மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த பழங்களை அதிகமா சாப்பிடுங்க..

Fruits For Cold In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. மழைக்காலம் தொடங்கினாலே சளி பிடிக்கத் தொடங்கிவிடும். இப்படி சளி பிடிக்காமல் இருக்க, நிறைய பேர் முதலில் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் பழங்கள் ஒன்றும் சளி பிடிக்க காரணமாக இருப்பதில்லை. சொல்லப்போனால் பழங்களில் உள்ள ஏராளமான சத்துக்கள், சளி பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். எனவே இதுவரை நீங்கள் மழைக்காலத்தில் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தால், முதலில் அந்த தவறான பழக்கத்தை கைவிடுங்கள்.

அதுவும் சில பழங்களை சளி பிடிக்காமல் இருக்க மட்டுமின்றி, சளி பிடித்திருக்கும் போது சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, விரைவில் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம். அதற்காக அனைத்து பழங்களுமே சளிக்கு நல்லதல்ல. குறிப்பிட்ட சில பழங்கள் மட்டுமே நல்ல பலனைத் தரும். இதுக்குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Monsoon Health Tips Doctor Lists Top 8 Fruits To Eat To Avoid Catching A Cold

அதில் அவர் கூறியதாவது, "ஏற்கனவே சளி பிடித்திருந்தாலும் சரி, இனிமேல் சனி பிடிப்பதை தடுக்க வேண்டுமானாலும் சரி, பழங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் எல்லா பழங்களையும் அல்ல, குறிப்பிட்ட சில பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்" என்று கூறினார். அதோடு சளி பிடித்திருக்கும் போது சாப்பிட வேண்டிய 8 பழங்களைக் குறித்தும் கூறியுள்ளார். அந்த பழங்கள் பின்வருமாறு:

1. ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டு சத்துக்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். அதோடு சளி பிடிக்காமலும் தடுக்கும். என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார். எனவே மழை நேரத்தில் சளி பிடிக்காமல் இருக்க ஆப்பிளை சாப்பிடுங்கள். சளி பிடித்திருந்தாலும், ஆப்பிளை சாப்பிட மறுக்காதீர்கள்.

2. வாழைப்பழம்

"வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு நல்லது. மேலும் இது மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்." என்று டாக்டர் கூறினார். எனவே மழைக்காலத்தில் இதுவரை வாழைப்பழம் சாப்பிடுவதை குறைத்து வந்தால், இனிமேல் தவிர்க்காமல் உட்கொள்ளுங்கள்.

3. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

சளி பிடித்திருந்தால் பலரும் தவிர்க்கும் முக்கியமான பழம் ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை தான். ஆனால் இந்த ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று டாக்டர் கூறினார். எனவே இனிமேல் இந்த பழங்களை தவிர்க்காமல், மழை நேரத்தில் சாப்பிடுங்கள்.

4. அன்னாசி

சளி பிடித்திருக்கும் போதும், சளி பிடிக்காமல் இருக்கவும் சாப்பிடக்கூடிய மற்றொரு பழம் தான் அன்னாசி. இந்த அன்னாசி பழத்தில் உள்ள ப்ளேவோனாய்டுகள், சளி பிடிக்காமல் தடுக்கக்கூடியது மற்றும் சர்க்கரை நோயாளிகளும் அன்னாசியை ஒரு துண்டு சாப்பிடலாம் என்று டாக்டர் கூறினார். எனவே நீங்கள் அன்னாசி பிரியர் என்றால், சளி பிடித்திருந்தாலும் ரசித்து சாப்பிடுங்கள்.

5. தர்பூசணி

அடுத்ததாக, சளி பிடித்திருந்தாலும் சாப்பிட வேண்டிய மற்றொரு பழம் தான் தர்பூசணி. நிறைய பேர் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை மழை நேரத்தில் உட்கொண்டால், சளி பிடிக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் தர்பூசணியில் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன் உள்ளது. இதை உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து சளி பிடிப்பது தடுக்கப்படும்.

6. மாதுளை

மாதுளையும் பெரும்பாலானோரால் மழை காலத்தில் தவிர்க்கப்படும் பழமாகும். ஆனால் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால் சளி பிடிப்பதைத் தடுக்கலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.

அடுத்த இரண்டும் பழங்கள் கிடையாது. அவை தேங்காய் மற்றும் பேரிச்சம் பழம். இவ்விரண்டையும் மழைக்காலத்தில் உட்கொண்டு வந்தால், சளி பிடிக்காமல் இருப்பதோடு, சளி பிடித்திருந்தாலும் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! இதுவரை மழைக்காலத்தில் பழங்களை தவிர்த்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாமல், மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை உட்கொண்டு வாருங்கள். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி பிடிக்காமல் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

Take a Poll

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion