For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தோழியால் சிதைந்து போன திருமண வாழ்க்கை! my story #154

  By Staff
  |

  உடன் பழகிய நண்பர்களால் தான் எங்கள் வாழ்க்கையின் பிரச்சனை திசை திரும்பி விடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சில மாற்றங்கள் நம் வாழ்க்கையையே திசை மாற்றிவிடும் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

  நெருங்கிப் பழகிய நம்மைப் பற்றி முழுவதும் அறிந்து கொண்டு நம்மோடு நிழலாக தொடர்ந்து நம் கழுத்தையே அறுத்த ஓர் தோழியைப் பற்றிய கதை தான் இது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் கிடையாது. அப்பா,அம்மா நானும் தங்கையும் இருக்கிறோம். அப்பாவுக்கு தனியார் நிறுவனத்தில் க்ளர்க் வேலை அம்மா தையல் கடை நடத்தி வருகிறார்.

  தினம் சாப்பாட்டிற்கும் அன்றாட தேவைகளுக்குமே எங்கள் அம்மா அப்பாவின் வருமானம் தீர்ந்து பிறரிடம் கையேந்தும் அளவிற்கான மிகவும் இக்கட்டான கால கட்டம். இந்நிலையில் என்னையும் என் தங்கையையும் மிகவும் சிரமப்பட்டே படிக்க வைத்தார்கள். ஐந்தாம் வகுப்பு வரை வெளியில் படிக்க வைத்து விட்டு ஆறாம் வகுப்பில் எங்கள் பகுதியில் இருந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார்கள். அப்போது உயரத்தின் படி உட்கார வைக்கப்பட்ட போது என் அருகில் உட்கார வந்தவள் தான் ராதிகா!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தோழிகள் :

  தோழிகள் :

  எங்கு சென்றாலும் எப்போதுமே நானும் ராதிகாவும் நானும் ஒன்றாகவே சுத்துவோம், படிப்பதிலும் நாங்கள் கெட்டிக்காரிகள் தான். பன்னிரெண்டாம் வகுப்பு வரை இந்த நட்பு தொடர்ந்தது அதன் பிறகு கல்லூரி அவள் சேருகிறாள் என்பதற்காக நானும் அதே கல்லூரியில் சேர வேண்டும் என்று அடம் பிடித்தேன்.

  ஆனால் அங்கு கல்லூரிக்கட்டணம் அதிகம் அதோடு தினமும் போய் வர பஸ் சார்ஜும் அதிகமாகும் என்று எங்கள் வீட்டில் ஒப்புக் கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்தில் ராதிகா தன் வீட்டினரிடம் பேசி அவள் சேர்ந்திருந்த கல்லூரியிலிருந்து விலகி நான் சேர்ந்த கல்லூரியில் வந்து சேர்ந்து கொண்டாள்.

  முதல் காதல் :

  முதல் காதல் :

  கிட்டதட்ட என் உடன் பிறந்தவளாகவே அவள் இருந்தால் என்னுடைய நிறை குறை எல்லாமே அவளுக்கு அத்துபடி, எல்லாரும் அவளை என்னுடைய நிழல் என்று சொல்வார்கள்.

  கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, கல்லூரி கட்டணத்திற்காக நான் பகுதி நேரமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். டியூசன் சென்ட்டரில் வேலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு எடுக்க வேண்டும். அங்கே பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஏதோ ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் ஆனந்த் க்ளாஸ் எடுக்க வருவான். அங்கே பழக்கம் ஏற்பட்டது.

  காதலை யாரிடம் சொல்ல :

  காதலை யாரிடம் சொல்ல :

  பாடம் சம்மந்தமாக பேச ஆரம்பித்து, கல்லூரி விவரங்கள் மேற்படிப்பு வேலை போன்றவற்றை பகிர்ந்து நானும் ஆனந்தும் நல்ல நண்பர்களானோம். ஒரு கட்டத்தில் எங்கள் இருவருக்குள்ளும் காதல் உணர்வு மேலோங்கியிருப்பதை உணர முடிந்தது.

  ஏற்கனவே இந்த ஆனந்த் பற்றி ராதிகாவிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். அன்றைக்கும் அப்படித்தான் வழக்கமாக பேசுவது போல பேச்சை ஆரம்பித்து ஒரு வேல அவன லவ் பண்றேனோன்னு தோணுது என்று சொன்னேன். லவ் பண்றியா என்று அதிர்ச்சியுடன் கேட்டவள் லவ் பண்றன்னா போய் அவண்ட்ட நேரா சொல்ல வேண்டியது தான என்று தூபம் போட்டாள்.

