For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீரைக்காரி மகளாக பிறந்ததற்கு எச்.ஐ.வி பரிசா? - My Story #277

கீரைக்காரி மகளாக பிறந்ததற்கு எச்.ஐ.வி பரிசா? - My Story #277

By Staff
|

நான் என் வாழ்க்கையில பெரிசா எந்த சந்தோசமும் அனுபவிச்சது இல்ல. நான் சொல்ற அந்த பெரிய சந்தோஷம் எல்லாம் உங்க வாழ்க்கையில நீங்க அனுதினமும் அனுபவிக்கிற, இல்ல ரொம்ப சின்ன விஷயமானது தான்.

நான் தீபாவளி, பொங்கலுக்கு புது துணி போட்டு கொண்டாடினது இல்ல., அஞ்சாம் வகுப்புக்கு மேல நான் படிக்கல, நான் பார்த்த சினிமா எல்லாம் என் பிரெண்ட்ஸ் வீட்டு டிவியில மட்டும் தான்.

ஒரு நாள்..., பழைய ரேடியோ ஒன்னு யாரோ கொடுத்தா அம்மா கொண்டுட்டு வந்தா.. அதுல தினமும் பாட்டு கேட்பேன். அதுதான் நான் வாழ்க்கையில, சுதந்திரமா எனக்கானதுன்னு பயன்படுத்தி ரசிச்ச ஒன்னே ஒன்னு.

என்ன எப்படியாவது ஒருத்தன் கையில ஒப்படைச்சுடனும்ங்கிறது என் அம்மாவோட ஆசை. எங்க வீட்டுல ஆம்பளைங்க தங்கினது இல்ல. தங்கினதுன்னா அதிக ஆயுளோட உயிர் வாழ்ந்தது இல்ல.

நான் எங்க தாத்தாவ பார்த்தது இல்ல. எங்க அப்பாவும் எனக்கு பெரிசா விவரம் தெரியிற வயசு வரதுக்கு முன்னவே இறந்துட்டாரு. என்ன வளர்த்தது என் பாட்டியும், அம்மாவும் தான். இப்போ பாட்டியும் இல்ல. நானும் அம்மாவும் மட்டும் தான் என் வாழ்க்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீரை!

கீரை!

எங்க தொழில் கீரை விக்கிறது. காலையில நாலஞ்சு மணிக்கு அம்மா எழுந்து நடக்க ஆரம்பிச்சா.. உட்கார மதியம் மூணு நாலு மணியாகும். பெரும்பாலும் எங்க வீட்டு உணவுல கீரை இருக்கும். அதுனால தான் என்னவோ இந்த வறுமையிலும் நாங்க கொஞ்சம் ஆரோக்கியமா இருக்கோம்ன்னு நினைக்கிறேன். எனக்கு எட்டு வயசு இருக்கும் போதே அப்பா இறந்துட்டார்ன்னு அம்மா சொல்லுவாங்க.

Image Source: rajeshcs73 /Blogspot

அஞ்சாவது!

அஞ்சாவது!

5வது வரைக்கும் படிச்சதே அரசு பள்ளியில தான். ஃபீஸ் கட்ட தேவை இல்ல, சத்துணவு போட்டுடுவாங்க. பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கலாம் தான். நோட்டு புஸ்தகம் வாங்க கூட இலவசமா கிடைச்சிடும். ஆனால், எங்க வீட்டு வறுமையில அந்த ரெண்டு வேலை சோறு சாப்பிடணும்னா என்னோட உதவியும் தேவைப்பட்டிச்சு. தெரிஞ்சவங்க வீட்டுல சின்ன, சின்ன வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு இருந்தேன்.

ரெண்டு வருஷம்!

ரெண்டு வருஷம்!

