிப்போம்.
சிலர் இந்த அளவுக்கு கூட இல்லாமல்.... லீவ் கிடைக்கல என்ற சொல்லிவிட்டு வழக்கமான ஞாயிற்றுக் கிழமை போல இந்த நாளையும் கடந்து விடுவார்கள். இந்த வருடம் சில இடங்களில் குறிப்பாக தமிழகத்தை தாண்டி பொங்கலுக்கு என்று விடுமுறையும் கிடையாது. அதான் ஞாயிற்றுக்கிழமை தானே வந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல வீக் ஆஃப் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சுருக்கி விட்டார்கள்.
தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவினை ஒரு வீக் ஆஃபில் சுருக்கிய பெருமை நம்மைச் சேரும். பாரம்பரியத்திருவிழா, கலாச்சார விழா என்றெல்லாம் சொல்கிறோமே.... பொங்கல் பண்டிகை உண்மையில் எப்படி கொண்டாடப்பட்டது, இன்றைய குழந்தைகளை விட 90களில் பிறந்தவர்களுக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் மட்டுமே இந்த கொண்டாட்டங்களை நேரடியாக பார்த்த அனுபவம் இருக்கும்.
பொங்கல் விடுமுறை :
பொங்கல் வருகிறது என்று சொன்னாலே மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே எங்கள் ஊரில் விழா கலைகட்டத்துவங்கும். நாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து கிராமத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே புறப்படுவோம்.
பட்டணத்திலிருந்து வந்திருக்காங்க என்று சொல்லி எங்களுக்கு ஏக வரவேற்பு இருக்கும். பார்ப்பவர்கள் எல்லாரிடத்திலும் அம்மாவும் அப்பாவும் நின்று பேசி... நிதானமாக வீடு வந்து சேர்வதற்குள் மதியமாகிடும்.
பொங்கல் வாழ்த்து :
ஆம், அன்றைக்கு தயங்காமல் வாழ்த்து அட்டைகளில் பொங்கல் வாழ்த்து சொல்லிக் கொடுப்போம். பள்ளியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து கடிதங்களைக் கூட எழுதி பரிமாறியிருக்கிறோம்.
இப்போது என்னடாவென்றால் Hpy pgl என்று சுருக்கி டைப் செய்து ஸ்மைலிக்களுடன் சேர்த்து அனுப்புகிறார்கள். அதையும் ஃபார்வேர்டு செய்து தங்கள் கடைமையை முடித்துக் கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பொங்கல் ஷாப்பிங் :
இப்போது சென்று வருகிற ஷாப்பிங் கிடையாது.பொங்கல் வைக்க தேவையான சாமான்களை வாங்க பாட்டியுடன் சந்தைக்குச் செல்வோம். சில வீடுகளில் அடுப்பு,பானை என எல்லாவற்றையும் புதிதாக வாங்குவார்கள். எங்கள் வீட்டில் அந்தப் பழக்கமில்லை.
வாழையிலை,கிழங்கு,கரும்பு,அரிசி,வெல்லம் போன்ற சாமன்களை தேடித்தேடி வாங்குவோம்.
சாமிக்கும் நமக்கும் :
கரும்பை கடித்துச் சாப்பிடுவதில் பலமான போட்டியிருக்கும். வாங்கிய கரும்புகளில் முதலிலேயே சாமிக்கு என்று சொல்லி சில கரும்புகளை தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். மீதியிருக்கும் கரும்பை ஒரு அடி அல்லது அதற்கும் குறைவாக வெட்டிக் கொடுப்பார்கள்.
நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவோம். தங்கைக்கு அப்போது மூன்று வயதிருக்கும் அவளால் கரும்புத் தோலை பிய்க்க முடியாது என்பதால் பாட்டி அவளுக்கு மட்டும் தோல் சீவி அறுவாள்மனையில் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொடுப்பார்கள். அதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு எங்களோடே சுற்றிக் கொண்டிருப்பாள்.
