இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!

World Brain Tumour Day 2026: மூளைக் கட்டி என்பது மூளையில் அல்லது அதற்கு அருகில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும். இந்த மூளைக்கட்டிகள் மூளைத் திசுக்கள் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதிகளான நரம்புகள், பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி மற்றும் மூளையின் மேற்பரப்பை மூடும் சவ்வுகளில் ஏற்படலாம்.

World Brain Tumour Day 2026 8 Warning Signs You Should Never Ignore Says Doctor

இந்த முளை கட்டிகளில் பல வகைகள் உள்ளன. இது கட்டிகள் உள்ள இடத்தைப் பொறுத்தது. சில வகையான மூளைக் கட்டிகள் தீங்கு விளைவிக்காத புற்றுநோயற்ற மூளைக் கட்டிகளாக இருக்கலாம். இந்த வகை மூளைக் கட்டிகள் காலப்போக்கில் வளர்ந்து மூளையில் அழுத்தத்தைக் உண்டாக்கும். இன்னும் சில மூளைக் கட்டிகளானது மூளை புற்றுநோய்கள் ஆகும். இந்த வகை கட்டிகள் வீரியமிக்கவை. இந்த புற்றுநோய் கட்டிகள் வேகமாக வளர்வதோடு, மூளை திசுக்களுக்குள் ஊடுருவி, மூளை திசுக்களை அழிக்கக்கூடும்.

இந்த மூளைக் கட்டிகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 08 ஆம் தேதி உலக மூளைக் கட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலக மூளைக் கட்டி தினம் என்பதால், ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால் தெரியக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து ஈரோட்டைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். M. பிரபு அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "அனைத்து மூளைக் கட்டிகளும் ஆபத்தானவை அல்ல. ஆரம்பத்திலேயே இந்த கட்டிகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், முழுமையாக குணமடையலாம்" என்று கூறினார். இப்போது மக்கள் புறக்கணிக்கும் மூளைக் கட்டியின் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

1. அதிகாலை தலைவலி

காலையில் எழுந்தவுடன் எப்போதும் ஒருவர் புத்துணர்ச்சியை உணர வேண்டும். அதை விடுத்து காலையில் எழுந்ததுமே ஒருவர் தொடர் தலைவலி மற்றும் கழுத்து வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அது மூளைக் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம்.

2. காரணமில்லாத வாந்தி

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குமட்டல் உணர்வு ஏதும் இல்லாமல், திடீர் வாந்தியை சந்தித்தால், அது மூளைக் கட்டியின் முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

World Brain Tumour Day 2026 8 Warning Signs You Should Never Ignore Says Doctor

3. பார்வை மாற்றங்கள்

பார்வை மங்குதல், பொருட்கள் இரண்டாகத் தெரிவது, பார்வை குறைதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் மூளைக் கட்டியால் கண் நரம்புகள் பாதிக்கப்படும் போது, இப்படியான அறிகுறிகள் தெரியும். எனவே இந்த அறிகுறியை புறக்கணிக்கக்கூடாது.

4. உடல் சமநிலை பிரச்சனை

நடக்கும் போது தடுமாறுதல், சமநிலை இழப்பு, அடிக்கடி விழுவது போன்றவை மூளை தொடர்பான அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இப்படியான அறிகுறியானது எப்போது ஒருவரது சிறுமூளையில் பிரச்சனை உள்ளதோ அப்போது இந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும். எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

World Brain Tumour Day 2026 8 Warning Signs You Should Never Ignore Says Doctor

5. மனநிலை மற்றும் ஞாபக மாற்றங்கள்

நமது மூளையில் நிறைய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கட்டிகள் வரும் போது ஒவ்வொரு பாதிப்பு ஏற்படலாம். அதுவும் ஒருவரது முன் மூளையில் கட்டிகள் இருந்தால், அந்நபருக்கு திடீர் கோபம், நடத்தையில் மாற்றம், ஞாபக மறதி, கவனம் குறைதல் போன்ற அறிகுறிகள் தெரியும். இந்நிலையில் உடனே நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

6. திடீர் வலிப்பு

குறிப்பாக 40 வயதிற்கு மேல் வாழ்வில் முதல்முறையாக வலிப்பு வந்தால், அவரது மூளையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். ஆகவே 40 வயதிற்கு மேல் வலிப்பு வந்தால் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

7. கை, கால் பலவீனம்

உடலின் ஒரு பக்கம் பலவீனம், கை அல்லது கால் செயலிழப்பு போன்றவை உடனடி மருத்துவ கவனம் தேவைப்படக்கூடியவை.

8. காது கேளாமை

ஒரு பக்க காது கேட்கும் திறன் குறைதல் அல்லது காதில் தொடர்ந்து சத்தம் கேட்பது போன்றவை சில நேரங்களில் மூளைக்கு வெளியே உள்ள நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை காட்டலாம். எனவே இந்நிலையில் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், உடனே நரம்பியல் மருத்துவரை அணுகி காரணத்தை தெரிந்து, ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், முழுமையாக குணமடையலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, June 8, 2026, 13:12 [IST]
Desktop Bottom Promotion