  காதலிக்கிறேன் :

  காதலிக்கிறேன் :

  எனக்கு தைரியத்தை கொடுத்து, இதுக்கெல்லாம் பயப்படலாமா, உங்களுக்கும் ஒ.கே.,னா சொல்லுங்க நான் ஒண்ணும் உங்கள வற்புறுத்தலன்னு தைரியமா சொல்லு. இல்லனா எப்பவும் போல பிரண்ட்ஸா இருக்க வேண்டியது தானா?

  அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது. சரி ஒரு முறை என் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த போகிறேன் இதில் என்ன தவறு என்று மனதில் என்னை தேற்றிக் கொண்டு அன்று வழக்கம் போல டியூசன் வகுப்பிற்கு சென்றேன். வகுப்பு எல்லாம் முடிந்து செண்ட்டரில் இருந்து கிளம்பும் போது ஆனந்திடம் சென்று என் காதலை தெரிவித்தேன்.

  சம்மதமா?

  சம்மதமா?

  சொன்னதும் சுற்றும் முற்றும் பார்த்தான். என்னங்க இப்டி வந்து..... நீங்க இன்னும் நிறைய படிக்கணும், இப்போதான காலேஜ் சேர்ந்திருக்கீங்க அதுக்குள்ள லவ் எல்லாம் வேண்டாம். லைஃப்ல ஒரு ஸ்டேஜ் வந்ததுக்கு அப்பறம் இந்த காதல் கீதல் எல்லாம் வச்சுக்கலாம் என்று சிரித்துக் கொண்டே அட்வைஸ் கொடுத்தார்.

  அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சம்மதமா என்று மீண்டுமொருமுறை கேட்டேன்.

  என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு யோசிச்சு சொல்றேன் என்று சொல்லிவிட்டார்.

   என்ன முடிவு :

  என்ன முடிவு :

  அதன் பிறகு தினமும் சந்தித்துக் கொண்டாலும் அதைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. ஒரு வழியாக மூன்று மாதங்கள் கழித்து என்னுடைய போனுக்கு காதலுக்கு சம்மதிப்பதாகவும் இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் வருவேன் என்றும் கிஸ்ஸிங் ஸ்மைலியுடன் அனுப்பியிருந்தார்.

  அத்தனை சந்தோஷம். பெரும் பூரிப்புடன் ராதிகாவுடன் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன்.

  லவ் லைஃப் :

  லவ் லைஃப் :

  அதன் பிறகு நானும் ஆனந்தும் சேர்ந்து பல இடங்களுக்கு சுற்ற ஆரம்பித்தோம். இந்த கால கட்டத்தில் ராதிகாவுடன் செலவழிக்ககூடிய நேரம் வெகுவாக குறைந்தது என்றே சொல்ல வேண்டும். சில நேரங்களில் இதைச் சுட்டிகாட்டி என்னிடம் சண்டை பிடித்திருக்கிறாள்.

  வீட்டில் கல்லூரிக்கு எஸ்கர்ஷன் போகிறோம், ஐவி போகிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி விட்டு ஆனந்துடன் வெளியூர்களுக்கு சென்றுவந்தேன். இதன் போதெல்லாம் எங்களுக்கு உதவியது, என் வீட்டினருக்கு சந்தேகம் வராத படி அவ்வப்போது போன் செய்து தகவல்களை தருவது எல்லாமே ராதிகா தான்.

  திருமணத்தில் :

  திருமணத்தில் :

  என்னை விட ஐந்து வயது மூத்தவன் ஆனந்த். இரண்டு வருட காதலுக்குப் பின் அவன் வீட்டில் திருமணப் பேச்சு எடுத்திருக்கிறார்கள். இவன் எங்கள் காதல் விவகாரத்தைச் சொல்ல வீட்டில் பெரிய கலவரமே வெடித்திருக்கிறது. சமாதானம் பேச என்னையும் ஒரு முறை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

  போனதும் அவர்கள் கேட்ட முதல் வார்த்தை என்ன ஆளுங்கம்மா நீங்க என்பது தான். சொன்னேன்..... என்னைத் தனியாக அவனின் அம்மா சாமியறைக்கு அழைத்துச் சென்றார்.