எனக்கு 16 வயசு இருக்கும் போதே கல்யாணம் பண்ணி வைக்க அம்மா முடிவு பண்ணாங்க. ஆனா, அப்போ நான் வேலை பண்ணிட்டு வந்த வீட்டுக்கார அம்மா தான். இந்த வயசுல கல்யாணம் பண்ணிக்க கூடாது, இது சட்டப்படி குற்றம்ன்னு ஏதேதோ சொல்ல, அம்மா பயந்து ரெண்டு வருஷம் கல்யாணத்தை தள்ளிப் போட்டுடுச்சு. அந்த ரெண்டு வருஷமும்... எங்க அம்மா அளவுக்கு அரசாங்கத்த யாரும் திட்டியிருக்க மாட்டாங்கன்னு நான் அப்பப்போ நினைச்சுப்பேன்.

தூரத்து சொந்தம்!

தூரத்து சொந்தம்!

ரெண்டு வருஷம் போச்சு. ஒரு வெளியூர் மாப்புள, எங்க அம்மா சைடு தூரத்து சொந்தம். ரொம்ப வருஷம் பெரிசா பேச்சு வார்த்தை இல்லாம இருந்தது. எங்க கல்யாணம் மூலமா மறுபடியும் சொந்தம் ஒன்னு சேர்ந்திருக்குன்னு அம்மா பெருமையா சொல்லிக்கும். எனக்குன்னு வருங்கால புருஷன் மேல பெரிசா எந்த ஆசையும் இல்ல.

எங்க தாத்தா, அப்பா மாதிரி குடிகாரனா இல்லாமா கொஞ்சம் நீடிச்ச ஆயுளோட இருக்கனும். எனக்காக இல்லாட்டியும்.. எனக்கு பொறக்க போற குழந்தைகளுக்காக. அப்பா இல்லாத குழந்தைங்க.. முக்கியம் பெண் குழந்தைங்க இந்த சமூகத்துல வளரது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கும், என் அம்மாவுக்கும் தான் தெரியும்.

குடிப்பீங்களா?

குடிப்பீங்களா?

நிச்சயம் பண்ணப்போ... அவரும் நானும் அஞ்சு நிமிஷம் பேசிக்கிட்டோம். அப்ப நான் அவருகிட்ட பேசுனோ ஒரே வார்த்தை இதுதான்.. "குடிப்பீங்களா?". "இல்லம்மா அந்த பழக்கமே இல்ல"ன்னு சொன்னாரு. நம்புன்னேன். அஞ்சாவது படிச்ச பொண்ணுக்கு எம்புட்டு அறிவு இருக்குமோ அந்த அறிவு கொண்டு நம்பிக்கை வெச்சேன் அவரு மேல. நிச்சயம் முடிஞ்ச அடுத்த மாசமே எங்க குலதெய்வ கோவில்ல வெச்சு கல்யாணம்.

வீரியம்!

வீரியம்!

முதல் ராத்திரியில இருந்தே தன்னோட வீரியத்த காமிக்க ஆரம்பிச்சாரு அந்த மனுஷன். ஏற்கனவே அம்மா, தெரிஞ்ச அக்காங்க எல்லாம் சொன்னாங்க.. ஆம்பளைங்கன்னா அப்படி தான் நாமதான் அனுசரிச்சு போகணும்ன்னு. ஆனா, அந்த விஷயம் அவ்வளவு வலியா இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கல. சில சமயம் நான் அழுததும் உண்டு. ஆனா, அவருக்கு என் அழுகை எல்லாம் ஒரு பொருட்டாவே இல்ல.

முதல் கர்ப்பம்!

முதல் கர்ப்பம்!

கல்யாணம் ஆகி ஒரு ஆறு மாசம் ஆகியிருக்கும். முதல் முறையா கர்ப்பமானேன். எல்லாருக்கும் சந்தோஷம். ஆனால், நாலாவது மாசமே அந்த கரு கலைஞ்சு போச்சு. அந்த மனுஷன் ஏற்படுத்துனத விட உடல் அளவுல, மனசு அளவுல அது பெரிய வலி.

கொஞ்ச நாள் என் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா போச்சு. அவருக்கும் அந்த கஷ்டம் இருந்துச்சு. என்ன பண்றது இந்த ஊருல கல்யாணம் ஆனா.., நல்லா இருக்கியான்னு கேக்குற கூட்டத்தை விட, கர்ப்பமா இருக்கியான்னு கேட்கிற கூட்டம் தான் அதிகம். இதுல ஆம்பளைங்கள என்னன்னு தப்பு சொல்றது.

