Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை!

Diwali 2026 Eye Safety: தீபாவளி என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விளக்குகள், பலகாரங்கள் மற்றும் பட்டாசுகளுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு சிறப்புத் திருநாளாகும். இந்தக் கொண்டாட்டங்கள் நமக்கு உற்சாகத்தைத் தந்தாலும், போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்பாராத விபத்துகளுக்கும் வழிவகுத்துவிடும்.

Diwali 2026 Eye Safety Eye Doctor Explains What to Do If Firecracker Sparks Enter Your Eyes

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தில் பட்டாசுப் பொறிகள், பறக்கும் துகள்கள் அல்லது திடீரென வெடிக்கும் பட்டாசுகள் காரணமாகப் பலருக்குக் கண் காயங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய தீப்பொறி கூட கண்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இத்தகைய விபத்துகள் நேரும் போது உடனடியாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

எனவே இந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மாறுகண் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணரும், குழந்தைகள் கண் மருத்துவருமான டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்பிரமணியன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

Diwali 2026 Eye Safety Eye Doctor Explains What to Do If Firecracker Sparks Enter Your Eyes

பட்டாசுகளால் கண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

"நம்முடைய கண்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை என்பதால், ஒரு சிறிய காயம் கூட பெரிய அளவில் அசௌகரியத்தை உருவாக்கும். பட்டாசுப் பொறிகள் அல்லது நுண்ணிய துகள்கள் கண்களில் படும் போது கண் சிவந்துப் போவது, கண்களில் நீர் வடிவது, கடுமையான எரிச்சல் ஏற்படுவது மற்றும் கண்களை எரிவது போன்ற உணர்வு ஆகியவை உடனடியாக ஏற்படும்.

பட்டாசிலிருந்து வெளிவரும் அதிகப்படியான வெப்பமானது கண் இமைகளையோ அல்லது கண்ணின் மேற்பரப்பையோ தாக்கிக் காயப்படுத்தவும் வாய்ப்புள்ளது. முகத்திற்கு மிக அருகில் பட்டாசு வெடிக்கும் போது அது பார்வையைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரமான காயங்களை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, விபத்துகளுக்கான ஆபத்துகளைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், பட்டாசுகளுக்கு அருகில் நிற்பது அல்லது தாங்களாகவே அவற்றை வெடிக்க முயல்வது குழந்தைகளை மிகவும் ஆபத்தான நிலைக்கு உள்ளாக்குகிறது." என்று டாக்டர் கூறினார்

பட்டாசு துகள்கள் கண்களில் பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

"பட்டாசுப் பொறிகள் எதிர்பாராத விதமாக கண்களில் பட்டுவிட்டால் பதற்றப்படாமல் அமைதியாக இருப்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் முக்கியமான காரியமாகும். கண்ணில் ஏதேனும் விழுந்துவிட்டால் உடனடியாக கண்களை கைகளால் தேய்க்கும் இயல்பான பழக்கம் இன்றும் பலருக்கு இருக்கிறது. ஆனால் கைகளாள் கண்களைக் கசக்குவது அல்லது தேய்ப்பது, காயத்தை இன்னும் தீவிரமாக்கிவிடும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

கண்ணில் மெல்லிய தூசியோ அல்லது சிறிய துகள்களோ மட்டுமே விழுந்திருந்தால், தீக்காயமோ அல்லது பெரிய பாதிப்போ இல்லாத பட்சத்தில், சுத்தமான நீரைக் கொண்டோ அல்லது ஸ்டெரைல் சலைன் (sterile saline) உப்பு கரைசலைக் கொண்டோ கண்ணை மென்மையாகக் கழுவிக் கொள்ளலாம். அதே நேரத்தில், கண்ணில் ஏதேனும் பொருள் ஆழமாகச் சிக்கியுள்ளதாகத் தோன்றினால், அதை நாமே அகற்ற முயல்வது பேராபத்தில் முடியும் என்பதால் அந்த முயற்சியை கண்டிப்பாக தவிர்க்கவும்.

