Latest Updates
-
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
World Meningitis Day 2026: மூளைக்காய்ச்சல் என்பது சில மணிநேரங்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான நோயாகும். இந்த மூளைக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 ஆம் தேதி உலக மூளைக்காய்ச்சல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சவ்வுகளில் ஏற்படும் அழற்சியே மூளைக்காய்ச்சல் (Meningitis) எனப்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரையும் பாதிக்கக்கூடியது. சில வகையான மூளைக்காய்ச்சல் மிகவும் தீவிரமானதாக இருப்பதால், ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
இன்று உலக மூளைக்காய்ச்சல் தினம் என்பதால் மூளைக்காய்ச்சல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள், யார் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இதைத் தடுப்பது எப்படி என்பன குறித்து சென்னையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோயியல் துறையின் தலைவர் மற்றும் இயக்குநரான டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?
"மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புச் சவ்வுகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் அழற்சியே மூளைக்காய்ச்சல் (Meningitis). இது பெரும்பாலும் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகளாலும் ஏற்படலாம்.
இவற்றில் பாக்டீரியாவால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் (Bacterial Meningitis) மிகவும் தீவிரமானது. இது விரைவாக மோசமடையக்கூடியதால் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும்." என்று டாக்டர் கூறினார்.
முக்கிய அறிகுறிகள் என்ன?
"மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் திடீரெனவோ அல்லது சில நாட்களில் படிப்படியாகவோ தோன்றலாம். அதில் சில பொதுவான அறிகுறிகளாவன:
* அதிக காய்ச்சல்
* கடுமையான தலைவலி
* கழுத்துப் பகுதியில் இறுக்கம்
* குமட்டல் மற்றும் வாந்தி
* வெளிச்சத்தைப் பார்க்கும்போது அசௌகரியம்
* குழப்பம் அல்லது அதிக தூக்கம்
* வலிப்பு
அதுவும் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளில் தொடர்ந்து அழுதல், பால் குடிக்க மறுத்தல், அதிக எரிச்சல், வழக்கத்திற்கு மாறாக தூங்குதல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். அதிக காய்ச்சலுடன் கடுமையான தலைவலி, கழுத்து இறுக்கம், குழப்பம் அல்லது வலிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
மூளைக்காய்ச்சலுக்கான காரணங்கள் என்ன?
"மூளைக்காய்ச்சலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் முக்கிய காரணங்களாகும். இது தவிர, சில பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகளும் காரணமாக இருக்கலாம்.
அரிதான சந்தர்ப்பங்களில் சில மருந்துகள், புற்றுநோய் அல்லது தன்னைத் தானே தாக்கும் நோயெதிர்ப்பு கோளாறுகள் போன்ற காரணங்களாலும் மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்." என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறினார்.
யாருக்கு அதிக ஆபத்து?
" யாருக்கு வேண்டுமானாலும் மூளைக்காய்ச்சல் ஏற்படலாம் என்றாலும், சிலருக்கு ஆபத்து அதிகமாக இருக்கலாம். குறிப்பாக கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் இதில் அடங்குவர்.
முக்கியமாக மண்ணீரல் செயல்பாடு இல்லாதவர்களுக்கும் சில வகையான தொற்றுகளுக்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம். அதிகமான மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களிலும் சில வகையான தொற்றுகள் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது." என்று டாக்டர் கூறினார்.
மூளைக்காய்ச்சலைத் தடுக்க முடியுமா?
"சில வகையான மூளைக்காய்ச்சலைத் தடுப்பதில் தடுப்பூசிகள் (Vaccines) முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான தடுப்பூசிகளை சரியான காலத்தில் செலுத்திக் கொள்வது அவசியம்.
மேலும், கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின் போது வாயையும் மூக்கையும் மூடுதல், உடல்நிலை சரியில்லாதவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் மற்றும் தனிப்பட்ட பொருட்களை மற்றவர்களுடன் பகிராமல் இருப்பது போன்ற பழக்கங்களும் தொற்று பரவுவதைக் குறைக்க உதவும்.
மூளைக்காய்ச்சல் சில நேரங்களில் மிக வேகமாக தீவிரமடையக்கூடும். எனவே அதன் அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பதும், சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவதும் மிகவும் முக்கியம்." என்று டாக்டர் கூறினார்.
எனவே இந்த உலக மூளைக்காய்ச்சல் தினத்தில், மூளைக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாப்போம்.



Click it and Unblock the Notifications



