தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்!

Diwali 2026 Firecracker Smoke: தீபாவளி என்பது மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும் பண்டிகை. ஆனால், பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை நமது சுற்றுச்சூழலை மட்டுமல்லாமல், நமது உடல்நலத்தையும் மோசமாக பாதிக்கக்கூடும். பட்டாசுப் புகையில் நுண்ணிய துகள்கள் (Fine Particulate Matter) மற்றும் பல்வேறு ரசாயன மாசுக்கள் உள்ளன. இவை சுவாசப் பாதை, கண்கள் மற்றும் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே தீபாவளி கொண்டாட்டத்தின் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

Diwali 2026 Pollution Doctor Shares How Firecracker Smoke Damages Your Lungs Eyes And Skin Prevention Tips

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளி பட்டாசுப் புகை நுரையீரல், கண்கள் மற்றும் சருமத்தில் எப்படிப்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சென்னையில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்தின் மூத்த ஆலோசகரான டாக்டர் பிரசன்ன கார்த்திக் எஸ். அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசுப் புகையில் உள்ள நுண்ணிய துகள்களை நாம் சுவாசிக்கும் போது, அவை நமது சுவாச மண்டலத்திற்குள் சென்று மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதனால் இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், நெஞ்சில் அசௌகரியம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

அதுவும் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் மேலும் தீவிரமடையலாம். ஏற்கெனவே சுவாசப் பிரச்சினைகள் இல்லாதவர்களுக்குக் கூட அதிக அளவில் பட்டாசுப் புகையைச் சுவாசிப்பதால் தற்காலிக எரிச்சல் ஏற்படலாம்.

Diwali 2026 Pollution Doctor Shares How Firecracker Smoke Damages Your Lungs Eyes And Skin Prevention Tips

பட்டாசுப் புகையானது கண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். புகை மற்றும் காற்றில் கலந்திருக்கும் ரசாயனத் துகள்கள் கண்களில் படும்போது கண் சிவத்தல், நீர் வடிதல், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இத்தகைய நேரங்களில் கண்களைக் கைகளால் தேய்ப்பது எரிச்சலை மேலும் அதிகரிக்கக்கூடும். அதேபோல், காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் ரசாயனப் படிவங்கள் சருமத்தில் படும்போது சிலருக்கு சரும எரிச்சல், அரிப்பு, சிவத்தல் மற்றும் ஒவ்வாமை (Allergic Reactions) ஏற்படலாம்.

குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏற்கெனவே சுவாசம் அல்லது இதயப் பாதிப்பு உள்ளவர்கள் காற்று மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மாசடைந்த காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது இதயம் மற்றும் நுரையீரலுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்." என்றும் டாக்டர் பிரசன்னா கார்த்திக் கூறினார்.

Diwali 2026 Pollution Doctor Shares How Firecracker Smoke Damages Your Lungs Eyes And Skin Prevention Tips

பட்டாசுப் புகையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க செய்ய வேண்டியவைகள்

* "பட்டாசுப் புகையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, பட்டாசுகள் வெடிக்கப்படும் இடங்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

* வெளிப்புறக் காற்று மாசு அதிகமாக இருக்கும்போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

* புகை அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

* ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதுடன், அவசரத் தேவைக்கான மருந்துகளையும் அருகில் வைத்திருக்க வேண்டும்.

* தொடர்ந்து இருமல், மூச்சிரைப்பு (Wheezing), மூச்சுத்திணறல், நெஞ்சுவலி அல்லது கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டால், வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து நேரத்தை வீணாக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, திடீரென ஏற்படும் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலிக்கு உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்." என்று டாக்டர் பிரசன்னா கூறினார்.

தீபாவளியைப் பொறுப்புடன் கொண்டாடுவது என்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உடல்நலத்திலும் அக்கறை காட்டுவதாகும். பட்டாசுப் புகையிலிருந்து ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட முடியும்.

Desktop Bottom Promotion