உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!

Fainting During Or After Exercise: விளையாட்டின் போதோ அல்லது உடற்பயிற்சி முடிந்த உடனேயோ ஒருவர் திடீரென மயங்கி விழுவது, பார்ப்பவர்களுக்கு அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாகும். பெரும்பாலானவர்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி உடலுக்கும், இதயத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், சிலருக்கு தீவிரமான உடற்பயிற்சி எதிர்பாராதவிதமாக மயக்கம், இதயத் துடிப்பு கோளாறு, இதயத் தசைக்கு இரத்த ஓட்டம் குறைதல் அல்லது திடீர் இதய நிறுத்தம் போன்ற ஆபத்தான நிலைகளைத் தூண்டக்கூடும். எனவே, ஒருவர் உடற்பயிற்சியின் போதோ அல்லது உடற்பயிற்சி முடிந்த உடனேயே மயங்கினாலோ அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம்.

Fainting During or After Exercise Causes Warning Signs and What to Do - Cardiologist Explains

சமீபத்தில் கூட தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் காணும் போது பலருக்கும் விளையாடவே பயமாக உள்ளது எனலாம்.

எனவே விளையாடிக் கொண்டிருக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது அதற்குப் பிறகோ ஏன் மயக்கம் அல்லது இதய அடைப்பு ஏற்படுகிறது என்பதற்கான காரணம் குறித்தும், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சென்னை காவேரி மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறையின் மூத்த ஆலோசகரும், இதய நிபுணருமான டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

Fainting During or After Exercise Causes Warning Signs and What to Do - Cardiologist Explains

அப்போது அவர் கூறியதாவது, "உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே ஏற்படும் மயக்கம் குறிப்பாக கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். இளம் வயதினரிடம், இதற்கு முன்பு கண்டறியப்படாத சில இதய நோய்கள் காரணமாக இருக்கலாம். இதய தசையின் தடிமன் அதிகரிக்கும் Hypertrophic Cardiomyopathy, இதயத் தசையின் மின்சாரச் செயல்பாட்டை பாதிக்கும் Arrhythmogenic Cardiomyopathy, இதயத்திற்கு இரத்தம் வழங்கும் இரத்த நாளங்களின் பிறவிக் குறைபாடுகள், Myocarditis மற்றும் Long-QT Syndrome போன்ற மரபணு சார்ந்த இதய மின் செயல்பாட்டுக் கோளாறுகள் முக்கிய காரணங்களாகும். சில விளையாட்டுகளில் மார்பில் ஏற்படும் திடீர் தாக்கத்தால் இதயத்தின் மின்சார செயல்பாடு சீர்குலைந்து Ventricular Fibrillation ஏற்பட்டு திடீர் இதய நிறுத்தம் ஏற்படலாம். இதனை Commotio Cordis என்கிறோம்." என்று டாக்டர் கூறினார்.

வயதானவர்களுக்கு இதயத் தமனி அடைப்பு ஏற்படுத்தும் ஆபத்து

"வயது அதிகரிக்கும் போது, குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, புகைபிடித்தல் அல்லது குடும்பத்தில் இதய நோய் போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு, Coronary Artery Disease முக்கிய காரணமாகிறது. தீவிர உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இதயத்தின் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கின்றன. இதயத்தின் இரத்த நாளங்களில் ஏற்கனவே அடைப்பு இருந்தால், இந்த அதிகரித்த தேவையை ஈடுசெய்ய முடியாமல் இதயத் தசைக்கு இரத்த ஓட்டம் குறையலாம். இதனால் மார்பு வலி, மயக்கம் அல்லது அரிதாக மாரடைப்பு ஏற்படலாம். சில நேரங்களில் இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைவதால் ஆபத்தான இதயத் துடிப்பு கோளாறுகளும் ஏற்பட்டு திடீர் மயக்கம் அல்லது இதய நிறுத்தம் ஏற்படலாம்" என்றும் டாக்டர் கூறினார்.

உடற்பயிற்சி முடிந்த பிறகு ஏன் மயக்கம் ஏற்படுகிறது?

"உடற்பயிற்சி முடிந்த சில விநாடிகள் முதல் சில நிமிடங்களுக்குள் ஏற்படும் மயக்கம் வேறுபட்ட காரணத்தால் ஏற்படலாம். உடற்பயிற்சியின் போது கால்களின் தசைகள் சுருங்குவதன் மூலம் இரத்தத்தை இதயத்திற்குத் திரும்பச் செலுத்த உதவுகின்றன. உடற்பயிற்சியை திடீரென நிறுத்தும்போது இந்த "தசை பம்ப்" செயல்பாடு நின்றுவிடுகிறது. அதே நேரத்தில் உடலின் புற இரத்த நாளங்கள் விரிவடைந்த நிலையில் இருக்கலாம். இதனால் இதயத்திற்குத் திரும்பும் இரத்தத்தின் அளவும், இதயம் வெளியேற்றும் இரத்தத்தின் அளவும் தற்காலிகமாகக் குறைந்து, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் குறையலாம். இதன் விளைவாக உடற்பயிற்சிக்குப் பிந்தைய மயக்கம் ஏற்படலாம்.

