For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் உதிர்வா? அடர்த்தி இல்லையா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

|

எல்லா காலங்களிலுமே கூந்தல் உதிரத்தான் செய்யும். கூந்தலில் அழுக்குகள் சேராமல், நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு, வாரம் 3 முறை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் தலைக்கு குளித்து வந்தாலே கூந்தல் பிரச்சனைகள் வராது. இங்கு ஒவ்வொரு கூந்தலுக்கும் ஏற்ற வகையில் தீர்வுகளைக் காண்போம்.

Beauty tips to grow hair longer

வறட்சியான தலை முடிக்கு :

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயுடன், தேன், முட்டையை கலந்து தலையில் வேர்பகுதிகளிலிருந்து நுனி வரை தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் பஞ்சு போல் மென்மையாக இருக்கும்.

எண்ணய் பிசுபிசுப்பான கூந்தலுக்கு :

சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

இளநரை நீங்க :

நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.

நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.

கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.

பொடுகு நீங்க :

வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

வேப்பம்பூ 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

முடி உதிர்தல் பிரச்சனையா?

வெந்தயத்தை ஊறவைத்து மறு நாள் அதனை அரைத்து, தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தலையை நன்றாக தேய்த்து அலச வேண்டும்.

ஷாம்பு, சீகைக்காய் தேவையில்லை. ஏனெனில் இதுவே நுரையை தரும். அழுக்குகளை நீக்கிவிடும். 15 நாட்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்தால், தலை முடி செழித்து வளரும்

English summary

Beauty tips to grow hair longer

Beauty tips to grow hair longer
Story first published: Saturday, July 2, 2016, 13:12 [IST]
Desktop Bottom Promotion