சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!

World Lung Day 2026: நாம் உயிர்வாழ நுரையீரல் மிகவும் இன்றியமையாதவை. இந்த நுரையீரலின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சுவாச நோய்களின் சுமையைக் குறைப்பதன் அவசரத் தேவையை உணர்த்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலக நுரையீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நுரையீரல் தான் ஒவ்வொரு மூச்சின் போதும் உடலுக்குப் புத்துணர்ச்சியான ஆக்ஸிஜனை வழங்கி, கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன. நமது உடல் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலை உருவாக்க, செல்களுக்கு இந்த ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்த ஆக்ஸிஜனை சீரான முறையில் பெற வேண்டுமானால், நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

World Lung Day 2026 How Long Does It Take For Lungs To Clear Cigarette Smoke Pulmonologist Explains

ஆனால் இந்த நுரையீரலின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் வகையில் ஒரு மோசமான பழக்கம் மக்களிடையே உள்ளது. அது தான் புகைப்பிடிப்பது. புகைப்பிடிக்கும் போது ஆயிரக்கணக்கான நச்சு கெமிக்கல்கள் மற்றும் தார் சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து, சுவாச பாதைகளை சேதப்படுத்துவதோடு, நுரையீரல் திசுக்களையும் அழிக்கத் தொடங்குகிறது.

தற்போது புகைப்பிடிப்போர் பலரும் அதன் மோசமான விளைவுகளை அறிந்து, அப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கின்றனர். மேலும் சிகரெட் பழக்கத்தை கைவிட்டால் நுரையீரலில் ஏற்பட்ட சேதங்கள் சரியாகிவிடுமா மற்றும் எவ்வளவு காலம் ஆகும் என்பன போன்ற கேள்விகள் எழக்கூடும்.

இன்று உலக நுரையீரல் தினம் என்பதால், இத்தினத்தை முன்னிட்டு சிகரெட் புகைப்பதை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து சென்னை க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர். சுரேஷ் சகாதேவன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "சிகரெட் புகை காற்றில் மறைந்துவிட்டால், அது நம் உடலையும் விட்டு வெளியேறிவிட்டது என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், நான் எனது நோயாளிகளிடம் அடிக்கடி சொல்வது ஒன்று தான். சில நொடிகளில் மறைந்துவிடும் புகை, நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் நீண்ட காலம் நீடிக்கக்கூடும்.

World Lung Day 2026 How Long Does It Take For Lungs To Clear Cigarette Smoke Pulmonologist Explains

நீங்கள் சிகரெட்டைப் புகைக்கும் போது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பல வேதிப்பொருட்கள் உட்பட ஆயிரக்கணக்கான இரசாயனங்களுக்கு உங்கள் உடல் ஆளாகிறது. இதன் பாதிப்புகள் நுரையீரலில் உடனடியாகத் தொடங்குகின்றன.

புகையிலையில் உள்ள நுண்ணிய துகள்கள் மற்றும் பிற வேதிப்பொருட்கள் சுவாசக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. சளி உற்பத்தியை அதிகரிப்பதுடன், நுரையீரலில் உள்ள சளி மற்றும் தூசித் துகள்களை வெளியேற்ற உதவும் மிக நுண்ணிய முடி போன்ற அமைப்புகளான சிலியாவின் (Cilia) செயல்பாட்டையும் பாதிக்கின்றன. இதன் காரணமாகவே, இளம் வயதிலேயே புகைப்பிடிப்பவர்களுக்குத் தொடர்ந்து இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் அதிகப்படியான சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன." என்று டாக்டர் கூறினார்.

புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரல் மீள எவ்வளவு காலம் ஆகும்?

"இதற்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே கால அளவு கிடையாது. ஒருவர் எத்தனை ஆண்டுகளாகப் புகைப்பிடிக்கிறார், தினமும் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறார், ஏற்கனவே நுரையீரலில் பாதிப்பு உள்ளதா என்பதையெல்லாம் பொறுத்து குணமடையும் காலம் மாறுபடும்.

கடைசி சிகரெட்டைப் புகைத்த உடனேயே உடலில் சில மாற்றங்கள் சீராகத் தொடங்குகின்றன. ஆனால், சுவாசக் குழாய்களும் சிலியா எனப்படும் நுண்ணிய அமைப்புகளும் முழுமையாக மீள்வதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது.

புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு, இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு குறையத் தொடங்குகிறது. நிகோட்டினும் ஒப்பீட்டளவில் விரைவாக உடலை விட்டு வெளியேறுகிறது.

