நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..

Common Doubts About Soaking And Roasting Nuts: நட்ஸ்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதை அனைவரும். அளவில் சிறிதாக இருக்கும் நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. தினமும் சிறிது பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ் போன்றவற்றை உட்கொள்வது இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை தரும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Top 5 Doubts About Soaking And Roasting Nuts - Answered By Dr Arunkumar

ஆனால் நமது சமூகத்தில் இந்த நட்ஸ்கள் குறித்த பல தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளன. இதனால் நிறைய பேருக்கு நட்ஸ்களை பச்சையாக சாப்பிடலாமா, ஊறவைத்து சாப்பிட வேண்டுமா அல்லது வறுத்து சாப்பிடுவது நல்லதா என்ற கேள்விகள் எழுகின்றன. இப்படி பலரது மனதில் நட்ஸ் குறித்து உள்ள 5 கேள்விகளுக்கு ஈரோட்டைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

கேள்வி 1: நட்ஸ்களை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டுமா?

"நிச்சயம் இல்லை. 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், நட்ஸ்களை ஊற வைத்து அதில் உள்ள பைட்டிக் அமிலம் குறைந்துள்ளதா என்றும், நட்ஸ்களை துண்டுகளாக்கி அதை ஊற வைத்து அதில் உள்ள பைட்டிக் அமிலம் குறைந்துள்ளதா என்றும் பார்த்தனர். ஆனால் ஒன்றுமே குறையவில்லை. ஊற வைப்பதால் பைட்டிக் அமிலம் கரைந்து போகாது. எனவே உங்களுக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடுங்கள். நட்ஸ்களின் மேல் அழுக்குகள் இருப்பதாக தெரிந்தால், நீரில் கழுவிவிட்டு சாப்பிடுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

கேள்வி 2: நட்ஸ் அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருள். இது இதயத்திற்கு கெட்டது என்பது உண்மையா?

"கிடையவே கிடையாது. நட்ஸ்களில் பெரும்பாலும் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் தான் உள்ளன. இவை பெரிய அளவில் கொழுப்புக்களின் அளவை அதிகரிக்காது. அதுவும் வால்நட்ஸ் போன்ற நட்ஸை எடுக்கும் போது, மாரடைப்பு வரும் அபாயம் குறைவதாக ஆய்வுகளும் கூறியுள்ளன. சொல்லப்போனல் நட்ஸ்கள் ட்ரை கிளிசரைடுகளின் அளவையும், எல்டிஎல் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். எனவே நட்ஸ்கள் ஆரோக்கியமான உணவு தான். பயப்படாமல் சாப்பிடலாம்" என்று டாக்டர் கூறினார்.

கேள்வி 3: நட்ஸ்களை வறுத்தால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடும் என்பது உண்மையா?

"நிச்சயம் இல்லை. நட்ஸ்களை வறுத்தால் கொஞ்சமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சில வகையான பி வைட்டமின்கள் போன்றவை குறையலாமே தவிர, மற்றபடி புரோட்டீன், கொழுப்புகள் போன்றவை 1% கூட குறையாது. தாராளமாக வறுத்து சாப்பிட்டால் தான் நட்ஸ் பிடிக்குமானால், அப்படி வறுத்து சாப்பிடுங்கள்" என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.

கேள்வி 4: முந்திரி, வேர்க்கடலை உடல் எடையை அதிகரிக்கும் என்பது உண்மையா?

"கிடையவே கிடையாது. நட்ஸ்கள் இருப்பதிலேயே அதிகளவு கலோரிகளை கொண்ட உணவுப் பொருள். 100 கிராம் நட்ஸில் 600 கலோரிகள் உள்ளன. இதில் உணவுக்கு பதிலாகவோ அல்லது ஜங்க் உணவுகளுக்கு மாற்றாகவோ உட்கொண்டால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்க உதவும். ஆனால் மூன்று வேளையும் நன்கு உணவை உட்கொண்டு, மாலை வேளையில் இதை 100 கிராம் உட்கொண்டால், நிச்சயம் அது உடல் எடையை அதிகரிக்கும். எனவே எந்த விகிதத்தில் எடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம்" என்று டாக்டர் கூறினார்.

கேள்வி 5: நட்ஸ்கள், குறிப்பாக வேர்க்கடலையை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளக்கூடாது என்பது உண்மையா?

இது முற்றிலும் தவறு. நட்ஸ் அனைத்திலும் 100 கிராமில் 20-30 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் தான் உள்ளன. அதுவும் வேர்க்கடலையில் 15 கிராம் தான் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ், கிளைசீமி லோடு போன்றவையும் குறைவு. சொல்லப்போனால் நட்ஸ் இரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இதை ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாக 75 கிராம்-100 கிராம் வரை தான் இருக்கும். எனவே தாராளமாக சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான நட்ஸ்களையும் சாப்பிடலாம்" என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, August 4, 2026, 12:49 [IST]
Desktop Bottom Promotion