  தாலிய பறிச்சிறாதம்மா :

  தாலிய பறிச்சிறாதம்மா :

  சமூகத்துல நாங்க அந்தஸ்த்தான குடும்பமா இருக்கோம். சாதி மாறி கல்யாணம் பண்ணா எங்க குடும்பத்த மதிக்கவே மாட்டாங்க எங்க மானமே போய்டும். என் வீட்டுக்காரர் உயிரையே விட்ருவாறு. சின்னப் பசங்க தெரியாம பழகிட்டிங்கன்னு நினச்சுக்கோங்க ஆனா இது வாழ்க்க முழுக்க சரி வராது.

  இருக்குறது ஒத்தப் பையன். அவனையும் வேற சாதிக்காரிக்கு கட்டி கொடுத்துட்டு அனாதைய நிக்க எங்கள்ட்ட தெம்பு இல்லமா. எங்க உயிரையே உன் கைல தான் இருக்கு என்று அழுது என் காலில் விழுந்துவிட்டார் ஆனந்தின் அம்மா. பின் தன் தாலியை காண்பித்து இதுல சத்தியம் பண்ணு கல்யாணத்துல எந்தப் பிரச்சனையும் பண்ணமாட்டேன்னு சொல்லு என் தாலிய பறிச்சிறாத என்று சத்தியமும் வாங்கிக் கொண்டார்.

  எனக்கு இதில் உடன்பாடில்லை :

  எனக்கு இதில் உடன்பாடில்லை :

  வெளியில் வந்தோம். அம்மா உள்ளே எதுவும் நடக்காதது போல பேச ஆரம்பித்தார் சூடான டீ கொடுத்தார். ஆனந்தின் அப்பா பேச ஆரம்பித்தார் என்னம்மா படிச்சிருக்க, நீ லவ் பண்றது உங்க வீட்ல தெரியுமா?

  ஆனந்தையும் அவனின் அம்மாவையும் பார்த்தேன்.

  இல்ல அங்கிள், ஆனந்த கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல என்று சொல்லி எழுந்து கொண்டேன். ஆனந்த் பதற்றத்துடன் ஏய்... லூசு என்னடி சொல்ற வீட்ல வர்ற வரைக்கும் நீ இல்லன்ன செத்துருவேன்னு சொன்ன என்று கத்தினான். நான் அவன் கையை விலகிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.

  ராதிகாவே துணை :

  ராதிகாவே துணை :

  இப்போது மீண்டும் எனக்கு ராதிகா. டியூசன் செண்ட்டரில் ஆனந்த் வருவான் என்பதால் அங்கு வேலைக்குச் செல்வதை நிறுத்தினேன். பைத்தியம் பிடித்தது என்னை தனிமைச் சிறையில் அடைத்துக் கொண்ட போதெல்லாம் என்னுடன் இருந்து என்னை அரவணைத்தவள் தோழி ராதிகா தான்.

  காதலித்து விட்டு திருமணத்திற்காக வீட்டில் பேச வரும் மனம் மாற என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அவன் என்னை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தான். தொடர்ந்து அவனைத் தவிர்த்துக் கொண்டே வந்ததால் வெறுத்துப் போய் இனி உன் சங்காத்தமே வேண்டாம் என்னை ஏமாற்றிவிட்டாய்.... பெண்கள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் நானா லவ் வந்து சொன்னேன் நீ தான லவ் பண்றேன்னு சொன்ன திட்டி விட்டு சென்றுவிட்டான்.

  எனக்கு கல்யாணம் :

  எனக்கு கல்யாணம் :

  படித்து முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். எனக்கு வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். நல்ல குடும்பம் படித்த மாப்பிள்ளை கை நிறைய சம்பளம் என அப்பா தேடித் தேடி ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினார்.

  தன் சக்திக்கு மீறி கடனை வாங்கி என் திருமணத்தை நடத்தி முடித்தார்.

  கணவன் :

  கணவன் :

  வழக்கமான மாமியார் வீடு தான். கணவரிடமும் அவ்வளவாக பழகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. மாப்பிள்ளை பார்த்த ஆறாம் மாதத்தில் எங்களுக்கு திருமணமாகியிருந்தது. இதில் அவரைப் பற்றியும் என்னைப் பற்றியும் என்ன தெரிந்து கொண்டிருக்க முடியும்.

