வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்..

Vastu Tips: இந்து மதத்தில் துளசி செடிக்கு சிறப்பான இடம் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட துளசி செடியானது வெறும் செடி மட்டுமல்ல, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இந்த லட்சுமி தேவி விஷ்ணு பகவானின் மனைவி என்பதால், விஷ்ணு வழிபாட்டில் துளசி முக்கிய பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட துளசி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது.

Vastu Tips Never Keep These Plants Near the Tulsi Plant According To Vastu Shastra

வாஸ்துப்படி துளசி செடியை வீட்டில் வளர்த்தால், அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொண்டு வரும். எனவே தான் பெரும்பாலான வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு வருகிறது. வாஸ்துப்படி வீட்டில் வளர்க்கும் துளசி செடியை சரியான இடத்தில், சரியான திசையில் வைத்து வளர்த்தால் தான், அதன் மூலம் நன்மைகளைப் பெற முடியும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, துளசி செடியை வளர்க்கும் போது அதற்கு அருகில் சில செடிகளை வைக்கும் போது, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தடைப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதாவது அந்த செடிகளானது துளசியின் ஆற்றலைக் குறைத்து, வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

ஏனென்றால், வாஸ்துப்படி ஒவ்வொரு செடிக்கும் தனித்துவமான ஆற்றல் உண்டு. அதில் துளசி நேர்மறை ஆற்றலின் சின்னம் என்பதால், அதன் அருகில் வைக்கப்படும் மற்ற செடிகளானது அந்த நேர்மறை ஆற்றலுக்கு துணைபுரிந்து, அதை அதிகரிப்பவையாக இருக்க வேண்டும். அதைவிட்டு தவறான செடிகளை துளசியின் அருகில் வைக்கும் போது, அது வீட்டில் பிரச்சனைகளை அதிகரித்து பதற்றத்தையும், வாக்குவாதத்தையும் அதிகரிக்கும். சரி, துளசி செடிக்கு அருகில் எந்த வகையான செடிகளை வைக்கக்கூடாது என்று கேட்கலாம். இப்போது துளசி செடிக்கு அருகில் வைக்கக்கூடாத செடிகள் எவையென்பதைக் காண்போம்.

கற்றாழை

துளசி செடிக்கு அருகில் முட்கள் நிறைந்த செடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டுமென வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கற்றாழை செடியானது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடாது. எனவே இதை துளசிக்கு அருகில் வைக்கும் போது, வீட்டில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகளையும், இடைவெளியையும் அதிகரித்துவிடும்.

புளிய மரம்

துளசி செடிக்கு அருகில் வளர்க்கக்கூடாத மற்றொன்று தான் புளிய மரம். வீட்டில் புளிய மரத்தை வளர்த்தால், அது வீட்டில் கனமான அல்லது இறுக்கமான சூழலை உருவாக்கி, உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட புளிய மரத்தை துளசிக்கு அருகில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அரச மரம்

என்ன தான் அரச மரம் புனிதமான மரமாக கருதப்பட்டாலும், அதை வீட்டு வளாகத்திலோ அல்லது துளசி செடிக்கு அருகிலோ வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அரச மரத்தின் ஆற்றல் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வளர்த்தால், அது வீட்டில் ஆற்றல் சமநிலையை கெடுக்கும். எனவே இப்படியான மரத்தை துளசி செடியில் இருந்து தள்ளி வைத்து வளர்த்து வாருங்கள்.

எந்த செடிகளை துளசி செடிக்கு அருகில் வளர்க்கலாம்?

துளசி செடிக்கு அருகில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் துணைச் செடிகளை வைத்து வளர்ப்பது நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. அதுவும் துளசிக்கு அருகில் மணி பிளாண்ட், பூச்செடிகள், அசோக மரம் போன்றவற்றை வைத்து வளர்ப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியான சூழலையும், நல்ல செழிப்பையும் கொண்டு வரும்.

மேலும் துளசி செடியைச் சுற்றியுள்ள பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக வீட்டில் துளசி செடியை வைக்க மிகச் சிறந்த திசை வடகிழக்கு ஆகும். ஒருவேளை இந்த திசையில் முடியாவிட்டால், வடக்கும் மற்றும் கிழக்கு திசைகளிலும் வளர்க்கலாம். ஆனால் தென்கிழக்கு திசையில் மட்டும் வைத்து வளர்க்கக்கூடாது. ஏனெனில் இது நெருப்பு திசையாகும்.

சரியான செடிகளைத் தேர்ந்தெடுப்பது வீட்டில் அமைதியையும் செழிப்பையும் பேண உதவுகிறது. அதே சமயம் தவறான செடிகளை நடுவது தேவையற்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறவாதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, October 8, 2026, 19:20 [IST]
Desktop Bottom Promotion