டிரஸ் :
இந்த வருஷம் பொங்கலுக்கு என்ன டிரஸ் டிரண்ட் என்று தேடித்தேடி அலைந்து திரிந்து வாங்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. சில நேரங்களில் பள்ளி செல்லும் யூனிஃபார்ம் தான் எங்களுக்கு பொங்கல் டிரஸ்ஸாக கிடைக்கும்.
வருடத்திற்கு ஒரு டிரஸ் தான் கோட்டா. தீபாவளிக்கு ஒரு புதுத்துணி எடுத்தாச்சுல்ல பொங்கலுக்கு யூனிஃபார்ம் எடுக்கலாம் என்று சமாதானப்படலங்களும் நடக்கும். எப்போதாவது நெருங்கிய உறவினர்களின் திருமணத்திற்கும், நம் பிறந்தநாளுக்கும் துணிகள் கிடைக்கும்.
முதல் நாள் இரவு :
பொங்கல் நாளுக்கு முந்தைய நாளிலிருந்து கொண்டாட்டம் கலைகட்டத் துவங்கும். எல்லாரும் அவரவர் வீட்டு வாசலில் கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து பெரிய கலர் கோலம் போடத் தயாராகி விடுவார்கள். பெரியவர்கள் கோலம் போட எங்களுக்கு கலர் போடுகிற வேலை.
சில நேரங்களில் மரத்தூளிலும், கல் உப்பிலும் கலர் சேர்த்து வித்யாசமான கோலங்களை படைப்பார்கள்.கூரையில் கூரைப்பூ வைப்பாரக்ள். இப்போது ஒரு கட்டு வாங்கி வந்து அப்படியே வைத்து விடலாம். ஆனால் அப்போது ஒவ்வொரு பூ,செடியை தேடி சேகரிப்பார்கள்.
சூரியன் உதிக்கும் முன்னே :
விடியற்காலை நான்கு மணிக்கு எங்களை எழுப்புவார்கள். அதற்கு முன்பே பெரியவர்கள் எல்லாம் தயாராகி பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். நாங்களும் குளித்து தயாரானதும் வாசலில் பொங்கல் வைப்போம்.
வீட்டு வாசல் முன்பு கரும்பு தோரணம் கட்டி, விறகடுப்பு வைத்து மண் பானையில் பொங்கல் வைப்போம். மணி ஆறை நெருங்கியிருக்க அப்போது தான் மெல்ல சூரியன் உதித்து சிகப்பு பந்து மெல்ல எழும்பி வரும்.
பொங்கலோ பொங்கல் :
தெரு முழுமைவதும் பலரும் வரிசையாக பொங்கல் வைப்பார்கள். ஆங்காங்கே பொங்கலோ.... பொங்கல் என்று கத்துவது கேட்கும். எனக்கு அப்பறம் வச்சா அதுக்குள்ள அவளுக்கு பொங்கிடுச்சா? என்று அம்மாவும் பாட்டியும் குசுகுசுவென்று பேசிக் கொள்வார்கள்.
எப்போது பொங்கும் என்று காத்திருக்க.... அடுப்பில் பொங்கியவுடன் குலவைச் சத்ததுடன் பொங்கலோ.... பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று சத்தமிடுவோம்.
கோவிலில் :
பொங்கல் ஆனதும், அதை முதலில் சூரியனுக்குப் படைத்து பின்னர் எல்லாருக்கும் கொடுப்போம். வீடு வீடாக சென்று கொடுப்பதும் பின் பிரசாதம் கொடுத்த கிண்ணத்தை வாங்கி வருவதும் குழந்தைகளான நம்முடைய வேலை.
சில இடங்களில் ஊர் பொதுவில் கோவில் அருகே பலரும் சேர்ந்து சமத்துவப் பொங்கல் வைப்பார்கள்.
மறுநாள் :
சில வருடங்கள் புது அரிசியில் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்லி, புதிதாக அறுவடை செய்த அரிசியை தாத்தா தேடி வாங்கிவருவார்கள். பொங்கல் தினத்தன்றும் அதற்கு முந்தைய நாளும் ஊரே விடிய விடிய முழித்திருக்கும். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான போட்டிகள் எல்லாம் நடைபெறும்.
மறுநாள் ஜல்லிக்கட்டு ஊரே களைகட்டும். ஆண்கள் எல்லாம் காலை ஏழு மணியிலிருந்தே திடலுக்குச் சென்றுவிடுவார்கள். பெண்களும் குழந்தைகளும் முதலில் கோவிலுக்குச் சென்று விட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் திடலுக்கு வரும்.
ஜல்லிக்கட்டு :
முறுக்கு மீசை வைத்துக் கொண்டு வாடி வாசல் முன்பு நின்று கொண்டிருக்கும் பெரியவர் மைக்கை பிடித்துக் கொண்டு இன்னாருடைய காளை.... இவ்வளவு பரிசு என்று விவரித்துக் கொண்டிருப்பார் பார்க்கவே அவ்வளவு ஆவலாக இருக்கும்.
அதிக கூட்டம் இருக்கும் என்பதால் வாடிவாசல் ஜல்லிக்கட்டிற்கு பெரும்பாலும் எங்களை அழைத்துச் செல்லமாட்டார்கள்.
இன்னொரு முறை :
வாடி வாசல் வழியாக வருகிற காளையை சிறிது நேரம் அதன் திமிலை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒரு வகை விளையாட்டு என்றால் அதே போல இது இன்னொரு வகை
மிகப்பெரிய மைதானத்தில் இந்தப் போட்டி நிகழும் மாட்டின் கொம்பில் பரிசுத் தொகை அல்லது காணிக்கையை வைத்து கட்டியிருப்பார்கள் . அதனை எடுக்க வேண்டும். மாடி துள்ளும், ஓடும்,முரண்டு பிடிக்கும்.
சிலர் லாவகமாக எடுப்பார்கள் அதை பார்கக்வே கூட்டம் அலைமோதும், மாடு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வரலாம் என்பதால் எங்களை சற்று தொலைவில் இருக்கும் பெரிய திண்ணை வீட்டில் தான் உட்கார வைத்திருப்பார்கள்.
அதுவும் முன் வாசலில் இருக்கும் இரும்பு கேட்டினை பூட்டிவிட்டு அந்த ஓட்டை வழியாகத் தான் வேடிக்கை பார்க்க வேண்டும்.
சிறுவர்களுக்கான ஜல்லிக்கட்டு :
என்னது சிறுவர்களுக்கு என்று தனி ஜல்லிக்கட்டு நடக்கிறதா? என்று ஆச்சரியப்படாதீர்கள். இது நாங்களாக உருவாக்கிய ஜல்லிக்கட்டு, மதியத்திற்குள் ஊரே அமைதியாகிடும். அதன் பின்னர் தான் எங்களது ஆட்டத்தை ஆரம்பிப்போம்.
எங்கள் கூட்டாளிகளில் சிலர் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கண்ணுக்குட்டிகளை இழுத்து வருவார்கள். அதன் தலையில் கரும்பு ஒரு துணியில் போட்டி கட்டிவிட்டு ஓடவிடுவோம். அதன் பின்னால் நாங்கள் சிறுவர்கள் பத்து பதினைந்து பேர் ஓடி தலையில் கட்டியிருக்கும் கரும்பினை பறிக்க வேண்டும். ஜோ.... வென ஓடுவதும் பெரியவர்கள் செய்வது போலவே சில லாவகங்களை முயற்சிப்போம்.
மாடுகளுக்கும் பூஜை :
சில இடங்களில் காலையிலேயே கால்நடைகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து வர்ணம் எல்லம் பூசுவார்கள். நாங்கள் மாலையில் செய்வோம். ஆடு,மாடு வைத்திருப்பவர்கள் இந்த பூஜையை விமர்சையாக செய்வார்கள்.
