உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் சில அன்றாட பழக்கங்கள்!

Subscribe to Boldsky

நம் உடலை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பாற்றி பாதுகாப்பு அளிப்பது நமது நோயெதிர்ப்பு மண்டலம் ஆகும். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்று அர்த்தம். அதிலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இருந்தால், பாக்டீரியா, வைரஸ் மற்றும் உடலைத் தாக்கும் இதர நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஒரு நல்ல பாதுகாப்பு கவசமாக இருக்கும்.

அதுவே ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி சளி, சைனஸ் தொற்றுகள், காயங்கள் குணமாவதில் தாமதம், சில சமயங்களில் இரத்த சோகை, மிகுதியான சோர்வு மற்றும் சோம்பல் போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே தான் உடல்நல நிபுணர்கள், ஒவ்வொருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமையுடன் வைத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

Everyday Habits that Harm Your Immune System

நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான மற்றும் வலிமையான செயல்பாட்டில் டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சிகள் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் நமது அன்றாட சில பொதுவான பழக்கவழக்கங்களால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, வலிமையை இழக்கிறது. பொதுவாக, வயது அதிகரிக்கும் போது, அன்றாட பழக்கவழக்கங்களால் நோயெதிர்ப்பு மண்டலம் நேரடியாக பாதிக்கப்படும். ஆகவே நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இருக்க வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை விட்டு ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்.

இக்கட்டுரையில் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் அன்றாட பழக்கவழக்கங்கள் எவையென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அப்பழக்கங்களைக் கைவிட்டு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது

இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது

நீங்கள் அலுவலகத்தில் நைட் ஷிப்ட் செய்தாலோ அல்லது இரவு நேரத்தில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தாலோ அல்லது இதர வேலைகளை செய்தாலோ, அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். மோசமான தூக்க பழக்கங்கள் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைப்பதோடு, கிருமிகளை எதிர்த்து அழிக்கும் சக்தியும் குறையும். பொதுவாக ஒருவர் தூங்கும் போது நோயெதிர்ப்பு மண்டலம் பல்வேறு வகையான சைட்டோகீன்களை வெளியிட்டு, தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும். இத்தகைய தூக்கம் பாதிக்கப்படும் போது, இந்த சைட்டோகீன்களின் வெளியீடு பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சுகாதாரத்துடன் இல்லாமை

சுகாதாரத்துடன் இல்லாமை

நோயெதிர்ப்பு மண்டலம் என்று வரும் போது, முறையான சுகாதாரம் மிகவும் அவசியம். ஒருவர் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் இல்லாவிட்டால், அதனால் நிச்சயம் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். ஆரோக்கியமற்ற பழக்கங்கள் தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் அபாயத்தை அதிகரித்து, தொற்றுக்கள் மற்றம் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே நல்ல சுகாதார பழக்கங்களான தினமும் 2 முறை பற்களைத் துலக்குவது, உணவு உண்ணும் முன் கைகளைக் கழுவுவது, கழிவறை சென்று வந்த பின் கைகளைக் கழுவுவது, நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது, தினமும் குளிப்பது, சுத்தமான முறையில் சமைப்பது, சுத்தமான துணிகளை அணிவது மற்றும் பலவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பொதுவான பொருட்களைப் பயன்படுத்துவது

பொதுவான பொருட்களைப் பயன்படுத்துவது

நீங்கள் வீட்டை சுத்தமாகவும், சுகதாரத்துடனும் வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் வெளியே செல்லும் போது எப்படி? அதாவது ஹோட்டல்கள், சூப்பர் மார்கெட்டுகள் சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு செல்லும் போது, அங்குள்ள பொருட்களைப் பயன்படுத்தும் போது நம் உடலில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். எனவே எப்போதும் வெளியே செல்லும் போது, அங்குள்ள பொதுவான பொருட்களைப் பயன்படுத்தி இருந்தால், வீட்டிற்கு வந்ததும் மறக்காமல் கைகளைக் கழுவுங்கள். ஒருவேளை வெளியே உணவு அல்லது ஸ்நாக்ஸ் உண்பதாக இருந்தால், கைகளை மறக்காமல் கழுவியப் பின்பு சாப்பிடுங்கள்.

அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்வது

அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்வது

நீங்கள் அடிக்கடி இனிப்பு நிறைந்த பானங்கள் அல்லது உணவுப் பொருட்களை உட்கொண்டால், உங்களது நோயெதிர்ப்பு மண்டலம் வேகமாக பலவீனமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்தால், அது கிருமிகளை அழிக்கும் இரத்த வெள்ளையணுக்களின் அளவைக் குறைக்கும். சர்க்கரை இரத்த வெள்ளையணுக்களில் இருந்து பெறப்படும் வைட்டமின் சி-யைத் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.

