வீட்டினரிடமிருந்து காதலனைக் காப்பாற்ற நினைத்த காதலிக்கு நேர்ந்த கதி # My Story 126

Posted By:
Subscribe to Boldsky

கிடைக்கின்ற எல்லா மகிழ்ச்சியும் அவளுக்கானதாக இருக்கும். என்னை மீட்டெடுத்தவள், எனக்கான வாழ்க்கையில் புது அத்தியாயத்தை துவக்கி வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவள் செல்வி! என் காதலி.... என் ஆதர்சம்.... என் ஜீவன் எல்லாமே அவள் தான்.

எங்கள் ஊரிலேயே முதன் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைத்தவன் நான் தான். இன்று கை நிறைய சம்பளத்துடன் அரசங்கா உத்தியோகத்திலிருந்து ஓய்வுப் பெற்று வாழ்க்கையில் அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டு இளைப்பாரும் பருவம்.

எனக்கான எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு இரண்டு மகன்களும் வெளியூர்களில் செட்டிலாகிட நானும் மனைவியும் ஊரில் என்னுடைய பென்ஷன் பணத்தில் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வணங்கும் தெய்வம் :

வணங்கும் தெய்வம் :

செல்வி என்னுடைய காதலி என் முதல் காதலி என்னுடைய முதல் குழந்தை பார்த்துமே அள்ளியெடுத்து கொஞ்சத்தூண்டும் குழந்தை முகம் அவளுக்கு. பியூசி முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்கு பணத்தை திரட்டு ஊரில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரிடத்திலும் கடன் கேட்டு அழைந்து கொண்டிருந்தேன்.

பத்து... இருபது என்று தேற்றி எழுபது ரூபாயை தேற்றிவிட்டிருந்தேன். அப்போது என் கல்லூரிக்கட்டணம் நூற்றைம்பது ரூபாய். நாளை கடைசி நாளை வைத்துக் கொண்டு இன்றைக்கு என்ன செய்வேன் என்று தவித்துக் கொண்டிருந்தபோது தான் நான் வணங்கும் தெய்வமாய் வந்து நின்றால் என் செல்வி!

செல்வி :

செல்வி :

நான் பியூசி படிக்கும் போது அவள் களத்து வேளைக்கு வரும் ஆட்களுக்கு தினக்கூலி கொடுக்க கணக்குப்பிளையுடன் வருவாள். அவர் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது அருகிலிருக்கும் தென்னந்தோப்பில் ஊஞ்சல் விளையாடுவது அவளது பொழுது போக்கு.

நானே பல முறை அவளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்திருக்கிறேன்.நுங்குப் பழம் வேண்டுமென்று கேட்க, பக்கத்து தோட்டத்திலிருந்து எடுத்து வந்து சுட்டுக் கொடுத்திருக்கிறேன்.

ராஜகுமாரி வாழ்க்கை. தினமும் சுடுசோறு... விதவிதமா டிரஸ்ஸு கூரை வீடு வாழ்ந்த அந்தப்புள்ளக்கணக்கா வாழணும்யா என்று ஊரார் சொல்வதை கேட்டு கேட்டு பழக்கப்பட்டவன் நான்.

வரதட்சணை :

வரதட்சணை :

எப்போதும் முதலாளியம்மா என்றும் அம்மா... தாயீ.... என்று தான் அவளை அழைப்போம். அவள் வருகிறாள் என்றாலே களத்தில் வேலை செய்கிறவர்கள் வணக்கம் வைக்க அருகில் வந்து விடுவார்கள். அரை மனிதனாய் குனிந்து வணக்கம் வைக்க இவள் அதனை ஏற்றுக் கொண்டது போல ஒவ்வொருவருக்கும் பதில் வணக்கம் வைப்பாள்.

எங்களுக்கு அதுவே பெரும் கௌரவமாய் இருக்கும்.

ஏதோ காலேஜுக்கு எல்லாம் போகப்போறியாம் ?காலேஜ் எப்டி இருக்கும் என்று ஆரம்பித்து அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.

நானோ நாளைக்கு 150 ரூபாயை தேற்ற வேண்டுமே என்கிற தவிப்பில் இருந்தேன். இனி யாரிடம் கேட்பது என்ற யோசனையில் செல்வி சொன்னதை கவனிக்கவில்லை.