மாட்டிற்கு அங்க வஸ்திரம் எல்லாம் போட்டிருப்பார்கள். பூஜை முடிந்து அதன் கொம்புகளுக்கு எல்லாம் பளபளப்பான பெயிண்ட் அடித்து ஒவ்வொரு தெருவாக நடத்தி ஊர்வலம் அழைத்து வருவார்கள். சிலர் மாடுகளின் கொம்புகளில் பூ சுற்றியிருப்பார்கள்.
இந்த வருடம் :
படிப்பு,வேலை என்று பட்டணத்திலேயே தங்கிவிட்டு கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையில் இந்த கொண்டாட்டங்களை எல்லாம் கொண்டாடித் தீர்க முடியுமா? இந்த வருடம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து சரி... அடுத்த வருஷம் போய்க்கலாம் வருஷம் வருஷம் கொண்டாடுறது தான என்று விட்டுக் கொடுத்து பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இருக்கும்.
கடைசி கொண்டாட்டம் :
கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை எப்படியாவது ஊரில் சென்று கொண்டாட வேண்டும் என்று ஆசை... அதுவும் அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் எல்லாம் நடந்து முடிந்திருந்த காலக்கட்டம் என்பதால் விமர்சையாக கொண்டாடப்படும் என்று எண்ணி குடும்பத்துடன் ஊருக்குச் சென்றோம்.
எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது. என்னப்பா வில்லேஜ் மாதிரி இருக்கும்னு சொன்ன ஃபுல்லா தார் ரோடு போட்ருக்காங்க வில்லேஜ்ல கூட ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் இருக்குமா? இது தான் வில்லேஜா என்று ஆச்சரிப்பட்டு கேட்கிறாள் மகள்.
மன்னித்துவிடுங்கள் குழந்தைகளே :
எல்லாரும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே அடைந்து கிடக்கிறார்கள். சில வயதானவர்கள் மட்டும் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். நானாக சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்....ஹூம் பொங்கல் லீவுக்கு வந்திருக்கியா என் பையன் நாளைக்கு காலைல தான் வரான் அமெரிக்காவுல இருக்கான் என்று விரக்தியுடன் நகர்கிறார்கள்.
என் இளமைக்காலத்தில் கிடைத்த வரவேற்பினை மகளிடம் விவரித்திருக்க அதே போல நடக்கும் என்று எதிர்ப்பார்த்திருப்பாள் போல இங்கேயும் அவளுக்கு ஏமாற்றம் தான்.
கிண்ணத்தில் பொங்கல் :
வீட்டிற்குச் சென்றால் எண்ணி வைத்தார் போல இரண்டே இரண்டு கரும்பினை வாங்கி சாமி செல்ஃபுக்கு அருகில் நிற்க வைத்திருக்கிறார்கள். அங்கேயே வாழையிலை விரித்து தேங்காய்,பழம் எல்லாம் வைத்து ஒரு கிண்ணத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அம்மா பூஜைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறாள்.
அம்மா.....என்னம்மா குழந்தைங்கள கூட்டிட்டு வரேன் வாசல்ல விறகடுப்பு வச்சு பொங்கல் வைக்கலாம்னு சொன்னேன்ல....
ஸ்பூன்ல கொஞ்சம் சாப்டு :
இறங்கினதும் தார் ரோடு, வண்டிங்க போய்ட்டு வந்துட்டு இருக்குற இடத்துல நீ பொங்க வச்சா.... பொங்கப்பானையோட போலீஸ்காரன் நம்மள கொண்டு போய்ருவான்.
டெய்லி வாசத் தெளிச்சு கோலம் போட முடியலன்னு ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருக்கேன். ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்க முடியாது கொலஸ்ட்ரால் அதிகம், மூட்டு வலி உங்கப்பாவுக்கு வேற சுகர் இருக்கு. சர்க்கரை கம்மியா நாலு பேரு கொஞ்சம் சாப்டுற மாதிரி பொங்கல குக்கர்லயே வச்சிட்டேன் . ஸ்பூன் போட்டுத் தரேன் உக்காந்து சாப்டு. மதியம் தியேட்டர் போலாம்.
