சானிட்டரி பேடுகள், டேம்பான்கள், மாதவிடாய் கப்புகள் - இவற்றில் சிறந்தது எது தெரியுமா?

Menstrual Hygiene Day 2025: மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் ஒரு முக்கியமான செயல்முறையாகும். இந்த மாதவிடாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இந்த மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், அதன் விளைவாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உலகெங்கிலும் இன்னும் பல பெண்கள் முறையான மாதவிடாய் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காமல் பலவிதமான தொற்றுகளுக்கு ஆளாகி அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படுகிறது.

Menstrual Hygiene Day 2025 Sanitary Pads Tampons Menstrual Cup- Which Is Best For Menstrual Health

மாதவிடாய் சுகாதாரம் ஏன் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியம்?

இளமைப் பருவத்தில் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை நீடிக்கும் மாதவிடாய் சுழற்சியின் போது, ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தமாக இல்லாவிட்டால், அதாவது சானிட்டரி நாப்கின்கள் அல்லது பேடுகள், டேம்பான்கள், மாதவிடாய் கப்புகள் போன்றவற்றை பயன்படுத்தும் போது, அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சுத்தம் செய்யாமல், நீண்ட நேரம் பயன்படுத்தினால், அதன் விளைவாக யோனி பகுதியில் மற்றும் இனப்பெருக்க பாதைகளில் கடுமையான தொற்றுக்களை ஏற்படுத்திவிடும்.

அதுவும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தினால், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கி, தொற்றுகள் ஏற்பட தொடங்கிவிடும். "முக்கியமாக மாதவிடாய் சுகாதாரம் பராமரிக்கப்படாவிட்டால், பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று, இடுப்பு தொற்று, இனப்பெருக்க பாதை தொற்று ஏற்படுவது மட்டுமின்றி, கருவுறாமை பிரச்சனையையும் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக பெண்ணின் பிறப்புறுப்பு சிறுநீர் அமைப்பில் தீவிரமான பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படலாம்" என்று மகப்பேறு மருத்துவர் டாக்டர். M.மீனா கூறினார்.

சானிட்டரி பேடுகள், டேம்பான்கள், மாதவிடாய் கப்புகள் - இவற்றில் எது சிறந்தது?

தற்போது பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார பொருட்கள் அதிகம் உள்ளன. அவை சானிட்டரி நாப்கின்கள் அல்லது பேட்கள், டேம்பான்கள், மாதவிடாய் கப்புகள் போன்றவை. இதில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தக்கூடியது என்றால், அது சானிட்டரி நாப்கின்கள் தான். அதே சமயம் கல்லூரிக்கு, அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களிடையே பேடுகள் மட்டுமின்றி, டேம்பான்கள், மாதவிடாய் கப்புகள் போன்றவை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நிறைய பெண்களின் பெண்களின் மனதில் இருக்கும் ஒரு கேள்வி, இவற்றில் எது சிறந்தது என்பதாகவே உள்ளது.

இதுக்குறித்து மகப்பேறு மருத்துவர் மீனா கூறுகையில், "பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி பேடுகள், டேம்பான்கள், மாதவிடாய் கப்புகள் போன்றவை பராமரிப்பின் அடிப்படையில், ஒவ்வொன்றும் அதன் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளன. சானிட்டரி பேடுகள் மற்றும டேம்பான்களை எடுத்துக் கொண்டால், இவ்விரண்டிற்கும் மாதந்தோறும் குறிப்பிட்ட பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அதுவும் நல்ல தரமான சானிட்டரி பேடுகளை வாங்க வேண்டுமானால், அதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் பல பெண்கள் பணப்பற்றாக்குறையின் காரணமாக, அடிக்கடி பேடுகளை மாற்ற யோசிப்பார்கள்.

பொதுவாக பேடுகள், டேம்பான்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அது அவை நிரம்பினாலும் சரி, நிரம்பாவிட்டாலும் சரி மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால், கிருமிகள் வளரத் தொங்கி தொற்றுகளை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு பெண் சானிட்டரி பேடுகள் மற்றும் டேம்பான்களை சரியான பராமரிப்புக்களுடன் பயன்படுத்தி வந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.

இவ்விரண்டையும் மிஞ்சும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புதமான மாதவிடாய் சுகாதார பொருள் தான் மாதவிடாய் கப். உண்மையிலேயே இந்த மாதவிடாய் கப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில் மற்ற இரண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மாதவிடாய் கப் செலவு குறைவானது. முக்கியமாக மீண்டும் பயன்படுத்தக்கூடியது.

இந்த மாதவிடாய் கப்பை ஒருமுறை வாங்கினால், குறைந்தது 1 வருடம் வரை பயன்படுத்தலாம். அதுவும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், பயன்படுத்திய பின்னரும் சரியாக சுடுநீரில் சுத்தம் செய்து வந்தால், இந்த மாதவிடாய் கப் யோனியில் எவ்வித தொற்றுக்களையும், சேதத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும்" என்று கூறினார்.

Desktop Bottom Promotion