  மற்றப்படி அவர் மீது காதல் எல்லாம் ஒன்றுமிருக்க வில்லை. திருமணம் செய்து கொண்டோம் அதனால் ஒரேவீட்டில் இருக்கிறோம் அவ்வளவு தான் என்ற ரீதியில் தான் எங்களது உறவு முறை இருந்தது.

  ராதிகாவுக்கு.... :

  ராதிகாவுக்கு.... :

  திருமணம் முடிந்த பின்பும் ராதிகாவுடனான நட்பு தொடரத் தான் செய்தது. நான் அடிக்கடி பேசும் நபர், அவளுடன் கோவிலுக்குச் செல்வது, மார்க்கெட்டுக்குச் செல்வது, துணியெடுக்கச் செல்வது என என் மாமியர் வீடும் அவளுக்கு பரிச்சையமானது.

  என் போன் லைன் கிடைக்காததால் கணவர் அவளது போனில் அழைத்து என்னிடம் பேசினார். கேலியாக ராதிகாவும் கணவரை வம்பிழுத்து பேச ஆரம்பித்தாள்.

  வாழ்க்கையே நாசம் :

  வாழ்க்கையே நாசம் :

  அதன் பின் தொடர்ந்து இருவருக்குள்ளும் நட்பு வளர்ந்திருக்கிறது. தினமும் சாட்டிங் தொடர இருவருக்கும் காதல். திருமணமானாலும் பட்டும் படாமால் ஓர் இயந்திர வாழ்க்கை நடத்துவது அவருக்கு பிடிக்கவில்லை போலும். துருதுருவென்று பேசிக் கொண்டு உரிமையுடன் சண்டை பிடித்து கோபித்து, குழந்தையைப் போல அடம் பிடிக்கும் ராதிகா அவருக்கு பிடித்துப் போய் விட்டது.

  சச்சரவு :

  சச்சரவு :

  ஒரு கட்டத்தில் அவரது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. வீட்டிற்கு வரும் நேரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டார். மிகவும் தாமதமாக வருவது, காலையில் சீக்கிரம் கிளம்பிச் செல்வது என தனக்கான ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டார்.

  ஒரு கட்டத்தில் என்னை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்து, அதை எதிர்ப்பார்த்து என்னை திட்ட ஆரம்பித்தார். காரணமேயில்லாமல் அடிக்க ஆரம்பித்தார். சந்தேகப்பட்டு என்னை தினமும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். இந்த காதல் விவகாரம் கூட எனக்கு பின்னாளில் தான் தெரிய வந்தது.

  காட்டு மிராண்டி :

  காட்டு மிராண்டி :

  என்ன ஏதேன்று எனக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு மூன்று முறை வீட்டுப் பெரியவர்கள் வந்து சமாதனம் பேசிவிட்டுச் சென்றார்கள்.

  ஒரு நாள் இருவருக்கும் நடந்த சண்டையில் என்னுடைய டிகிரி சர்டிஃபிக்கேட்டை கிழித்துப் போட இருவருக்கும் சண்டை பெரிதாக வெடித்தது. தலையில் ரத்தக்காயத்துடன் என் அம்மா வீட்டிற்குச் சென்று இனிமேல் இவனுடன் வாழமாட்டேன் காட்டுமிராண்டியாக நடந்து கொள்கிறான் டிகிரி சர்டிஃபிக்கேட்டையும் கிழித்து விட்டான் என்று சொன்னேன்.

  விவாகரத்து :

  விவாகரத்து :

  தொடர்ந்து அம்மா வீட்டிலேயே வசிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும் பெரிய பொண்ணு வாழாவெட்டியா வீட்ல உக்காந்திருக்கான்னு தெரிஞ்சா யாரு பொண்ணு எடுப்பா உன்னால பாரு சின்னவ வாழ்க்கையும் பாழாகுது என்று பேச ஆரம்பித்தார்கள்.

  மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லலாம் என்றால் வீடு பூட்டிக் கிடந்தது. போன மாசமே வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாரேமா என்றார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள். மாமியார் வீட்டிற்குச் சென்றால் நீயாச்சும் உன் புருஷனாச்சும் எங்களுக்கு தெரியாது என்று கைவிரித்து விட்டார்கள். கணவருக்கு போன் செய்ய முதல் ரிங்கிலேயே எடுத்தார்.