என்ன சொல்றீங்கம்மா ? :

என்ன சொல்றீங்கம்மா ? :

என்ன யோசிக்கிற ? என்று உலுக்கியதும்... விவரித்தேன்.

என்னைய கட்டிக்கிட்டா எனக்கு தர்ற வரதட்சணைல நீ படிச்சுட்டே இருக்கலாமே என்று சொல்லிவிட்டு பின்னால் திரும்பிக் கொண்டாள்.

ஆச்சரியம் தாங்கவில்லை... என்ன சொன்னீங்கம்மா என்றேன்.

நான் உனக்கு அம்மாவா?

ஆமா.... நீங்க தான எங்களுக்கு முதலாளியம்மா எங்க தாத்தா முதற்கொண்டு உங்கடதான கூலியா வேலப்பாக்குறாங்க

முதலாளியம்மா எங்கம்மா தான். நானில்ல என்றாள் கோபமாக.

எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை ஆனா ஊர்ல இருக்குற பள்ளிக்கூடத்துல படிச்சா போதும்னு சொல்லிட்டாங்க. உன்ன மாதிரி நாங்க எல்லாம் வெளியூர் போய் படிக்க முடியுமா? அதான் படிச்ச உன்னைய நான் கட்டிக்கிறேன் என்றாள்.

அப்பாட்ட கேளு :

அப்பாட்ட கேளு :

சிரித்தேன்..

இல்லல்லம்மா இதெல்லாம்.

முறைப்புடன் அம்மான்னு சொல்லாத. நான் செல்வி செல்வின்னு கூப்டு.

பேரு சொல்லி கூப்ட வர்ல வேணும்னா பாப்பான்னு கூப்டவா என்றேன்.

கூப்ட்டுக்கோ என்றாள்.

இல்ல பாப்பா இது சரிப்பட்டு வராது. நீங்க எங்க இருக்கீங்க நாங்க எங்க இருக்கோம். நாங்க தலைமுறையா உங்ககிட்ட கூலி வேல பாக்குறவங்க திடீர்னு வந்து சம்மந்தம் பேசினா நல்லாயிருக்குமா? யாரு தான் ஒத்துப்பா என்று அவளுக்கு நிலமையை புரியவைக்க முயற்சித்தேன்.

அவளுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை அமைதியாக நின்றிருந்தாள். நடுவில் எங்கள் வீட்டு பொருளாதரத்தையும் அவள் வீட்டு பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு காண்பிக்க பேச்சுவாக்கில் என் கல்லூரி ஃபீஸ் கதையும் நுழைந்து விட்டது.

சாய்ந்தரம் வீட்டுக்கு வா.... அப்பாட்ட பணம் வாங்கித்தரேன். காலேஜ்ல போய் கட்டு என்று சொல்லி என் பதிலை எதிர்ப்பார்க்காமல் சென்று விட்டாள்.

தந்தையிடம் :

தந்தையிடம் :

இவள் சொன்னதை நம்பி செல்லலாமா வேண்டாமா? என்று தயக்கமாய் இருந்தது. ஊரில் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் பணம் கேட்டாயிற்று இனி அவரைத் தவிர வேறு வழியும் இல்லை. எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என்ற தயக்கத்துடன் அவர் வீட்டிற்கு நடந்தேன்.

வாசலில் நின்று கொண்டு ஐயா.... அழைத்தேன்.

கணக்குப்பிள்ளை வந்தார்.

உங்கப்பன்ட்ட கூலிய கொடுத்தாச்சுல்ல அப்பறமென்ன என்ன இந்தப்பக்கம்...

இல்லங்கையா பெரிய ஐய்யாவ பாக்கணும்.

வாசலுக்கு வந்தவள் :

வாசலுக்கு வந்தவள் :

***** திட்டினார். எங்கள் இருவருக்கும் பேச்சு தொடர்ந்து. அவர் என்னை விரட்ட நான் விடாப்பிடியாக அவரைப் பார்க்க வேண்டும் என்றேன். எங்கள் பேச்சு சத்தம் கேட்டு உள்ளிருந்து செல்வி வந்தாள்.