அதிலும் சர்க்கரை உட்கொண்ட 30 நிமிடத்திலேயே நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக ஆரம்பித்துவிடும். எனவே உங்களுக்கு ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பழங்களான ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம், கிவி, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சாப்பிடுங்கள். இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை முறையாக நடக்க உதவும்.

தண்ணீர் குடிப்பதை மறப்பது

தண்ணீர் குடிப்பதை மறப்பது

வேலை பிஸியில் இருக்கும் போது, பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுவர். உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். மனித உடலானது நீரால் ஆனது மற்றும் ஒருவர் போதுமான அளவு நீரைக் குடிக்காவிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும். எனவே நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடியுங்கள். இருப்பினும் காலநிலைக்கு ஏற்றவாறு குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

தினமும் மது அருந்துவது

தினமும் மது அருந்துவது

தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்தால், அது ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கிவிடும். ஒருவர் தினமும் மதுவைக் குடிக்கும் போது, இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையை இழக்கும். மேலும் தினமும் மதுவை அருந்தினால், அது உடலில் அத்தியாவசிய சத்துக்களை உறிஞ்ச முடியாமல் செய்து, ஊட்டச்சத்துக் குறைபாட்டினை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவு மது அருந்தும் பழக்கத்தை கைவிடுங்கள்.

புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது

புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது

நம் அனைவருக்குமே புகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது. ஆனால் அதன் புகையை சுவாசிப்போருக்கும் அந்த தாக்கம் இருக்கும் என்பது தெரியுமா? முக்கியமாக சிகரெட் புகையை ஒருவர் சுவாசித்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் தான் முதலில் பாதிக்கப்படும். இந்த புகையானது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்களை சுருங்கச் செய்து, செயல்பாட்டை முடக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தையே பலவீனமாக்கிவிடும். ஆகவே முடிந்த அளவு புகைப்பிடிப்போரின் அருகில் நிற்காதீர்கள். மற்றவர்கள் புகைப்பிடிப்பதையும் ஊக்குவிக்காதீர்கள்.

ஜங்க் உணவுகளை உண்பது

ஜங்க் உணவுகளை உண்பது

ஜங்க் உணவுகள் சுவையானதாகவும், எளிதில் தயார் செய்யக்கூடிய வகையிலும் இருக்கலாம். ஆனுல் இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லதல்ல. ஜங்க் உணவுகளில் கொழுப்புக்கள் மிகவும் அதிகம் மற்றும் அதிகப்படியான கொழுப்பு தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். அதிகளவிலான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த டயட் ஒருவரது உடல் பருமனை அதிகரிப்பதற்கு முன்பே, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கிவிடும். முக்கியமாக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களைத் தாக்க தூண்டிவிடும். இதனால் தான் உடல் பருமன் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடுகிறது. எனவே இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்கள்.

அளவுக்கு அதிகமான காப்ஃபைன்

அளவுக்கு அதிகமான காப்ஃபைன்

அளவுக்கு அதிகமாக காபி அல்லது இதர காப்ஃபைன் கலந்த பானங்களைப் பருகுவது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லதல்ல. அதிகப்படியான காப்ஃபைன் மன அழுத்த அளவை அதிகரித்து, நரம்பு மண்டலத்தை தாக்கும். ஒருவரது மன அழுத்த அளவு அதிகரித்தால், கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் வெளியீடு அதிகம் இருக்கும். கார்டிசோல் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுருங்கச் செய்து, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட வைக்கும். எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் காபியைக் குடியுங்கள்.

சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது

சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது

அதிகாலை வெயிலில் ஒருவர் சுற்றினால் உடலில் வைட்டமின் டி உற்பத்தி செய்யப்பட்டு, ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். ஆனால் எப்போது ஒருவர் கடும் வெயிலில் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் சுற்றுகிறாரோ, அப்போது நோயெதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வெயிலில் சுற்றினால், அதனால் ஹெர்பீஸ் அல்லது ஈஸ்ட் தொற்றுக்களால் அவஸ்தைப்படக்கூடும். ஏனெனில் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள், உடலில் நோய்த்தடுப்பு மாற்றத்தை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்வதாக இருந்தால் மறக்காமல் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Everyday Habits that Harm Your Immune System

    Most of your daily habits directly impact your immune system, especially as you age. To keep your immune system strong, it’s important to adopt healthy habits and quit the bad ones. Here we listed some of the habits. Take a look...
    Story first published: Friday, March 23, 2018, 12:21 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more