கையேந்தி பவன் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்..

Posted By:

Kaiyendhibhavan Vada Curry Recipe In Tamil: காலையில் இட்லிக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கையேந்தி பவன் வடகறியை செய்யுங்கள். இந்த பக்குவத்தில் வடகறியை செய்யும் போது, பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த வடகறி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Kaiyendhibhavan Vada Curry How To Make Vada Curry Recipe

உங்களுக்கு இந்த கையேந்தி பவன் வடகறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வடைக்கு...

* கடலைப் பருப்பு - 1 கப் (2 மணிநேரம் ஊற வைத்தது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

பொடிப்பதற்கு...

* பட்டை - 2 இன்ச்
* அன்னாசிப்பூ - பாதி
* கிராம்பு - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - 10 இலைகள்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பொரித்து வைத்துள்ள வடை
* பொடித்து வைத்துள்ள மசாலா
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை நீரில் 3-4 முறை கழுவி, நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் கடலைப் பருப்பை மீண்டும் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சோம்பு, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த கடலைப் பருப்பை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு மிக்சர் ஜாரை எடுத்துக் கொண்டு, அத்துடன் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள வடை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பொரித்த வடைகளை சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, கறிவேப்பிலை, புதினா சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், கறி மலாசா தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய கிளறி விட்டு, தேவையான அளவ நீரை ஊற்றி 4 நிமிடம் நன்கு மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பு வடையை சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி, சிறிது புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வடகறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 9, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion