Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்!

Diwali 2026 Skin Safety: தீபாவளி மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த பண்டிகை. ஆனால், பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் வெப்பம், தீப்பொறிகள் மற்றும் ரசாயனப் பொருட்கள் சருமத்தில் தீக்காயங்கள், எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பட்டாசிலிருந்து வெளிப்படும் ஒரு சிறிய தீப்பொறி சருமத்தின் மீது பட்டாலும் பாதிப்பு ஏற்படலாம். இந்தப் பாதிப்பின் தீவிரம் வெப்பத்தின் அளவு மற்றும் சருமம் எவ்வளவு நேரம் அதற்கு உட்பட்டது என்பதைப் பொறுத்து அமையும்.

எனவே இந்த தீபாவளி பண்டிகையில் பட்டாசுகளால் ஏற்படும் தீக்காயங்கள், ஒவ்வாமை மற்றும் சரும எரிச்சலில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி, உடனடி முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். செல்வா சீதாராமன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

Diwali 2026 Skin Safety Doctor Shares How To Protect Your Skin From Firecracker Burns And Irritation

அப்போது அவர் கூறியதாவது, "பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் தீப்பொறி சருமத்தின் மீது பட்டால், முதலில் வெப்பம் ஏற்படும் இடத்திலிருந்து விலகி, பாதிக்கப்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் வைக்க வேண்டும். இது தீக்காயத்தால் ஏற்படும் பாதிப்பைத் தொடர்ந்து அதிகரிக்காமல் தடுக்க உதவும். தீக்காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் அணிந்திருக்கும் மோதிரம், கைக்கடிகாரம் அல்லது இறுக்கமான ஆடைகளை வீக்கம் ஏற்படுவதற்கு முன்பே அகற்ற வேண்டும். ஆனால், தீக்காயத்தால் சருமத்தில் ஒட்டிக்கொண்ட ஆடைகளை இழுத்து அகற்றக்கூடாது.

சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமான, கிருமிகள் இல்லாத மென்மையான துணி அல்லது கட்டுத் துணியால் (Sterile Dressing) மெதுவாக மூட வேண்டும். தீக்காயத்தின் மீது ஐஸ், பற்பசை, மஞ்சள், தேங்காய் எண்ணெய், நெய் அல்லது வீட்டில் பயன்படுத்தப்படும் வேறு எந்தப் பொருட்களையும் தடவக்கூடாது. இவை பாதிக்கப்பட்ட சருமத்தில் மேலும் எரிச்சலை ஏற்படுத்துவதுடன், காயம் குணமடைவதையும் பாதிக்கலாம்; தொற்று ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம். தீக்காயத்தால் கொப்புளங்கள் (Blisters) ஏற்பட்டால், அவற்றை உடைக்கக்கூடாது. ஏனெனில், அவை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் இயற்கையான தடுப்பாகச் செயல்படுகின்றன.

தீக்காயங்கள் மட்டுமின்றி, பட்டாசுப் புகை மற்றும் அதிலுள்ள ரசாயனப் பொருட்களாலும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். சருமம் சிவந்து போதல், அரிப்பு, தடிப்புகள் மற்றும் ஒவ்வாமைத் தொடர்பான சரும அழற்சி (Contact Dermatitis) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உணர்திறன் அதிகமுள்ள சருமம் கொண்டவர்கள், எக்ஸிமா (Eczema) அல்லது ஏற்கெனவே ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகலாம். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், சுத்தமான நீரால் மெதுவாகக் கழுவ வேண்டும். அரிப்பதால் சருமத்தைச் சொறியக்கூடாது. மேலும், எரிச்சலை அதிகரிக்கும் சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆழமான அல்லது பெரிய தீக்காயங்கள், கடுமையான வலி, அதிகமான கொப்புளங்கள் அல்லது முகம், கைகள், கால்கள், மூட்டுகள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சருமம் வெண்மையாகவோ, கருகியோ அல்லது உணர்வற்ற நிலையிலோ இருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் தீக்காயங்கள் சிறியதாகத் தெரிந்தாலும் கூடுதல் கவனம் தேவை." என்று டாக்டர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

"* தீக்காயங்கள் ஏற்படாமல் தடுப்பதே சிறந்த பாதுகாப்பு. பட்டாசு வெடிக்கும்போது முழுக்கை பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

*பட்டாசுகளிலிருந்து பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* நீண்ட கம்பியில் பொருத்தப்பட்ட தீக்குச்சியைப் பயன்படுத்திப் பட்டாசுகளைப் பற்றவைக்க வேண்டும்.

* பட்டாசுகளை ஒருபோதும் வெறும் கைகளால் கையாளக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* கொண்டாட்டங்களுக்குப் பிறகு வெளிப்பட்ட சருமப் பகுதிகளைச் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். சிறிய விழிப்புணர்வும், சரியான நேரத்தில் அளிக்கப்படும் முதலுதவியும் (First Aid), தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தீவிரமான சருமப் பாதிப்பாக மாறாமல் தடுக்க உதவும்." என்று டாக்டர். செல்வா சீதாராமன் கூறினார்.

Desktop Bottom Promotion