ஏய் வந்துட்டியா உள்ள வா என்று வாசலுக்கு இறங்கி என்னை உள்ளே வரச் சொல்லி அழைத்தாள். சின்னம்மா சின்னம்மா... என்று அந்த கணக்குப்பிள்ளை பதைபதைப்புடன் இறங்கி எனக்கும் அவளுக்கும் நடுவில் நின்று கொண்டு இவன் எல்லாம் வீட்டுக்குள்ள வரக்கூடாது அம்மாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும்.

நீங்க வர சொன்னீங்களாம்மா? தெரிஞ்சிருந்தா பின் பக்கம் கொட்டகையில உக்கார வச்சிருப்பேனே.. இவன் வந்து ஐய்யாவ பாக்கணும்னு சொன்னான் என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

கடனா கிடச்சா நல்லாயிருக்கும் :

கடனா கிடச்சா நல்லாயிருக்கும் :

உள்ளே சென்றவள் தந்தையை அழைத்து வந்தாள். திண்ணையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே எங்கள் வாக்குவாதத்தை நிறுத்தச் சொன்னார்.

என்னடா நீ தான் பட்டணத்துக்கு போய் படிக்கப் போறவனா?

ஆமாங்கையா....

படிச்சு என்னத்த கிழிக்கப் போற உங்கப்பனோட சேர்ந்து கூலிக்கு வந்தாளாவது நாலு காசு பாக்கலாம். என்று சொல்லி படிப்பை நிறுத்திடு என்று அறிவுரை வழங்கினார். அமைதியாக கேட்டுக் கொண்டேன்.

அவர் பேசி முடித்த பிறகு கல்லூரி ஃபீஸ் விவரத்தை விவரித்தேன். இதுக்குத்தான்.... சொன்னது அவ்வளவு பணத்துக்கு அடமானப்பத்திரம் இருக்கா? உங்கம்மா நகநட்டு எதாவது வச்சிருக்காளா? இல்ல மாடாவது இருக்கா? உன்னைய நம்பி எப்டி அவ்ளோ காச கொடுக்க...

அமைதியாக தலைகுனிந்து நின்றேன்.

செல்வி அவள் அப்பா காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.

சரிசரி... இவன் கேக்குறப் பணத்த கொடுத்துவிடு என்று கணக்குப்பிள்ளையிடம் பணித்தார். நோட்ல எழுதி வையா... கூலிக்காசு முடியிற வர தினமும் சாய்ந்திரம் தோட்ட வேலைக்கு வரட்டும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

கல்லூரி காலம் :

கல்லூரி காலம் :

ஊரின் முதல் பட்டதாரி என்ற பெருமை வாங்கித் தரப்போகும் பெருமையுடன் கல்லூரிக்குச் சென்று வர ஆரம்பித்தேன். மாலையில் தோட்டத்து வேலை என்று வெகு பரபரப்பாய் கழிந்தது. சில நேரங்களில் தோட்டத்திலேயே புத்தகங்களை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். முதலாளி வீட்டுத் தோட்டம் என்பதால் செல்வியும் அங்கு அடிக்கடி வருவாள்.

அவள் வருவதைப் பார்த்து பழக்க தோசத்தில் எழுந்து நிற்பது. அவ்வப்போது அம்மா என்று சொல்லி திட்டு வாங்குவது தொடரும்.

கடன் கேக்காம? உங்கப்பொண்ண கட்டிக் கொடுங்கன்னு கேட்டிருந்தா இந்நேரம் உனக்கு ரெண்டு வேல முடிஞ்சிருக்கும்.

செல்வி அப்டியெல்லாம் பேசாத.... நம்ம கல்யாணத்த எல்லாம் கனவுல கூட நினச்சுப் பாக்க முடியாது.

ஏன்? என்னைய புடிக்கலையா....

அப்டியில்ல...

பிடிச்சிருக்கா புடிக்கலையா? அதமட்டும் சொல்லு

புடிச்சிருக்கு.... உன்னைய எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனா நம்ம...

என்ன வேற வேற சாதியா?

அதுமட்டுமில்ல

பண்ணை வீட்ல உட்கார்ந்திருக்குற நீ எங்க? உங்க வீட்டுக்குள்ளக்கூட நுழைய முடியாம கொட்டகையால காத்துக்கிடக்குற நான் எங்க

சம்மதிக்காவிட்டாள் குதித்து விடுவேன் :

சம்மதிக்காவிட்டாள் குதித்து விடுவேன் :

அவ்வப்போது வருவாள்.... பேசுவாள் திருமணம் செய்து கொள்ளச் சொல்வாள் நான் பழைய பஞ்சாகத்தை பாடுவேன். இது எங்களுக்கு வழக்கமானது.

ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் எதிர்த்து அவளை திருமணம் செய்து கொண்டு விடலாமா என்றும் தோன்றியது. அதையும் மீறி எதோ ஒரு தயக்கம்.

அன்றும் அப்படித்தான் திருமணம் செய்துக் கொள் என்று வர்புறுத்தி சண்டை பிடித்தாள்.

நான் பதிலேதும் சொல்லாமல் விறகுகளை வெட்டிக் கொண்டிருந்தேன்.

இப்போன் நான் சொல்றத கேக்கள இந்த கிணத்துல குதிச்சிடுவேன் என்றாள்... நான் அவளை கவனிக்காமல் என் வேலையைத் தொடர்ந்தேன்.

காதலின் போதை :

காதலின் போதை :

தொப்பென்று சத்தம்.... சுற்றிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கிணற்றை நோக்கி ஓடி வருகிறார்கள். ஒரு கணம் எனக்கு மூச்சே நின்று விட்டது. எனக்காக நிஜமாலுமே கிணற்றில் விழுந்து விட்டாளா? என்று பதறியடித்துக் கொண்டு ஓடினேன்.

அதற்குள் நான்கைந்து பேர் கிணற்றில் குதித்து அவளை மீட்டு மேலே கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

அரை மயக்கத்தில் இருந்தாள். கட்டிலில் படுக்க வைத்து நானும் இன்னும் மூன்று பேரும் வைத்தியர் வீட்டிற்கு ஓடினோம்.

வழி நெடுகிலும் அவள் மீண்டு வந்தாள் போதும் அவள் என்ன சொன்னாலும் தலையாட்டிட வேண்டும் தெய்வமே இந்த உசரக்காப்பாத்து உனக்கு பூ மிதிக்கிறேன் மொட்டையடிச்சு காவடி தூக்குறேன் என்று வேண்டிக் கொண்டேன்.

 இவன் தான் :

இவன் தான் :

காப்பாற்றப்பட்டாள். அதன் பிறகு அடிக்கடி அவளை சந்திக்க முடியவில்லை. எப்போதாவது வருவாள். தூரமாக நின்று பார்த்துவிட்டு சென்றுவிடுவாள். எப்போதும் மணிக்கணக்காக என்னோடு உட்கார்ந்து சிரித்துப் பேசும் செல்விக்கு என்னாயிற்று என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே தோட்டத்திற்கு என்னருகில் வந்தாள்.

அப்டியே செத்துருன்னு விட்டுட்டல்ல....

ச்ச... ஏன் இப்டி எல்லாம் பேசுற நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு வைத்தியன் வீட்டுக்கு யாரு தூக்கிட்டுப் போனது ? உனக்கு சரியான என்ன எல்லாம் பண்றேன்னு வேண்டியிருக்கேன் தெரியுமா? என் வேண்டுதல் தான் உன்னைய காப்பாத்திருக்கு.

ஆமா... கிழிச்சது .

கோவப்படாத செல்வி. இப்போ உடம்பு எப்டி இருக்கு .... மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருந்தோம்.

என் காதலைச் சொன்னேன் :

என் காதலைச் சொன்னேன் :

நான் முடிவு பண்ணிட்டேன்.

என்னன்னு?

எப்போ நீ எனக்காக கிணத்துல குதிக்க துணிஞ்சியோ அப்பவே....

என்ன நீயும் போய் குதிக்க போறியா

இல்ல புள்ள... உன்னைய கட்டிக்கலாம்னு

நெஜமாவா? சத்தியமாவா சொல்ற.... என்று அவளால் அதை நம்பவே முடியவில்லை சரி எப்போ கட்டிப்ப எப்போ வீட்ல வந்து பேசுவ?

இல்ல வீட்ல எல்லாம் பேச வேண்டாம். நம்ம ஊர விட்டுப் போய்டலாம். இந்த ஊர விட்டு எங்கையாவது கண்காணாத இடத்துல போய் நிம்மதியா இருக்கலாம். வீட்ல பேசினா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க.

ஊர விட்டா.... என்று சற்று யோசித்தவள்... பின் சரி பண்ணிக்கலாம். எப்போ போலாம் என்றாள் ஆர்வத்துடன்.

ஊரை விட்டுப் போகிறோம் :

ஊரை விட்டுப் போகிறோம் :

ஊரில் என்னுடன் சுற்றும் நண்பர்களுக்கும் தகவல் சொல்லவில்லை. என் கல்லூரி நண்பர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கினேன்.

திட்டமிட்டபடி அவள் இரவு பூஜை பார்க்க முருகன் கோவிலுக்கு வர வேண்டும். அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் அவளை கடத்த வேண்டும். அவளே கோவில் வாசல் வழியாக வந்து படி வழியாக இறங்கி தெருப்பக்கம் இருக்கும் வாசலுக்கு வந்து விடுவாள். அங்கிருந்து செல்லவேண்டும் என்பது தான் திட்டம்.

நானும் நண்பர்களும் மாலையிலிருந்து அங்கு தான் சுற்றிக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு அருகில் மெஸ் நடத்துபவரிடம் விஷயத்தைச் சொல்லி ஒரு வீட்டையும் வாடகைக்கு கேட்டிருந்தோம். எல்லாம் தயார்

இப்படியாக முடிந்திருக்க கூடாது :

இப்படியாக முடிந்திருக்க கூடாது :

அன்று வெகுநேரம் காத்திருந்தும் வரவில்லை செல்வி.... நண்பர்கள் ஒவ்வொருவராக கிளம்ப நான் இரவு வெகு நேரம் காத்திருந்தேன். வெளிச்சம் வரும் வரையில் அதேயிடத்தில் நின்றிருந்தேன்.

அவள் வரவேயில்லை. இப்படி என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாளே என்று கோபம் ஒரு புறம் வந்தாலும் அங்கே அவளுக்கு என்ன சூழலோ என்று பரிதாபமாகவும் இருந்தது. மறு நாள் கல்லூரிக்குச் செல்லவில்லை. காலை ஏழு மணிக்கு வீட்டை நெருங்குகையில் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு கிளம்பியிருந்தார்கள்.

அழுது கொண்டே அப்படியே தூங்கிவிட்டேன்.

பாம்பு கடித்துச் சாவு :

பாம்பு கடித்துச் சாவு :

மதியம் அரக்கப்பறக்க அம்மா ஓடி வந்தாள். சின்னம்மா செத்துப் போச்சுடா.... என்று மாரில் அடித்துக் கொண்டு அழுதாள்.

அதிர்ந்து எழுந்தேன்.

என்னம்மா சொல்ற

செல்வியா?

என்ன பேருச்சொல்லி கூப்டுற அது நமக்கு சோறு போடுற சாமி.... இப்டி ஆயுச பறிச்சாட்டாளே அந்த ஆத்தா.... என்று அழ... அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர்.

தலை தெறிக்க ஓடினேன். வாசலில் அவள் பிணமாக படுத்திருந்தாள். சுற்றிலும் அவர்களின் உறவினர்கள் விழுந்து விழுந்து அழுகிறார்கள். அருகில் செல்லவா வேண்டாமா? செல்வி செல்வி..... என்று என் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. கடைசி நேரத்துல உசுருக்கு உசுறா நினச்சவளோட முகத்தக்கூட பாக்க முடியலையே இது என்ன பொறப்பு என்று என்னை நினைத்து வேதனையுடன் நொந்து கொண்டேன். இதுக்கு நான் பொறக்காமலேயே இருந்திருக்கலாமே....

காலையில வழக்கமா தோட்டத்துக்குப் போனா அங்க பாம்பு கடிச்சு மயக்கமாயிட்டா ரொம்ப நேரமா யாரும் பாக்காதனால காப்பத்தமுடியல புள்ளைய பொணமாத்தான் தூக்கியாந்தோம். அவளின் அம்மா ஒவ்வொரிடமும் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.