மேலும், இத்தகைய சூழல்களில் எந்தவொரு வீட்டு வைத்தியங்களையும் முயற்சிக்காமல் தவிர்ப்பதே நல்லது. கண்ணில் ரோஸ் வாட்டர், மை, எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை ஊற்றுவது எரிச்சலை மேலும் அதிகரிக்கச் செய்வதோடு, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை பெறுவதைத் தாமதப்படுத்திவிடக்கூடும். ஒருவேளை பட்டாசு நேரடியாகக் கண்ணைத் தாக்கியிருந்தால், தாமதிக்காமல் உடனே ஒரு கண் சிறப்பு மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்." என்று டாக்டர் கூறினார்

எப்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும்?

"கடுமையான வலி, மங்கலான பார்வை, கண் வீக்கம், இரத்தம் வடிதல் மற்றும் அதிகப்படியான வெளிச்சத்தைப் பார்க்க முடியாத சிரமம் ஆகிய அறிகுறிகளை எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது. இந்த அறிகுறிகள் அனைத்தும் நாம் உடனடியாக கண் மருத்துவரைக் கலந்து ஆலோசனை பெற அறிவுறுத்தும் தீவிரமான காயத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

தீக்காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது கண்ணில் ஏதேனும் பொருள் ஆழமாகச் சிக்கியிருந்தாலோ, அந்தப் பகுதியைத் தண்ணீர் ஊற்றி அலசுவதோ, தேய்ப்பதோ அல்லது அழுத்தம் கொடுப்பதோ கூடாது. எவ்வித அழுத்தமும் இன்றி கண்ணைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு உடனடியாக அருகில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று கண் மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சைப் பெறுவதே சரியான வழியாகும்." என்று டாக்டர் கூறினார்

தீபாவளி கொண்டாட்டங்களியின் போது உங்கள் கண்களைப் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்:

"தீபாவளித் திருநாளில் பட்டாசுகளால் ஏற்படும் பெரும்பாலான காயங்களை நாம் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் எளிதில் தவிர்த்துவிட முடியும்.

எப்போதுமே திறந்த வெளிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதுடன், நமக்கும் பட்டாசுக்கும் இடையே பாதுகாப்பான தூரத்தையும் கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டும். பட்டாசுக்குத் தீ பற்ற வைக்கும் போது ஒருபோதும் அதன் மீது குனிந்து நெருப்பைப் பற்ற வைக்க கூடாது. அதேபோல், சரியாக வெடிக்காத பட்டாசுகளுக்கு அருகில் ஒருபோதும் செல்ல கூடாது.

குழந்தைகளைக் கொண்டாட்டங்களின் போது பெரியவர்கள் எப்போதும் அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் தாங்களாகவே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது வெடிக்கும் பொறிகளும் துகள்களும் கண்களைத் தாக்காமல் தவிர்க்கப் பெரிதும் உதவும். இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது, அவசர காலத் தேவைக்காக ஒரு முதலுதவி பெட்டியை எப்போதும் கைவசம் வைத்திருப்பதும் மிக அவசியமான ஒன்றாகும்." என்று டாக்டர் கூறினார்

பண்டிகைக் கால கொண்டாட்டங்களை எந்தவித விபத்தும், துயரமும் இல்லாமல் மகிழ்ச்சியாகக் கொண்டாட போதுமான விழிப்புணர்வும், கூடுதல் கவனமும் மட்டுமே போதுமானது. ஒருவேளை எதிர்பாராதவிதமாக கண் காயம் போன்ற விபத்துகள் ஏற்பட்டுவிட்டால், நாமே சுயமாக சிகிச்சை அளிக்க முயல்வதோ அல்லது வலி தானாகக் குறையும் என்று காத்திருப்பதோ முற்றிலும் தவறான செயலாகும்.

நம் விலைமதிப்பற்ற பார்வையைப் பாதுகாத்துக்கொள்ள சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ உதவியை நாடுவது மிக அவசியமான கடமையாகும். குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்து மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடுங்கள். அதேநேரம், நமது பார்வையைப் பணயம் வைக்கும் அளவுக்கு எந்தவொரு பட்டாசும் பெரியது அல்ல என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைய வாழ்த்துகள்!

Story first published: Sunday, November 8, 2026, 13:00 [IST]
Desktop Bottom Promotion