மதியம் சிம்பிளா சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த சாம்பாரும், உருளைக்கிழங்கு ப்ரையும் செய்யுங்க..

Posted By:

Simple Sambar And Potato Fry Recipe In Tamil: மதிய வேளையில் சட்டென்று சமையலை முடிக்கணுமா? என்ன சமைப்பது என்று தெரியலையா? அப்படியானால் சிம்பிளாக சாம்பாரையும், உருளைக்கிழங்கு ப்ரையையும் செய்து கொடுங்கள். இந்த லன்ச் காம்போ செய்வதற்கு மிகவும் சுலபமாக மட்டுமின்றி, மிகவும் சுவையாகவும் இருக்கும். அதுவும் ஒருமுறை இந்த பக்குவத்தில் உருளைக்கிழங்கு ப்ரையை செய்தால், பின் எப்போதும் இந்த சுவையில் தான் உருளைக்கிழங்கு ப்ரை செய்வீர்கள்.

Lunch Combo How To Make Simple Sambar And Potato Fry Recipe

உங்களக்கு இந்த சாம்பாரையும், உருளைக்கிழங்கு ப்ரையையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இடிப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்

சாம்பார் தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்து மசித்த துவரம் பருப்பு - 100 கிராம்
* புளி - எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* இடித்த மிளகு சீரகம்
* கொத்தமல்லி - சிறிது

உருளைக்கிழங்கு ப்ரைக்கு...

வறுத்து பொடி செய்வதற்கு...

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (இடித்தது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்து அரைத்த பொடி
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் இடி உரலில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் இடித்த மிளகு, சீரகத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சாம்பார் தயார்.
* அடுத்து ப்ரை செய்வதற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அதில் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி கிளறி, 2-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு ப்ரை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 9, 2026, 14:51 [IST]
Desktop Bottom Promotion