For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவிழாக்கள் நிறைந்த மாதம் சித்திரை

By Mayura Akilan
|

Chithirai Festival
சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன் இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில் அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தை மாதம் என்பது கால புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அது சரியல்ல.

தெய்வீக திருவிழாக்கள்

சித்திரை மாதத்திற்குப் பல சிறப்புகள் இருப்பதை புராணங்கள் மூலம் அறியலாம்.தமிழகத்தில் பல கோவில்களில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதைக் காண்கிறோம். இவ்விழாவை வடநாட்டில் "பைசாகி' என்று கொண்டாடுகிறார்கள்.

மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.

தெய்வீக அவதாரம்

சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீராமபிரான் அவதரித்ததும் ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் சித்திரையில்தான்.

விஷ்ணு அவதாரம்

சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக அவதாரம் செய்தார். ஆகவே, அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

சித்ர குப்தன் தோற்றம்

சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம். சி‌த்ரா பவு‌ர்ண‌மி, எமதர்மராஜனின் கணக்கரான சித்திர குப்தரின் ப்ரீதிக்காக கொண்டாடப்படுகிறது. சித்திரகுப்தனை திருப்தி செய்ய விரதம் இருந்து வழிபடுவது ந‌‌ம்முடைய வழக்கம். விரதம் அனுஷ்டிக்கும் நா‌‌ட்க‌ளி‌ல் பசும் பால், மோர் உ‌ண்ண‌க் கூடாது. ஆனால், எருமைப் பால் சா‌ப்‌பிடலா‌ம் அ‌தி‌ல் உப்பு சேர்க்கக் கூடாது.

பயத்தம் பருப்பும், எருமைப் பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்வது மிகச் சிறப்பாகும். பூஜையை முடித்துவிட்டு சித்திரகுப்தரை பயபக்தியுடன் த‌ரி‌சி‌க்க வேண்டும். அதே போல் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

அட்சய திரிதியை

சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்லபட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும். எந்தப்பொருள் வாங்கினாலும், எந்த செயல் செய்தாலும் அது மூன்று மடங்காக பெருகும் என நம்பப்படுகிறது.

சித்திரை திருவிழா

சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும். சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

நடராஜர் அபிஷேகம்

வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

English summary

Celestial festival month of Chitirai | திருவிழாக்கள் நிறைந்த மாதம் சித்திரை

Chithirai Masam or Chitirai month is the first Tamil month according to Tamil Panchangam followed by people of Tamilnadu, India. Chithirai Pournami and Thirukkalyanam or Celestial Wedding Festival at Madurai Meenakshi Temple are the main festival and auspicious events in the Tamil month of Chithirai.
Story first published: Thursday, March 15, 2012, 18:11 [IST]
Desktop Bottom Promotion