ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது?

Ajwain Water Vs Fennel Water: செரிமான பிரச்சனை, இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இப்படி செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பதற்கு காரணம் ஆரோக்கியமான குடலியக்கத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை போதுமான அளவு எடுக்காமல் இருப்பதும், ஜங்க் உணவுகளை அதிகமாக உட்கொள்வதும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான்.

இப்படி சந்திக்கும் செரிமான பிரச்சனைகளுக்கு நமது நாட்டு வைத்தியத்தில் கசாயம் அல்லது மூலிகை நீர் தான் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் ஓம நீர், சோம்பு நீர் போன்றவை மிகவும் பிரபலமான பானங்களாகும். இவ்விரு பானங்களுமே செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்தாலும், இரண்டின் செயல்பாடும் சற்று வேறுபடுகிறது.

Ajwain Water Vs Fennel Water Which Is Better For Digestion

சரி, உண்மையில் செரிமான பிரச்சனைக்கு இவ்விரண்டில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் அதன் உண்மையான நன்மைகளையும், அவை உடலினுள் செயல்படும் விதத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். கீழே சோம்பு நீர், ஓம நீர் இவற்றில் எது செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்தது என்பன குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

சோம்பு நீர் என்றால் என்ன?

சோம்பு நீர் என்பது சோம்பு விதைகளை நீரில் ஊற வைத்தோ அல்லது கொதிக்க வைத்தோ தயாரிக்கக்கூடியது. இது குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டது. இந்த நீரை தினமும் எளிதில் உட்கொள்ளலாம். சோம்பு விதைகளில் செரிமான பாதையை ரிலாக்ஸாக்கவும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும், சீரான செரிமானத்தை ஊக்குவிக்கவும் தேவையான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இதனால் தான் இது செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் பானமாக கருதப்படுகிறது.

சோம்பு நீரின் நன்மைகள்

சோம்பு நீர் வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அசிடிட்டி போன்றவற்றைப் போக்க உதவுகிறது. அதுவும் இது செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவித்து, உண்ணும் உணவை திறம்பட ஜீரணம் செய்ய உதவுகிறது. குறிப்பாக இந்த நீரை உணவு உண்ட பின் குடிக்கும் போது, நல்ல பலனை உடனடியாக தரக்கூடியது. முக்கியமாக இந்த பானம் அசிடிட்டி உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த பானம்.

ஓம நீர் என்றால் என்ன?

ஓம நீர் என்பது ஓம விதைகளை நீரில் கொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஓம நீர் வலுவான, நெடியுள்ள சுவையைக் கொண்டிருப்பதோடு, உடலுக்கு வெப்பத்தைத் தரக்கூடியது. ஓமத்தில் உள்ள தைமால் என்ற பொருள் செரிமான செயல்முறையைத் தூண்டி, அஜீரண கோளாறு மற்றும் வயிற்று அசௌகரியத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஓம நீரின் நன்மைகள்

வாய்வு தொல்லை, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் ஓம நீரைக் குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் ஓமம் செரிமான நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவித்து, குடலியக்கத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. மேலும் இதன் வெப்பமூட்டும் பண்புகள் மந்தமான செரிமானம் உள்ளவர்களுக்கு அல்லது வயிற்று உப்புசத்தை அடிக்கடி சந்திப்பவர்களுக்கு மிகவும் நல்ல பலனைத் தரும்.

சோம்பு நீர் மற்றும் ஓம நீர் வேறுபாடுகள்

சோம்பு நீர் குளிர்ச்சியானது. இந்த நீரை தினமும் குடித்து வரலாம் மற்றும் இது அசிடிட்டி உள்ளவர்களுக்கு ஏற்ற பானம். ஓம நீர் அதிக வீரிமம் மற்றும் வெப்பமூட்டும் தன்மையைக் கொண்டது. இது வாய்வு தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனையால் அவதிப்பவர்களுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும்.

புரியும் படி சுருக்கமாக கூற வேண்டுமானால், லேசான செரிமான பிரச்சனைகளுக்கு சோம்பு நீர் நல்ல பலனைத் தரும். அதே சமயம் கடுமையொன செரிமான பிரச்சனைகளுக்கு ஓம நீர் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

எப்படி தயாரிப்பது?

சோம்பு நீர் தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் சோம்பை எடுத்து, அத்துடன் நீரை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் அந்த நீரைக் குடிக்கலாம். அதேப் போல் ஓம நீர் தயாரிப்பதற்கு 1 ஸ்பூன் ஓம விதைகளை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, October 11, 2026, 13:44 [IST]
Desktop Bottom Promotion