இத்தகைய மயக்கத்தை எப்போதும் சாதாரணமானதாகக் கருதக்கூடாது. நீரிழப்பு, அதிக வெப்பம், உப்புச் சத்துக்களின் சமநிலையின்மை, குறைந்த இரத்தச் சர்க்கரை, இதயத் துடிப்பு கோளாறுகள், இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைதல் மற்றும் பிற இதய நோய்கள் ஆகியவையும் உடற்பயிற்சிக்குப் பிறகு மயக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.

எந்த அறிகுறிகள் ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகள்?

"சில அறிகுறிகள் மிகவும் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

* உடற்பயிற்சியின் போதே மயங்குதல்
* உடற்பயிற்சியின் போது மார்பு வலி அல்லது அழுத்தம்
* வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல்
* மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு இதயத் துடிப்பு வேகமாக அல்லது ஒழுங்கற்றதாக இருப்பதை உணர்தல்
* மீண்டும் மீண்டும் தலைச்சுற்றுதல்
* முன்பு காரணம் தெரியாமல் உடற்பயிற்சியின் போது மயங்கியிருத்தல்
* குடும்பத்தில் இளம் வயதில் திடீர் இதய மரணம் ஏற்பட்டிருத்தல் ஆகியவை மருத்துவ மதிப்பீடு தேவைப்படும் முக்கிய அறிகுறிகளாகும்." என்று டாக்டர் கூறினார்.

Fainting During or After Exercise Causes Warning Signs and What to Do - Cardiologist Explains

மயங்கியவர் சுவாசிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

"ஒருவர் திடீரென மயங்கி சுயநினைவின்றி, இயல்பாக சுவாசிக்காமல் இருந்தால், அதை இதய நிறுத்தமாகக் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர மருத்துவ உதவியை அழைத்து, உடனடியாக இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சை (CPR) தொடங்க வேண்டும். கிடைக்கும் உடனேயே AED (Automated External Defibrillator) கருவியைப் பயன்படுத்த வேண்டும். CPR மற்றும் மின்சார அதிர்ச்சி சிகிச்சையை ஆரம்பத்திலேயே வழங்குவது உயிரைக் காப்பாற்றுவதில் மிகவும் முக்கியமானது." என்று டாக்டர் கூறினார்.

விளையாட்டு மைதானங்களில் அவசரநிலைக்கு தயாராக இருப்பது எப்படி?

"விளையாட்டின் போது ஏற்படும் இத்தகைய அவசரநிலைகளைத் தடுப்பதற்கு, தனிநபரின் இதய நோய் ஆபத்து காரணிகளை மதிப்பிடுதல், எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்வது, உடற்பயிற்சியின் தீவிரத்தை படிப்படியாக அதிகரித்தல் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அவசரநிலை மேலாண்மைக்கான ஏற்பாடுகளைச் செய்திருத்தல் அவசியம். குறிப்பாக விளையாட்டு மைதானங்களில் எளிதில் அணுகக்கூடிய AED கருவி, அவசரநிலை செயல்திட்டம் மற்றும் CPR பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பது உயிரைக் காப்பாற்றக்கூடும்.

முடிவாக, விளையாட்டின் போதும் உடற்பயிற்சிக்குப் பின்னரும் ஏற்படும் திடீர் மயக்கம் சாதாரண சோர்வாக மட்டும் கருதப்படக்கூடாது. உடற்பயிற்சியின் போதே ஏற்படும் மயக்கம் குறிப்பாக இதயக் காரணத்தை சந்தேகிக்கச் செய்யும்; உடற்பயிற்சி முடிந்த உடனேயே ஏற்படும் மயக்கம் உடலியல் காரணத்தால் ஏற்படக்கூடியதாக இருந்தாலும், ஆபத்தான காரணங்களையும் தவறாமல் கருத்தில் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது தீர்வல்ல. சரியான மருத்துவ மதிப்பீடு, படிப்படியான உடற்பயிற்சி, எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவசரநிலையில் விரைவான CPR மற்றும் AED பயன்பாடு ஆகியவை பாதுகாப்பான விளையாட்டுக்கும் உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாகும்." என்று டாக்டர் செந்தில்குமார் கூறினார்.

Desktop Bottom Promotion