வேற வாய்ப்பு!

வேற வாய்ப்பு!

அப்பறம் ஒரு வருஷம் நான் எங்க அம்மா வீட்டுல தான் இருந்தேன். அடிக்கடி உடம்பு கொஞ்சம் சரியில்லாம போக.... அவரும் சரின்னு ஒத்துக்கிட்டாரு. அப்பத்தான் அவரு மேல கொஞ்சம் மதிப்பு இருந்துச்சு. பரவாயில்ல... மனுஷனுக்கு நம்ம மேல அக்கறையும் இருக்குன்னு நெனச்சேன். ஆனால், அது அக்கறை இல்ல. அவருக்கு வேற ஒரு வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு நான் இடைஞ்சலா இருப்பேன்னு என்ன வீட்டுக்கு கூப்பிடல அவ்வளவு தான்.

மீண்டும் கர்ப்பம்!

மீண்டும் கர்ப்பம்!

ஒன்றரை வருஷம் இருக்கும்.. திரும்ப கர்ப்பமானேன். ஆனால், அவரோட உடம்புல ஏதோ கோளாறு போல இருந்துச்சு. திடீர்னு மனுஷன் உடம்பு குறைஞ்சு ஒல்லியா ஆயிட்டாரு. அடிக்கடி உடம்பு முடியாம போயிடும். நான் நாலு மாச கர்ப்பமா இருந்த அப்பவே அவரு இறந்துட்டாரு.

என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு ஒண்ணுமே தெரியில. அந்த ஊருல ஏதேதோ கிராமத்து மருத்துவம் தான் பார்த்தாங்க எதுவும் சரிப்பட்டு வராம இறந்துட்டாரு. ஆனால், அவருக்கு எச்.ஐ.வி இருந்திருக்கு. அதனால தான் அவரு இறந்தார்ன்னு பின்ன தான் தெரிஞ்சது.

எச்.ஐ.வி

எச்.ஐ.வி

ஏன்னா எனக்கும், என் வயித்துல வளர்ந்துட்டு வர குழந்தைக்கும் கூட எச்.ஐ.வி இருக்குன்னு டாக்டரம்மா சொன்னப்ப தான் அவரு மூலமா வந்திருக்கலாம்ன்னு தெரிஞ்சது. குழந்தை இந்த நோயோட பிறக்க வேணாம்.. அழிச்சிடுவோம்னு சொல்லிட்டாரு. அழிச்சுட்டோம். எங்க பாட்டி, அம்மாவுக்கு வீட்டுல தான் ஆம்பளை தங்கள.. எனக்கு வயித்துல கூட தங்கள... அப்பறம் அந்த நோயாட போராடி வாழ ஆரம்பிச்சேன்.

நொந்துக்க தானே முடியும்!

நொந்துக்க தானே முடியும்!

ஒருவேளை கீரைக்கார அம்மாவுக்கு பொறந்ததால தான் இந்த நிலைமையான்னு யோசிப்பேன்... நான் அம்மாவ தப்பு சொல்லல... அவங்களுக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு தான் மனசுல வைராக்கியம் இருந்துச்சு. ஆனா, எப்படிபட்டவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தெரியாம போச்சே. அதனால சொன்னேன்.

ஒருவேளை கீரைக்கார அமம்வுக்கு மகளா பொறந்ததால தான் இந்த எச்.ஐ.வி எனக்கு வந்திடுச்சோன்னு மனசுல ஒரு கவலை இருந்துச்சு. செத்துடுவோம்ன்னு தெரிஞ்சுட்டா எல்லார் மேலையும் கோச்சுக்க தானே தோணும்.

-- பத்து வருடமாக எச்.ஐ.வி-யுடன் போராடி வாழ்ந்து வந்த கீரைக்கார அம்மாவின் மகள்... இன்று உயிருடன் இல்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Never Done Anything Wrong in My Whole Life. But I Got HIV as a Present.

Real Life Story: I Never Done Anything Wrong in My Whole Life. But I Got HIV as a Present.
Desktop Bottom Promotion