சாப்பிடும்போது புரை ஏறினால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Posted By: Gnana
Subscribe to Boldsky

இன்றைய அவசர உலகில், ஒரு வேளை உணவைக்கூட, பொறுமையாக சுவைத்து, மென்று சாப்பிட நேரமில்லாமல், நாம் ஒடிக்கொண்டே இருக்கிறோம், எல்லாம் ஒரு ஜான் வயித்துக்குத்தான் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த வயிறை நாம் பாதுகாக்கிறோமா?... அதற்கு பதிலாக இன்றைய மாறிவிட்ட ஃபாஸ்புட் பழக்கத்தால் நம்முடைய வயிறை நாம் குப்பைத்தொட்டியாக மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் உண்ணும் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அதை சரியான முறைப்படுத்தி நம்முடைய வயிற்றுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை, ஏனோ நம்மில் பலர் உணர்வதில்லை. வீட்டில் தாயோ அல்லது மனைவியோ வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும், எது நல்லது என பார்த்துபார்த்து செய்வார்கள். ஆனால் நாமோ அவசரகதியிலோ அல்லது ஸ்மார்ட்போனையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுவோம்.

Do You Have This Obstacle During Eating?

Image Source: modthesims

குழம்பு காரமா இருக்கா? பொரியல் நல்லா இருக்கா, உங்களுக்கு பிடிச்ச காரக்கறி என்று சொல்லிச்சொல்லி பரிமாறினாலும், அவர்களின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் கண்டுகொள்ளாமல் பிடித்தது, பிடிக்காதது எல்லாவற்றக்கும் ஒரேமாதிரியாக தலையாட்டிவிட்டு எழுவோம். ஆனால் அவர்கள் சுயநலம் கருதாமல் செய்யும்வேலைக்கான அங்கீகாரத்தைத் தராமல், அவர்களின் மனதில் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் விளைவிக்கிறோம்.

இது நமக்கு அன்பாக சமைத்துப் போடுபவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். அதேசமயம் நம்முடைய உடலுக்காவது நாம் உண்மையாக இருக்கிறோமா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். எப்படி தெரியுமா?...

உணவை தட்டில்வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு, மிக வேகமாக சாப்பிடுவதும் அவ்வளவு நல்லதல்ல. நொறுங்கத் தின்றால் நூறு வயது என்ற பழமொழியே தமிழில் உண்டு. அதனால்தான் நாம் வீட்டில் சாப்பிடும்போது, பெரியவர்கள் சாப்பாட்டை நன்றாக மென்று தின்ன வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள மூலக்கூறுகள் உமிழ்நீரில் கலந்து உணவு எளிதில் செரிமானமாக உதவி புரியும். அப்படி மென்று சாப்பிடும்போதுதான் நம்முடைய வயிற்றுக்கு எவ்வளவு தேவை என்பதையும் நம்மால் சரியாக உணர்ந்து சாப்பிட முடியும்.

சாப்பாட்டில் கவனம் இல்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, அரட்டை அடித்துக்கொண்டு சாப்பிடுவது, சிரிப்பது, தண்ணீர் குடித்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவற்றால் சிலசமயம் உணவுக்குழாய்க்கு போகவேண்டிய உணவு, மூச்சுக்குழாயில் தவறாக சென்றுவிடும். அப்படி கலக்கும்போதுதான் உணவு தொண்டைக்கும் மூச்சுக்குழலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு, மூச்சுவிட முடியாமல், நமக்கு புரை ஏறுகிறது.

சாப்பிடும்போது புரை ஏறுவதை, யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்வார்கள் சிலர், அப்படியெல்லாம் எதுவுமில்லை. நாம் சாப்பிடும் சாப்பிட்டின்மீது நமக்கு கவனம் இல்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.

வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ நமக்கு புரை ஏறும்போது அது நமக்கு மட்டும் சிரமத்தைத் தராது, தொண்டையில், வாயில் உள்ள உணவு, நம்மை அறியாமல் வெளியே சிதறும். இதனால் மற்றவர்களக்கு சாப்பிடும் மூடே போய்விடும். சரி. புரை ஏறுவது குறித்து எப்போதுமே நம்மால் கவனமாக இருக்க முடியாதுதான்... ஆனால் புரை ஏறியவுடன் நாம் என்ன வேண்டும் என்பதை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

புரை ஏறும்போது என்ன செய்ய வேண்டும்?

புரை ஏறியபின் மூக்கு மற்றும் வாய் அண்ணப்பகுதியில் அதிகமாக எரிச்சல் உண்டாகும். அதை உடனடியாக சரிசெய்ய என்னவெல்லாம் செய்யலாம்?