  நாளைக்கு அனுப்புறதுல சைன் போட்டு அனுப்பு.

   என் வாழ்க்கை :

  என் வாழ்க்கை :

  என்ன அனுப்ப போறீங்க.... என் சைன் போடணுமா? பாஸ்போர்ட் ஏதும்... ரேசன் கார்டு என்று புரியாமல் விழிக்க போன் கட் செய்யப்பட்டிருந்தது.

  மறுநாள் என் பெயரில் ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்தது. அப்பிடி என்ன அனுப்பியிருப்பாரு என்று ஆசையுடன் வாங்கினாள் அவர் எனக்கு அனுப்பியது விவாகரத்து பத்திரம். ஒரு கணம் திக்கென்றது. எனக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு இருப்பதால் விவாகரத்து கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  மீண்டும் அவள் :

  மீண்டும் அவள் :

  கணவரிடமும் ,மாமியார் குடும்பத்தினரிடமும் பேச பல முறை முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. கோர்ட்டுக்குச் சென்று ஹியரிங் அட்டெண்ட் செய்தோம். நான் முதலில் சென்று காத்திருக்க தாமதமாக கணவர் வந்தார்.

  அவருடன் கை கோர்த்துக் கொண்டு ராதிகா வந்து கொண்டிருக்கிறாள். பார்ப்பது கனவா? நனவா என்றே தெரியவில்லை. என்னைப்பார்ததும் சற்று கையை எடுக்க முயல கணவர் அவளை இறுக்கப் பிடித்துக் கொண்டார்.

  துணை தேவை :

  துணை தேவை :

  அப்போது தான்.... ராதிகா சில மாதங்களாக என்னுடன் தொடர்பில் இல்லை என்பதை உணர முடிந்தது. கணவருடன் சண்டையிட்டு அம்மா வீட்டில் இருக்கும் போதெல்லாம், என்னால் தங்கைக்கு திருமணமாகாமல் இருக்கிறது என்று அப்பா திட்டும் போதெல்லாம், இந்நேரம் ராதிகா இருந்திருந்தா நல்லா இருக்கும். கண்ண மூடிட்டு அவ மடில விழுந்து அழுதா போதும் எல்லாம் கரஞ்சு போய்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

  அவளை அங்கே அதுவும் என் கணவருடன் பார்த்த அதிர்ச்சியில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை.

  சம்மதமா? :

  சம்மதமா? :

  ராதிகா.... என்னடி இது என்று முடிப்பதற்குள். என்னை கடந்து சென்று விட்டார்கள். நேராக அவர்கள் வக்கீலை சந்தித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் தான் விஷயமே புரிந்தது. விளையாட்டாய் பேச ஆரம்பித்தவர்களுக்கு காதலாகியிருக்கிறது. இப்போது திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கிறார்கள்.

  முதல் மனைவி நானிருக்கிறேனே? எப்படி முடியும், அதனால் தான் என்னை விவாகரத்துச் செய்ய கல்லூரி படிக்கும் போது டியூசனில் பழகிய ஆனந்துடனான காதலை கணவரிடம் போட்டுக் கொடுத்திருக்கிறாள். நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோவும் கொடுத்திருக்கிறாள். இது போதாதா? கணவருக்கு உடனே விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பி விட்டார்.

  துரோகம் :

  துரோகம் :

  கணவரை விட்டு பிரிந்ததை விட, ஆனந்தை விட்டு பிரிந்ததை விட ராதிகாவின் துரோகம் தான் பெரும் வலியைக் கொடுத்தது. என்னால் ஏன் தங்கை வாழ்க்கை கெட வேண்டும் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறி இப்போது தனியாக இருக்கிறேன், வேலைக்குச் செல்லலாம் என்றால் டிகிரி சர்டிஃபிக்கேட் வேண்டுமே.... கல்லூரியில் கேட்டால் அங்கே கேட்க வேண்டும், கையெழுத்து வாங்க வேண்டும்.

  உரிய காரணத்துடன் கடிதம் எழுதி கொடுங்கள், அதை உங்கள் துறைத்தலைவரின் கையெழுத்துப் பெற்று இங்கே கொடுத்தால் நாங்கள் யுனிவர்சிடிக்கு அனுப்புவோம் என்று பெரிய ரயில் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Friend collapse my marriage life

  Friend collapse my marriage life
  Story first published: Wednesday, January 24, 2018, 16:54 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more