World Lung Day 2026 How Long Does It Take For Lungs To Clear Cigarette Smoke Pulmonologist Explains

இருப்பினும், தொடர்ந்து புகையைச் சுவாசிப்பதால் ஏற்பட்ட வீக்கமும், எரிச்சலும் உடனடியாக மறைந்துவிடுவதில்லை. நுரையீரல் தனது இயல்பான சுத்திகரிப்பு செயல்பாட்டை மீட்டெடுக்கவும், சளி உற்பத்தியைக் குறைக்கவும், தொடர்ந்து ஏற்பட்ட எரிச்சலில் இருந்து மீளவும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஒரு நாளைக்கு குறைவான எண்ணிக்கையில் சிகரெட் புகைப்பவர்களுக்குக்கூட சுவாசக் குழாய்களில் வீக்கமும் நுரையீரல் செயல்பாட்டில் அளவிடக்கூடிய மாற்றங்களும் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, சிகரெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதற்காக, குறைவாகவோ எப்போதாவது மட்டுமோ புகைப்பிடிப்பது பாதிப்பில்லாதது என்று நான் கருதுவதில்லை." என்று டாக்டர் சுரேஷ் சகாதேவன் கூறினார்.

World Lung Day 2026 How Long Does It Take For Lungs To Clear Cigarette Smoke Pulmonologist Explains

இளம் வயதிலேயே நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது ஏன்?

"எனது மருத்துவப் பணியில், ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும் பல நோயாளிகளை நான் சந்திக்கிறேன்.

காலையில் எழுந்தவுடன் இருமல், உடற்பயிற்சி செய்யும் போது விரைவில் மூச்சு வாங்குதல், மூச்சு விடும்போது விசில் போன்ற சத்தம் (Wheezing) அல்லது அடிக்கடி சுவாசத் தொற்றுகள் (Respiratory infections) ஏற்படும் போது தான் புகைப்பிடிப்பது நுரையீரலைப் பாதிக்கிறது என்பதைப் பலர் உணர்கிறார்கள். ஆனால், அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதற்காக நுரையீரலில் பாதிப்பு இல்லை என்று அர்த்தமல்ல." என்று டாக்டர் கூறினார்.

World Lung Day 2026 How Long Does It Take For Lungs To Clear Cigarette Smoke Pulmonologist Explains

புகைப்பிடிப்பதை நிறுத்தினால் நுரையீரல் மீண்டும் குணமடையுமா?

"நம்பிக்கையளிக்கும் விஷயம் என்னவென்றால், புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலுக்கு ஓரளவு மீண்டு வரும் திறன் உள்ளது. புகைப்பிடிப்பதை நிறுத்திய குறுகிய காலத்திலேயே, உடலில் உள்ள கார்பன் மோனாக்சைடு வெளியேறத் தொடங்குகிறது. புகைப்பிடிப்பதால் ஏற்பட்ட பிற பாதிப்புகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கின்றன.

அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் இருமலும் மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களும் குறையலாம். சுவாசக் குழாய்களில் உள்ள சிலியா மீண்டும் சளி மற்றும் நுண்ணிய துகள்களை வெளியேற்றும் திறனைப் படிப்படியாகப் பெறுகின்றன. ஒருவர் எவ்வளவு நீண்ட காலம் புகைப்பிடிக்காமல் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்." என்று டாக்டர் கூறினார்.

World Lung Day 2026 How Long Does It Take For Lungs To Clear Cigarette Smoke Pulmonologist Explains

உலக நுரையீரல் தினத்தில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

"மூச்சுத் திணறல் அல்லது நுரையீரல் பிரச்சினை ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதையே நான் குறிப்பாக வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு சிகரெட்டும் சுவாசக் குழாய்களைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொருட்களை நுரையீரலுக்குள் கொண்டு செல்கிறது. இது நாள்பட்ட சுவாச நோய்கள் (Chronic respiratory diseases) மற்றும் நுரையீரல் புற்றுநோய் (Lung cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

பல ஆண்டுகளாகப் புகைப்பிடித்து வந்தவர்களுக்குக் கூட அதை நிறுத்துவதால் நன்மைகள் கிடைக்கும். நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் மன உறுதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. முறையான அணுகுமுறை இந்தப் பயணத்தை எளிதாக்கும்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு தேதியைத் தீர்மானியுங்கள். காலையில் தேநீர் அருந்துவது, வேலை இடைவேளைகள் அல்லது மது அருந்துவது போன்ற புகைப்பிடிக்கத் தூண்டும் சூழல்களைக் (Triggers) கண்டறியுங்கள்.

உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். நிகோட்டின் சார்பு உள்ளவர்களுக்கு, நிகோட்டின் மாற்றுச் சிகிச்சை மற்றும் ஆலோசனை போன்றவை மருத்துவக் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் புகைப்பிடிப்பதை நிறுத்தும் திட்டத்தின் பயனுள்ள பகுதிகளாக இருக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.

மொத்தத்தில், புகை சில நொடிகளில் மறைந்துவிடலாம். ஆனால், நுரையீரல் மீண்டு வருவதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. நீங்கள் எவ்வளவு விரைவாகப் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமான வாய்ப்பை உங்கள் நுரையீரல் குணமடைவதற்கும், எதிர்காலத்தில் உங்கள் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் வழங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, September 25, 2026, 14:44 [IST]
Desktop Bottom Promotion