புரை ஏறியவர்களின் முதுகில் கை வைத்து, வேகமாக தட்டக்கூடாது.

பொதுவாகவே புரை ஏறினால் நாம் எல்லோருமே முதுகை வேகமாகத் தட்டிக் கொடுப்பது பழக்கம். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. புரை ஏறியவரை நேராக நிற்க வைக்க வேண்டும், புரை ஏறும் சமயத்தில் முதுகில் ஓங்கி குத்தினால், மூச்சுப் பாதையில் சிக்கிய உணவு, முற்றிலும் மூச்சை அடைத்து, உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.

புரை ஏறிய சமயத்தில், முன்பக்கம் நோக்கி குனியவைத்து, மேல் முதுகை மட்டுமே, மெதுவாக தட்ட வேண்டும். இது மூச்சுப்பாதையில் உள்ள உணவு, வெளியேற வாய்ப்பாக அமையும்.

புரை ஏறியவரின் வயிற்றில் நாபிக்கு மேல்புறம், கை முஷ்டியால் சற்று வேகமாக குத்தினாலும், சிக்கிக்கொண்டிருக்கும் உணவுப்பருக்கை வெளியேறிவிடும்.

புரை ஏறும்போது உண்டாகும் பதட்டத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதனால் உடனே அவரை மல்லாக்க படுக்க வைத்து நாபிக்கு மேல், நாடு வயிற்றில், கை விரல்களை மடக்கி, மெதுவாகக் குத்தினாலும், சுவாசப்பாதையில் சிக்கிய உணவு, வெளியேறும்.

கற்பூரவல்லி தைலம் அல்லது யூகலிப்டஸ் தைலத்தை நுகர்ந்து பார்ப்பதன் மூலமும், மூச்சுப் பாதையில் இருந்து, உணவை வெளிவரவைக்க முடியும்.

நம் வயிற்றை சாய்க்கக்கூடிய அளவில் உள்ள மேஜை அல்லது நாற்காலியின் முனைப்பகுதியில், நாபிக்கு சற்று மேலேயுள்ள நடுப்பகுதியை, வைத்து அழுத்தி வர, மூச்சுப் பாதையில் சென்று அடைத்த உணவுத் துணுக்குகள், வெளியில் வந்து விடும். சுவாசமும் சீராகும்.

தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகளை சிரிக்க வைப்பதையோ, கவனத்தைத் திசைதிருப்புவதையோ தவிர்க்க வேண்டும், அப்படி செய்யும்போது, பால் மூச்சுப்பாதையில் புகுந்து, புரை ஏறிவிடும். இதற்கு, குழந்தையை முன்பக்கம் இலேசாக குனியவைத்து, மேல் முதுகில் தட்ட, அடைத்துக்கொண்ட பால் வெளியேறும்.

சில தாய்மார்கள் படுத்துக்கொண்டே குழந்தைக்கு பாலூட்டுவார்கள். இது மிகவும் தவறான ஒரு முறையாகும், இதனால் குழந்தையின் வாய்வழியே காற்று புகுந்து, காற்றோடு கலந்த பாலால், குழந்தைகளுக்கு புரை ஏறுகிறது.

சாப்பிடும்போது புரையேறுவதற்கு வேறு சில காரணங்களும் உண்டு:

சிலருக்கு, வயிற்றில் புண் அல்லது உணவுப்பாதையில் ஏதேனும் அலர்ஜி போன்று பாதிப்ப இருந்தால் தசைகளின் செயலாற்றல் குறைந்து, உணவுடன் கலந்து கீழ்நோக்கி செல்லவேண்டிய அமிலங்கள் மேலேறிவிடும். இதனால் சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டபின் நெஞ்செரிச்சல் உண்டாக்கும். இதை நாம் அசிடிட்டி என்று சொல்வோம். சிலருக்கு அதிக நெஞ்செரிச்சல் இருக்கும்போது புரை ஏறும்.

மேலும் சிலருக்கு தூங்கும்போதுகூட, புரை ஏறக்கூடிய ஆபத்து உண்டு. அந்த சமயங்களில், அவர்களே, வயிற்றில் நாபிக்கு மேல் கை விரல்களை மடக்கி குத்திக் கொள்ளலாம். உடனே சிறிது தண்ணீர் குடிக்கலாம்.

சாப்பிட்ட உடனேயே புகைப்பிடிக்கும்போது புரை ஏறும்.

குனிந்துகொண்டே பணியாற்றக்கூடிய சிற்ப வேலை, தச்சு வேலை போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கும், புரை ஏறக்கூடிய பாதிப்புகள் ஏற்படலாம்.

English summary

Do You Have This Obstacle During Eating?

Do You Have This Obstacle During Eating?
Story first published: Sunday, March 4, 2018, 10:00 [IST]