தோட்டத்தில் பாம்பா? :

தோட்டத்தில் பாம்பா? :

கடந்த இரண்டு ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளும் பாம்பு வந்ததில்லை. பாம்பு வரும் வழித்தடமும் அது கிடையாது. அதை விட செல்வியே இரண்டு முறை பாம்பு பிடித்திருக்கிறாள்.

இதெல்லாம் சரி, நேற்று இரவு அவள் முருகன் கோவிலுக்கு வந்திருக்க வேண்டுமே? கோவிலுக்கு வராமல் ஏன் தோட்டத்திற்கு.... ஒரு வேல என்னைய பாக்க போயிருப்பாளோ

அவள் உடலை பாடையில் ஏற்றினார்கள். எங்களை எல்லாம் விலக்கிவிட்டு அவளைக் கொண்டு சென்றார்கள். தூரத்திலிருந்து வணங்கியபடி அழுது கொண்டிருந்தார்கள் என்னுடன் இருந்தவர்கள்.

நடந்து கொண்டே அவள் முகத்தை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்று எட்டி எட்டிப் பார்த்தேன் முகமே தெரியவில்லை அவசர அவசரமாக எரிக்கப்பட்டாள் என் செல்வி.

அம்மா அப்பாவிற்கு கூலி வேலை பறிபோனது. எனக்கு கல்லூரிக் கட்டணமும் நின்றது.

 செல்வியானவள் :

செல்வியானவள் :

அங்கு வாழமுடியாமல் வேறு ஊருக்கு வந்தோம். ஒரு வேளை உணவிற்கே பயங்கர கஷ்டம். செல்வி ஆசைபட்டபடி நான் நன்றாக படிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டு படித்தேன். அரசாங்க வேலையில் இணைந்தேன். காலப்போக்கில் செல்வியை மறந்தும் போனேன். திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் ஆனார்கள்.

குடும்பத்துடன் குல தெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் என்று வேண்டிக்கொண்ட அம்மாவிற்காக நாங்கள் செல்வியோடு ஓடிப் போக திட்டமிட்டிருந்த முருகன் கோவிலுக்குச் சென்றோம். சிலர் அடையாளம் கண்டு கொண்டார்கள் நலம் விசாரித்தார்கள்.

செல்வியின் பேச்சும் வந்தது. அவள் பெயரைக் கேட்டதும் என் முகம் மாறுவதையும் என் உடல் நடுங்குவதையும் என் மனைவி கவனித்திருக்க வேண்டும்.

பாவம் சின்ன வயசு... அநியாயமா பாம்பு கடிச்சு செத்துப் போச்சு என்று மனைவியிடம் விளக்கினாள் அம்மா.

உறையவைத்த உண்மை :

உறையவைத்த உண்மை :

ம்ம்க்கும்... பாம்பெல்லாம் கடிச்சு சாவல... அப்பன்காரனே கொன்னுட்டான்.

ஒரு கணம் விக்கித்து நிமிர்ந்தேன்.

அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சியுடன் என்னங்க சொல்றீங்க என்று கேட்க எங்களை அழைத்துக் கொண்டு தனியாக தள்ளி நடந்தார். ஊர்லயே நிறைய பேருக்குத் தெரியாது. நீங்க வெளியூர்ல இருக்குறனால சொல்றேன்.

யாரோ கீழ் சாதி பையனோட அந்த புள்ளைக்கு காதலாம். அன்னக்கி நைட்டுக்கு வீட்ட விட்டு போகவே துணிஞ்சிட்டாலாம்.

நடு வழில புடிச்சு வீட்டுக்கு கூட்டிவந்துட்டாங்க. பெரியையா பயங்கரமா அடிச்சு யாரு அந்தப் பையன்னு கேட்டிருக்காங்க அவ வாயவே தொறக்கலயாம்... கொன்றுவோம்னு மிரட்டியிருக்காங்க எதுக்குமே அந்தப் புள்ள அசஞ்சு கொடுக்கல.

அப்பறம் வீட்டு மானம் போய்டும்னு அவங்க அம்மாவே அவ தூங்கியிருக்குறப்போ காதுல விஷத்த ஊத்தி கொன்றுக்கா.

செல்வி .... அழுத்த உச்சரித்து கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father Killed her daughter Because she loved a Lower caste guy

Father Killed her daughter Because she loved a Lower caste guy
Story first published: Tuesday, January 2, 2018, 15:13 [IST]