உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!

Lymphoma Blood Cancer Symptoms In Tamil: உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் கொடிய நோய் தான் புற்றுநோய். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவை புற்றுநோய் செல்கள் வளரும் பகுதியைப் பொறுத்தது. இந்த புற்றுநோயில் உள்ள ஒரு வகையான இரத்த புற்றுநோய் தான் லிம்போமா. இது நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோயாகும்.

உடலில் உள்ள நிணநீர் மண்டலமானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். நிணநீர் மண்டலத்தில் நிணநீர் கணுக்கள், நிணநீர் நாளங்கள், மண்ணீரல் மற்றும் தைமல் போன்றவைகள் உளளன. இவை அனைத்தும் உடலில் இருந்து நச்சுக்கள், கழிவுகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. அதோடு இந்த நிணநீர் மணடலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இரத்த வெள்ளைணுக்களுக்கு வேண்டிய திரவத்தை கொண்டு செல்கிறது.

Lymphoma Symptoms Signs Of Lymphoma Blood Cancer In Tamil

இந்த நிணநீர் மண்டலத்தில் உள்ள செல்களில் அசாதாரண வளர்ச்சி ஏற்படும் போது, லிம்போமா ஏற்படுகிறது. இந்த லிம்போமாவை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி கண்டுபிடிக்கும் போது, சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். மேலும் ஆரம்பத்தில் இந்த வகை புற்றுநோயை கண்டுபிடிக்கும் போது, மற்ற உறுப்புகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம். இப்போது லிம்போமா இரத்த புற்றுநோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியத் தொடங்கும் என்பதைக் காண்போம்.

வீங்கிய நிணநீர் முடிச்சுகள்

லிம்போமா புற்றுநோயின் மிகவும் முக்கியமான மற்றும் பலரால் புறக்கணிக்கப்படும் அறிகுறிகளுள் ஒன்று தான் வலியற்ற வீக்கங்கள். அதுவும் இந்த மாதிரியான வீக்கங்கள் கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு போன்ற பகுதிகளில் காணப்படும். இப்படியான வீக்கங்கள் வலியில்லாமல் இருப்பதோடு, தொடர்ந்து இருக்கும் மற்றும் என்ன சிகிச்சைகளை செய்தாலும் வீக்கம் குறையாமல் இருக்கும்.

விவரிக்க முடியாத எடை இழப்பு

நீங்கள் எந்த ஒரு டயட்டையும் மேற்கொள்ளாமல் எடை இழப்பைக் காண்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு லிம்போமா இருக்க வாய்ப்புள்ளது. எப்படியெனில் உடலில் புற்றுநோய் இருக்கும் போது, உடலின் வளங்களானது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதால், தினசரி மெட்டபாலிச செயல்முறைகள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக விவரிக்க முடியாத எடை இழப்பை சந்திக்க நேரிடுகிறது.

தொடர்ச்சியான சோர்வு

உடல் சோர்வை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ஒருவருக்கு உடல் சோர்வானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் ஒன்று தான் லிம்போமா புற்றுநோய். இந்த வகையான சோர்வானது உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் இரத்த அணுக்கள் மற்றும் அதன் ஆற்றல் ஆதாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஏற்படுகிறது. எனவே கவனமாக இருங்கள்.

இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது

உடல் வெப்பம் அதிகரிக்கும் போது உடலை குளிர்விக்க வியர்வை ஏற்படுகிறது. இது சாதாரணமான ஒன்று தான். ஆனால் உங்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் அதிகமாக வியர்த்தால், அதுவும் ஆடைகள் மற்றும் பெட் போன்றவை நனையும் அளவில் வியர்த்தால், உடலில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதுவும் புற்றுநோயை எதிர்த்துப் போராட உடல் முயற்சித்தால் கூட இப்படி அதிகமாக வியர்க்கும்.

மிதமான காய்ச்சல்

நீண்ட நாட்களாக திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் காய்ச்சலானது அடிக்கடி வருவதோடு, உடல் வெப்பநிலை ஏற்றஇறக்கத்துடன் இருந்தால், அதை சாதாரணமாக எண்ணாதீர்கள். இது லிம்போமாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பதால் அவற்றை எதிர்த்து நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் போது இம்மாதிரியான காய்ச்சல் ஏற்படுகிறது.

மிகுந்த அரிப்பு

உங்கள் சருமத்தில் விவரிக்க முடியாத அரிப்பை சந்தித்தால், லிம்போமா இருப்பதற்கான வாய்ப்புள்ளது. சில நேரங்களில் லிம்போமா சருமத்தையும் பாதித்து, அரிப்பு, தடிப்புகள் மற்றும் சரும நிறத்தில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே இம்மாதிரியான அறிகுறியை அனுபவித்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

மூச்சுத் திணறல் அல்லது இருமல்

உங்களுக்கு நெஞ்சு பகுதியில் லிம்போமா இருந்தால், அது மார்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அழுத்தத்தை உருவாக்கி, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகள் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றின் அறிகுறிகளாகவும் இருப்பதால், பலரும் இதை தவறாக புரிந்து கொள்ளலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, March 27, 2024, 15:46 [IST]
Desktop Bottom Promotion