எந்த லோகத்துலடா இருக்க :
எனக்கு ஒரு கணம் திக்கென்றது. அம்மாவா இப்டி பேசுவது மூன்று நாட்கள் பொங்கலுக்கு ஐந்து டிரஸ்களுடனும் ஸ்வீட் டப்பாவுடனும் ஊருக்கு வந்திறங்கிய குழந்தைகளுக்கு இது தான் பொங்கல்.பொங்கல் தினம் என்றால், ஸ்பூனில் பொங்கல் சாப்பிடுவார்கள் எல்லாரும் செல்ஃபி எடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை.
அப்போது தன் அமெரிக்கா வாழ் பேத்தியை தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த மாரி அண்ணனை பார்த்தேன். என்ன அண்ணா.... பேத்தி வந்திருக்கா போல? நாளைக்கு ஜல்லிக்கட்டுக்கு வருவீங்கள்ள....
என்னது ஜல்லிக்கட்டா? எந்த லோகத்துலடா இருக்க... அதெல்லாம் விட்டு நாலஞ்சு வருசமாச்சு.
வருங்காலமே மன்னித்து விடு :
வீட்ல இருபது மாடுகிட்ட வச்சிருந்தல்லண்ணா...
எல்லாம் கொடுத்தாச்சு.. தொழுவத்துல இரண்டு மாடி வீடு கட்டியாச்சு அத வாடகைக்கு விட்ருக்கேன். பொண்ணு வெளிநாட்டுல இருக்கா பையன் பெங்களூருல செட்டில் ஆகிட்டான். இப்பதான் ரெண்டு பேரும் வந்திருக்காங்க இது பேத்தி அமெரிக்காவுலருந்த தாத்தாவ பாக்க வந்திருக்காங்க என்று காட்டினார்.
புள்ளைக்கு வேர்க்குது ஏசி வாங்கி மாட்டச்சொல்லணும் வர்றப்போ குளுகுளுன்னு இருக்கும்ல அங்க அப்டி தான இருந்து பழக்கம் என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.
எனக்கு இங்கே உள்ளே வெந்து புழுங்கியது.
இந்த வருடம் :
இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறை. மறுநாள் திங்கட் கிழமைக்கு வழக்கம் போல குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் நாங்கள் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும்.
ஸ்கைப்பில் ஊரில் இருக்கும் அம்மா அப்பவுடன் பேசுவதும், வெளியே ஹோட்டலுக்குச் செல்வதுடன் எங்களின் பொங்கல் கொண்டாட்டம் முடிந்திடும்.
எளிமையையும்,பண்டிகைகளையும், கலாச்சாரத்தையும் கூட நாஸ்டாலஜி என்று சொல்லிக் கொள்ள வேண்டிய ‘பெருமையை'நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
உலக சர்வாதிகாரிகள் பின்பற்றி வந்த சில வேடிக்கையான விஷயங்கள்!
ரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா?
நிர்மலா தேவி பத்தி மட்டும் பேசினா எப்பிடி இவரப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!
ஹைவேஸில் பெட்ஷீட் தடுப்புகளுக்கு மத்தியில் நடக்கும் பாலியல் தொழில்!
டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் - டாப் 10!
எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா?
நீச்சல் குளத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஆசிட் ஊற்றிய ஹோட்டல் மேனேஜர்!
கூடை கூடையாய் மக்களின் கைகளை வெட்டிக் குவித்த கொடூரம் !
கிம் ஜோங்-உன் மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 9 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
அமெரிக்காவையே நடுங்கச் செய்த டஸ்ட் பவுல் பற்றி தெரியுமா?
எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் இரண்டு முறை கதவை தட்டும்?... இந்த ஐஞ்சுல உங்க ராசியும் இருக்கா?...
என்கிட்ட மட்டும் அத கேட்றாதீங்கம்மா! my story #241